அன்னைக்கு ஒரு ஆறுதல்!

கார்த்திகை 27, 2014 அன்று படித்த கவிதை.

வணக்கம்

அன்னை தமிழுக்கு வணக்கம்
தாய் மண்ணிற்கு வணக்கம்
தலைவன் தாளிற்கு வணக்கம்
மற வீரா் கல்லறைக்கு வணக்கம்

அநாதையாகி நிற்கும்
பெண்ணே…
ஆதியிலே இருந்தவரெல்லாம்
பாதியிலே போவார் என்று
யாரேனும் சொன்னதுண்டா?

வீதியிலே நிற்கின்றாயே
அம்மா…
விதி வந்து நின்றால்
கலங்க மாட்டோம்
சதி செய்து வாசலில்
நின்ற பகை
முற்றத்தில் பாய்ததே அம்மா…!

கக்கத்தில் இருந்த பிள்ளையும்
கருவிலே உருவான மகவும்
சொர்க்கத்தில் கட்டாய
இடம் தேடிக் கொண்டன!

கற்றைக் கூந்தலது வாரி
பல வண்ணப் பூக்கள் அதில் சூடி
நெற்றித் திலகமது ஒளிர
மங்களமாய் நின்ற பெண்ணே…

சொந்தங்களை நீ இழந்தாய்
மடி நிறையக் கொண்ட
செல்வமதுவும் இழந்தாய்
துடிப்பாய் நின்று
உன் மானம் காத்த
மறவரையும் இழந்தாய்
தூய தமிழ்ப் பேச்சினை இழந்தாய்!

துட்டர்களின் “பூட்ஸ்”
கால்களின் அடியில்
மிதிபட்டுக் கிடக்கின்றாயே அம்மா…

உன் கண்ணின் ஈரம்
எப்படித் துடைப்போம்?
உன் நெஞ்சின் பாரம்
எப்படிச் சுமப்போம்!

ஈழத் தாயே
உன்னிடம் பெற்றதுவும்
கற்றதுவும் கனக்க
ஆனாலும் எம்
கைகள் இன்னும் நீளலையே
உன் கண்ணின் ஈரம் துடைக்க…

நீண்டாலும் விளி உருட்டி
சுடு குழல் நீட்டி
தீண்டாதே உன் மண்ணை
என்று வந்த கூட்டம்
வாலாட்டுதே…

அம்மா…
சிரிசேன ஐயாக்களால்
எமக்கு என்றும்
சரிசமன் வராது
என்று சொன்னானே
உன் இளவல்
எம் தமிழினத் தலைவன் அன்று…

தலைவன் சொன்னதெல்லாம்
நடக்குதே
ஆண்டுகள் ஓடியும் எம்
காயத்திற்கு யாரும்
மருந்து தரவில்லையே…
வருந்துகிறோம் என்பார்
வருந்தி ஆவதென்ன…?

ஐ.நா. விசாரணையில்
அவிழுமோ இவர்களின்
பொய் மூட்டைகள்?

அம்மா என்றுமே
அழுகின்ற கூட்டமா
நாங்கள்?
இல்லையம்மா பொருத்திரு…
காட்சிகள் மாறுது
அரச நாட்காலி
ஆட்டங் காணுது
கூட்டத்தோடு
அவன் போவான்
ஐயோவென்று போவான்!


________________________

கார்த்திகை 27, 2014

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை