ஊரின் நினைவலைகள்...

சொந்தம் சொல்லப் பலருண்டு
ஆனாலும் அருகில் எவருண்டு?

முந்தநாள் இறங்கி விளையாடியது
போல் நினைவில் உள்ள
என் வீட்டு முற்றமும்
கூடி இருந்து ரசித்த சுற்றமும்
போனதெங்கே?

ஆளுக்கொரு திசையில்
யார் யாரோ போட்டு வைத்த
பாதையில் நடக்கின்றோம்
எமக்கான பாதை
வந்து போவார் யாருமின்றி
வெறிச்சோடிக் கிடக்கின்றது!

வீட்டு வளவில் நின்ற
வடலிகளும்
உயர்ந்த மனித தோரணை
செய்யும் பனைகளும்
காற்று வந்து ஓலைகளுக்கிடையில்
ஒளித்து விளையாடுகையில்
விதம் விதமாய்
ஒலி செய்யும்!

காய்ந்த ஓலைகள் சில
களைத்து விழ
குருத்தோலைகள்
கைகொட்டிச் சிரிக்கும்!

வாழ்க்கையின் வடிவான
தத்துவம் அது!

எங்கிருந்தோ ஒரு குயில்
தன் குரல் செருமி
'ஒரு படப் பாடல்'
பாடும்!

கழுத்தில் மணி கட்டிய
சில காளைகள்
காலில் சலங்கை கட்டிய
மங்கையரைப் பழித்துச்
செல்லும்!

அந்தி நேர வானச் சிவப்பைக்
காட்டி தன் காதலியின்
நிறம் பழிப்பான்
காதலன்

அவளும் விடாது
'அத்தான் கைவிளக்கை ஏற்று
இருட்டில் உன்னைத் தேட
முடியாது' என்பாள்
தன் பங்குக்கு!

திண்ணையில் அமர்ந்து
சில பழசுகள்
சுருட்டை புகைத்தபடி
உலகப் பிரச்சனைகளுக்கு
இங்கிருந்தே தீர்வு
சொல்வர்...

எழுத எழுத
பல நினைவு
தனை எழுது என்று
எனை வருத்தும்!

எந்தப் புள்ளியில்
முடியும் என்று அறியாது
இத்தோடு முற்றுப் புள்ளியிடுகிறேன்!

Comments

geevanathy said…
///எழுத எழுத
பல நினைவு
தனை எழுது என்று
எனை வருத்தும்!

எந்தப் புள்ளியில்
முடியும் என்று அறியாது
இத்தோடு முற்றுப் புள்ளியிடுகிறேன்!///

ஆழமான கவிதை
உங்கள் உணர்வுகளை இயல்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்

பாராட்டுக்கள்....
ம்..ம் உங்களால் எழுதவாவது முடிகிறது...
இங்கு
விழிபிதுங்கி இருக்கிறோம் எங்கள்
எண்ணங்களை
எழுத்துருவாக்கும் வழி தெரியாது
தங்கராசா வருகைக்கு நன்றி...

நீங்கள் சொல்லவருவது புரிகிறது... எல்லாம் ஒரு நாள் மாறும் என்ற விதியின் படி இதுவும் கடந்து போகும்...
தமிழ் said…
அருமையான
வரிகள்

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்