வாராயோ மீண்டும்...!

காசைத் தேடி 

கால்கள் நடக்கையில்

ஓசை படாது 

ஓடி ஒளிந்தாள் 

கூட நடந்த 

கவிதைப் பெண்!

 

காதல் தோல்வியில் 

நெஞ்சோடு தாங்கியவள் 

கண்ணீர் துளிகளை 

கவிதை வரியாக்கியவள்!

 

தனிமையில் தவித்த போது 

இனிய உறவாய் 

இதயத்தில் நடந்தவள் 

இமைகள் உறங்க 

தமிழால் தாலாட்டியவள்! 

 

திசைகள் தோறும் 

தேடிப் பார்க்கிறேன் 

வீசும் தென்றலிடம் 

விசாரணை செய்கிறேன் 

யாரும் அறியவில்லை 

உன்னை!

 

போதும் உன் புலம்பல் 

என ஓடி வாராயோ​?

காயங்கள் தோறும் 

ஒத்தடங்கள் தாராயோ? 

 

உன் தடம் பிடித்து 

நிற்கிறேன் 

என்னை உன்னிடம் 

சேர்க்கிறேன்!

 

பெண்ணெ போகாதே

எனை விட்டு...

போகுமே என் 

கவிதைச் செடி பட்டு... 

 

மொட்டு விடட்டும் 

மறுபடியும் 

எனக்குள் கவிதை 

எனைச் சுட்டு 

எரிக்கும் போதும் 

நீங்காதிருப்பது 

உனக்கினி கடமை!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்