Posts

Showing posts from November, 2008

தலைவா வாழீ நீ!

Image
இரவாய் இருந்த எம் வாழ்க்கை பகலாய் விடிய வந்துதித்த தலைவா வாழீ நீ! முதலாய் வந்த குடியின் முதுகெலும்பு ஒடிக்கப்பட்ட போது உனக்கு மீசை கூட முளைக்கவில்லை! ஆசை அரும்புகின்ற அந்த வயதில் ஆயுதப் பாஷையன்றி வேறெதுவும் இவர்க்குப் புரியாதென உணர்ந்தவன் நீ! துவக்கை கைகளில் எடுத்தவன் நீ! தமிழின விடுதலைக்குப் புது துவக்கம் கொடுத்தவன் நீ! உலகில் தமிழின இருப்பை எதிரொலிக்கச் செய்தவன் நீ காந்திய வழியில் நடந்து சோர்ந்தவர்களுக்கு நீ பிறந்தது பெரும் தெம்பு! ஏந்திய துவக்கின் வாய் திறந்து பேசிய வார்த்தையால் தான் பேச்சு வார்த்தை கூட நடந்தது! உன் வேர்கள் ஆழமானது நீ பரப்பிய கிளைகள் பிரசித்தமானது கொரில்லாவாகி மரபுசார் இராணுவமாகி அலை மீதேறி கடற் புலியாகி 'வானுமாகிப் பரந்த' பரம்பொருள் போல் வான் புலியாகி நீ பரப்பிய கிளைகள் பிரசித்தமானது! தலைவா, நீண்ட ஆயுள் கொண்டு எமைத் தீண்ட வரும் பகை அறுப்பாய் பகலவன் போல் தமிழீழ ஒளி கொடுப்பாய்! ------------------ 24-11-2008

கோழி எடுத்த பாடம்

Image
வட்டம் போட பழகுகிறதா வானில் சுற்றிவரும் பருந்து? கட்டம் வைத்து சுற்றியொரு சூழ்ச்சி வலை பின்னி கணத்தில் தரையிலிறங்கி தனிமையில் நிற்கும் குஞ்சைக் கவ்வி மீண்டும்  வானில் எழும் பருந்து! "விட்டம் பார்த்து நோட்டமிட்டது போதும்... வானில் வட்டமிடும் பருந்து போல உனை வாழ்வில் கொல்ல பலருண்டு... எழுந்து நில் தாழ்ந்து வரும் பருந்தை பாய்ந்து கொல்..." இப்படி பல சொல்லி தன் அடுத்த குஞ்சுக்கு பாடம் எடுத்தது தாய்க் கோழி! இழப்பு இடிந்து போகவல்ல...!

கண்ணா...

இருளுக்குள் தவித்துக் கொண்டும் பொல்லாத நினைவில் என்னைத் தொலைத்துக் கொண்டும் எத்தனை காலம் இருப்பேனடா கண்ணா? உலகுக்குள் உண்மையில்லை மயங்கி மயங்கி அலைபாய்கின்ற மனசினால் நிம்மதியொன்றில்லை சிலைகளுக்குப் பின்னால் கடவுளைத் தேடியும் சேலைகளுக்குப் பின்னால் பெண்மையைத் தேடியும் புரிந்து கொண்டது எதுவுமில்லை! நான், அவள் சல்லாபிகின்ற எல்லாம் ஐம்பூதச் சேர்கையின்றி வேறெதுவுமில்லையெனும் ஞானம் கூடவில்லை வீணாகக் கரைகின்றது காலம் கோலங்கள் பல வரையும் ஆசை மீன்கள் மனசுக்குள் ஓடித் திரிந்தாலும் சோம்பித் திரிகிறேன்... சோகமடா எல்லாம்! கண்ணா... அண்ணாந்து பார்த்து அரோகரா எனக் கோஷம் போடும் சராசரி மானிடனாக என்னையும் ஆக்காதே விண்ணெல்லாம் தொட்டு விண்மீன் அளைந்து விளையாடும் நீல மேனி வண்ணா வாய் திறந்து நான் சொன்னால் தான் என் மனம் புரிவாயோ? காலமெலாம் உனை மனதில் ஏந்தி உற்ற தோழானாக்கி உறவு கொண்டேனே மீதமெல்லாம் நான் சொல்லவும் வேண்டுமோ? மங்களங்கள் தருவாய் என் ஈழ மண்ணின் விடுதலை தருவாய் நினைக்கும் போதெல்லாம் கட்டற்ற கவி செய்யும் புலமை தருவாய்!!!

பூக்கள்

பூக்கள், மரங்கள் தேனள்ளி வழங்கும் குடங்கள் வழிகின்ற தேனுண்ண ரீங்காரிக்கும் வண்டுகள் சில பூக்கள் வண்டுகளின் வருகைக்காக காத்திருந்து உடல் வாடி உதிர்கின்றன... சில பூக்கள் வண்டுகளின் ஸ்பரிச சுகத்தில் மெய் சிலிர்த்து சந்தோசமாய் மடிகின்றன... சில பூக்கள் காற்றின் பலாத்கார உறவில் வேண்டாமென தலையசைத்து வேதனையோடு மடிகின்றன பூக்கள் பூசைக்காகவென்று யார் சொன்னது? உண்மையில் பூக்கள் மரங்களின் புணர்ச்சி உறுப்புக்கள்! மரங்களின் மகிழ்ச்சிக்காக மலரும் பூக்களை மனிதர்கள் தங்கள் மனங்களின் மகிழ்ச்சிக்காக ரசிப்பதில் தவறில்லை கரங்கள் கொண்டு காம்பு முறித்து கிள்ளியெடுக்கும் போதெல்லாம் மரங்களும் கண்ணீர் வடிக்கும் என்பதை மறவாதீர்! கடவுளுக்கு அர்ச்சிக்கப்படும் பூக்கள் எல்லாம் ஏதோ ஒரு புரியாத மொழியில் புலம்புவதைக் கேட்கக்கூடாதென்றே கடவுளும் கல்லானார்!

ஈழப் பரிசு!

புரியும் சமாதானங்கள் என்று ஒதுங்கி நின்றோம்! எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பதன்றி எதுவும் புரியவில்லை அந்த மடையருக்கு! அரியும் புலியும் மோதினால் ஓட்டமிடும் அரியும் தெரியும் நீல வானம் அண்ணாந்து பார் விரியும் வானவில்லில் தெரியும் புலியின் வரியும்! சிரியும் ஐயா சிரிசேன ஐயாக்களால் சரிசமன் எமக்கு என்றும் வராது போலியாய் நெற்றியில் பட்டையிடும் பக்தன் போல் காவிப் பல் தெரிய இவர்கள் சமாதான வேதம் ஓதுவது ஒன்றும் புதிதி்ல்லை! வேலியாய் நாம் தான் இருக்கவேணும் ஐயா! ஆழிக் கடலலை மேவி விரியும் வானத்தில் நீந்தி வரிசையாய் புலிப்படை நடத்தும் அண்ணன் வீரத்தால் பரிசாய் கிடைக்கும் எமக்கு ஈழம்!

வெங்காயம்...

வெங்காயம் இதுவென வெறுத்து ஒதுக்க முடியாது உரிக்க உரிக்க தன் காயம் பொறுத்து தனக்காய் உனை அழவைத்து சமையலுக்கு சுவை சேர்ப்பதால் வெங்காயம் இதுவென வெறுத்து ஒதுக்கமுடியாது! உன் காயம் வெறும் உயிர் தாங்கும் கூடு பெருங்'காயம்' பட்டுவிட்டால் தாங்காது வாடும்! யமதூதன் உன் உயிர் பறித்தபின் உன் காயம் சதத்திற்கும் உதவாது மயான பூமியில் தானே போய் எரியாது! நாலு பேர் கத்தியழ நாலு பேர் சுமந்தோட நாலு பேர் நினைவில் என்றும் இருக்க - நீ செய்ய வேண்டிய செயல் நாலல்ல பல! ஆகவே, கறிக்குதவும் வெங்காயம் போல் உன் காயம் யாருக்கும் உதவாது மரித்துப் போனால் உன் பரம்பரை சுமக்கும் பெரும் பாவம்!

புத்தன் போய் விட்டான்!

Image
போதி மரத்துப் புத்தன் ஏதோ மோதி எழுந்தான்! கூவி வந்த குண்டொன்றின் சன்னம் தன் தேகம் கீறி இரத்தம் வரக் கண்டான்! தேடி ஒரு பிக்குவைப் பிடித்து நடப்பதென்ன என்று அறியக் கேட்டான் ஆதி முதல் அத்தனையும் உரைத்த பிக்கு... அவசரமாய் போக வேண்டும் என்று ஓடிப் போனான்! புரியாத புத்தன் அவனைத் தொடர்ந்து போனான்... என்ன ஒரு முரண்பாடு...! "புத்தனைத் தொடர்ந்து பிக்குகள் போவதிருக்க பிக்குவைத் தொடர்ந்து புத்தன் போவதா...?" என்ற தத்துவ விசாரணை விடுத்து நடப்பதைக் கவனிக்க... ஓடிப் போன அந்தப் பிக்கு போருக்கு ஆதரவாய் கோஷம் போட்ட கூட்டத்தோடு சேர்ந்து தானும் கோஷம் போட்டான்...! சாந்தம் தவழவேண்டிய முகத்தில்... ஒரு வெறித்தனம்... நரித்தனம்... பூமியை இரத்தத்தால் கழுவிய அசோக மன்னனை ஒரு புத்த பிக்கு அன்பால் கழுவினான்! அவனை நல்வழிப் படுத்தினான்...! நினைத்துப் பார்த்த புத்தன்... மறுபடியும் ஞானம் பெற்றான்! அரச மரங்களின் அடியில் இருப்பதை அடியோடு விட்டான்! யாரேனும் புத்தன் அரச மரங்களின் அடியில் இருக்கக் கண்டால் அது 'வெறும் கல்' என்று உணர்க! புத்தன் எப்போதோ போய் விட்டான்! ----