யாழ் களக் கிறுக்கல்கள் - X
கிறுக்கல் 31:
தொடர்வதேனோ என்னை?
நிமிர்ந்து பார்த்து
நிலவைக் கேட்டேன்!
தலை கவிழ்ந்து
முகம் பார்த்துச் சொன்னது
நிலவு...
களவு போன என்
உள்ளத்தை களவாடிய கள்வன்
இவனா என அறியத் தொடர்ந்தேன்!
-----------------
கிறுக்கல் 32:
அவனாகட்டும்
உன் காதல் வானம் - உன்
செவ்விதழாகட்டும்
அவன் பருகும் தடாகம்!
மொட்டு அவிழட்டும்
அவன் கைகள் பட்டு
சொட்டுச் சொட்டாய்
ஜீவன் உருகட்டும்
கட்டு அவனை
காதலில் கட்டு
விட்டுப் பறக்காது இனி
அவன் காமனின் சிட்டு!
காட்டு உன்னழகை
அவன் முன் காட்டு
பார்த்து கண்கள் இமைக்காது
பார்த்து எழுதுவான்
பல பாட்டு!
நிப்பாட்டு
மின்சாரத்தை
அவன் ஆழட்டும்
உன் அழகின் சாரத்தை!!!
-----------------
கிறுக்கல் 33:
வெல்லலாம்
பெண் மனதை என்று
வெளிக்கிட்டால்
வில்லெல்லாம்
பழுது பார்த்து - எனைக்
கொல்லலாம் என்று
முடிவுகட்டி
கொவ்வையிதழ் வெடிப்புக்களில்
எனை வீழ்த்தி
புருவ வில் வளைத்து
பருவக் கணை தொடுத்து
நிராயுதபாணியைக் கொல்கின்றீரம்மா!
நிறுத்துங்கள் என்று
ஒரு குரல் வரக் காணோம்...
என்ன செய்குவேன்?
வேறேதும் செய்யாது
வேண்டாமிவள் என்று
விரைந்து செல்லின்
கனவுக் காட்சியில்
முதல் காட்சி
உன் மூச்சு வாங்கும்
முன்னிரு எழில் தானடி...
திடுக்கிட்டு விழித்தெழுந்து
திரு திருவென முழித்து
நாளை மீண்டும்
போர்க்களம் போக முடிவெடுப்பேன்...
நடப்பது நடக்கட்டும்
அடிப்பவளே
அணைப்பது தானே
காதல்...!
-----------------
கிறுக்கல் 34:
ஏதுமில்லை... ஏதுமில்லை
ஊருமில்லை உறவுமில்லை
உனக்கு நீயே சொந்தமில்லை
உலவிடும் உயிர் பறந்துபோனால்
தேடிவரப் பருந்துமில்லை இங்கே
போடா போ...
தமிழன் நீ என்பதால்
கோடி சாமி உனக்குண்டு
தேடி ஒரு சாமி வரவில்லை
உதவிட இன்று!
Comments
நிமிர்ந்து பார்த்து
நிலவைக் கேட்டேன்!
தலை கவிழ்ந்து
முகம் பார்த்துச் சொன்னது
நிலவு...
களவு போன என்
உள்ளத்தை களவாடிய கள்வன்
இவனா என அறியத் தொடர்ந்தேன்!/
அருமை நண்பரே
அந்த அக்ரகேட்டர் அருமை.
வாழ்த்துகள்.