சாவுக்கு ஒரு தூது!

சாவே சட்டென வந்தென்னை
அணைத்துக் கொள்
சகதி வாழ்க்கையில்
தொலைந்திட
விருப்பமில்லை

மொட்டுக்களே உங்கள்
குவிந்த உதடுகளை
விரித்துப் புன்னகையுங்கள்
பூப்பெய்திய பெண்களைப்
பார்த்ததில்லையா?

துடுப்பென இருசிறகு
கக்கத்தில் கட்டிய
பறவைகாள்!
ஆகாய வீதியில்
ஒன்று கூடுங்கள்
மரணத்தின் முன்னால்
ஒரு மகிழ்ச்சிக் கீதம்
கேட்க வேண்டும்

ஆங்காங்கே
நரைத்த முடிகளை
காட்டாது ஓடி
மறையும் மேகங்களே...
கறுப்புச் சாயம்
பூசிக் கொள்ளுங்கள்
மண்ணின் மார்புச் சேலை
நனைக்க
மழைவேண்டாமோ?

அருமை நண்பர்களே
அஞ்சலிக் கூட்டங்களுக்கு
ஏற்பாடு செய்யுங்கள்!
உங்களில் ஒருவன்
பிரியப் போகின்றான்!

கனவுப் பயிர் வளர்த்தவன்
காற்றினில் மெல்லக்
கரையப் போகின்றான்!

கற்பனைத் தேரேறி
உலகை அளந்தவன்
உருவழியப் போகின்றான்!

சிரிப்பில் சிலந்தி வலை
பின்னும்
மங்கையரின் மாயம்
இனிச் செல்லாது
எந்தன் உயிர்
இனி நில்லாது!

அதோ யமதூதன்...
'வா' வென்று அழைக்கின்றான்

உயிர்...
மெல்ல... மெல்ல...
உடம்புச் சட்டை
கழட்டுகிறது!

ம்...
இப்போது தான்
சுகமாய்
இருக்கிறது!

___________
யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=20769

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்