கசக்கி எறிந்த ஓவியம்!
நீ வரைந்த
கடற்கரை காட்சியில்
நம் காதலின்
சாட்சியாய் இருந்த
படகைக் காணோம்!
நாம் பேசிய
காதல் மொழி
கேட்க ஆர்வமாய்
துள்ளி வந்த
கடல் அலை காணோம்!
கடலை வண்டி
தள்ளிப் போகும்
வயசான கிழவர்
இல்லை...
அக்கம் பக்கம்
பார்த்துவிட்டு
முத்தமிடும்
உன் குறும்பில்
குங்குமமாய்ச் சிவக்கும்
என் நிலா முகம்
போனதெங்கே?
கடற்கரை கிணற்றில்
தண்ணீர் அள்ளிப் போகும்
பெண்களின் பார்வை படாது
என் முகம் மறைக்கும்
உன் உருவம்
கரைந்தது எப்படி?
அடிக்கடி என் பெயரை
உச்சரிக்கும் உதடுகள்
கடற்கரை மணலிலும்
எழுதிப் பார்த்த
அழகு மறைந்தது
எப்படி?
வசதியாக
இப்படிப் பல
நினைவுகள் மறைந்து
வரைந்த ஓவியம்
எதற்கு என்று
கசக்கி எறிந்தாயோ
என் காதலனே?
09 புரட்டாதி 2008
Comments
http://blogintamil.blogspot.ch/2013/04/blog-post_5.html
உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள்...