கண்டதென்ன...?
என்னடா நீ
நாலுக்கு ஐந்தடி
அறையில்
கொண்டாட்டம்
ஏதுவுமின்றி கொல்கின்றாய்
நிமிடங்களை!
வெளிநாடு வந்துமென்ன
கண்டாய் இங்கே?
ஒருநாடு உனக்கில்லாது
குளிர்நாடு வந்து
குமைகின்றாய் உள்ளே!
காலைச் சூரியன்
பார்த்ததுண்டா?
கடலலை கால் நனைக்க
மகிழ்ந்து சிரித்ததுண்டா?
போடா... போ...
சூரியனுக்கு முன்னெழுந்து
நடுங்கும் குளிரில்
வீதியில் நடைபயின்று
வேலைக்குப் போனால்
நடுநிசியில் வீடு திரும்பி
மீண்டும் மறுநாள்
அதே செக்குமாட்டு
வாழ்க்கை...!
கேட்டால் நாளை
சந்தோசத்திற்கென்பாய்!
உனை கேலியாய்
பார்த்துச் சிரிக்கும்
சமகாலத்தைக் கவனி...
கண்களில் மின்னும்
தங்கையின் கல்யாணக்
கனவு...
கஸ்டத்தில் ஆடும்
குடும்பத்தின் வாழ்க்கைப்
படகு...
எல்லாம் சரி...
உன் முகமூடி
கழட்டி
உண்மை நிலை
உரை
சமாந்திரக் கோடு
கிழி
குடும்பத்தோடு உன்
வாழ்வும் பயணிக்க
வேண்டுமடா...!
வெளிநாட்டில் இருப்பது
கெளரவம் என்று
நம்நாட்டில் நினைப்பு...
யூரோவில்
பவுண்சில் நீ
அனுப்பும் காசில்
இந்திரலோகத்தின்
அதிபதியாய் நீ தெரிவாய்!
யாரேனும் இங்கு வந்து
நாம் படும் துன்பம்
அறிந்ததுண்டா?
உள்ளுக்குள் ஏதோவொரு
சோகச் சிலுவையை
மனசு சுமப்பது
புரியுமா?
வெளிவேஷம் போட்டுன்
வேதனை மறைக்காதே...
வாழ்வென்பது
நீயும் வாழ்ந்து
மற்றவரையும்
வாழவைப்பது...!
Comments
சங்கமத்திற்கு இந்தக் கவிதையை பரிந்துரைக்கிறேன்..
நீங்கள் சங்கமத்திற்கு பரிந்துரைத்தமைக்கு சந்தோசம்...