Kaviyarankam Baner

Thursday, 14 February 2008

காதலர் தின வாழ்த்துக்கள்!

home_pic

Tuesday, 12 February 2008

தேவலோகத்தில் காதல் விழா!

j0436221

வானத்தில்
உயர் பிரமுகர்கள்
வாசம் செய்யும்
தெருவொன்றை
தேவதச்சனின் கைவண்ணம்
பளிச்சிடும் மாட மாளிகைகள்
அலங்கரித்தன...!

வீதியில் வெளிச்சம் தர
தொங்கவிடப்பட்ட
நட்சத்திரங்கள் தமக்குள்
ஏதோ கதை பேசிச்
சிரித்தன...

ஒரு மாளிகை மட்டும்
மெல்லிய ஒளியில்
தன் மேனி
பதுக்கியிருந்தது!
நுழைவாயிலில்
கரும்புவில்லோடு இதயம்
பொறித்த கொடியொன்று
காற்றில் பட  படத்தது!

அருகில் நெருங்கிச் சென்றால்
மல்லிகை பன்னீர்
இதர வாசனைத்
திரவியங்களின் கூட்டில்
உருவான வாசனை
நுகர நுகர
இன்பம் தந்தது!

கதவு திறந்து
உள்ளே செல்வோம்
காவல் யாரும்
கண்ணில் படவேயில்லை...

இருட்டை மெல்ல
இளக வைத்த
ஒரு வித ஒளி
உள்ளே...

மெல்லிய பேச்சொலியன்றி
வேறெந்த அரவமும்
காணோம்!

யாரென அறியும் ஆவலில்
கண் களால் எங்கும்
துளாவித் தேடினால்...

உயர்ரகப் பட்டினால்
மூடிய மஞ்சம்
ஆங்காங்கே பூக்களின்
சிதறல்...
மஞ்சத்தின் மேல்
இரு காதல் கிளிகள்!

காதலின் கடவுளும்
கடவுளின் காதலியும்!

மன்மதன் மார்பில்
தலை சாய்த்து
படுத்திருந்தாள்
அழகுக் கிளி ரதி!

அவள் மேவாய்
உயர்த்தி
கண்களில் ஏதோ
தேடினான் மதன்!

துடிக்கின்ற அவள்
இதழில்
ஒத்தடச் சிகிச்சை
செய்தான்...
கண்மூடி தனக்குள்
உருகினாள்
ரதி...

"அத்தான்..."
"ம்..."
"சேதி தெரியுமா...?"
அவள் கூந்தல்
கோதியவண்ணம்,
"என்ன?" என்றான் மதன்
"மண்ணுலகில் காதலுக்கு
விழா எடுக்கிறார்களாம்..."
"சரி அதற்கென்ன...?"
மோகத் தீ அணைக்கின்ற
அவள் பேச்சுப் பிடிக்காமல்
சலித்தான் மதன்...

"கொஞ்சுவதிருக்கட்டும்
அத்தான்... என் பேச்சை
கேட்கக் கூடாதா?"
பொய்க் கோபத்தில்
அவன் இதழ் எச்சில்
துடைத்தாள் அவள்...!
"சரி கேட்கிறேன்"
அக்கறை காட்டினான்
அவன்...

"மண்ணுலகில் மாந்தர்
நாளொன்று ஒதுக்கி
காதலுக்கு விழா
எடுக்கின்றனர்...
தேவ உலகாம்
நம் உலகிலும்
ஏன் எடுக்கக் கூடாது
ஓர் விழா...?"
வினவினாள்
அழகு ரதி...
"தினமும் நாம்
நடாத்தும் காதல்
கூத்து போதாதென்று
விழா வேறா...?"
அவள் காதில்
கிசு கிசுத்தான் மதன்!
கரும்பு முறித்து
அடிக்க ஓங்கினாள்
ரதி - பின்
ஓதினாள் தலையணை
மந்திரம்!

விடிந்தெழுந்து
அவள் இதழமுதம்
அருந்தி
ஓலை பல வரைந்தான்
மதன்...
அதில்...
"மன்மதன் எழுதிக் கொள்வது,
மகேசன் முதல்
மகாவிஷ்ணு வரை
சகலருக்கும் பொதுவான
செய்தி...
இந்திர சபையின்
இருபத்திரெண்டாவது
மண்டபத்தில்
தேவ மங்கையர்
ஊர்வசி, ரதி, மேனகை
ரம்பை போன்றவர்களின்
அழகு நாட்டியத்துடன்
காதலுக்கு விழா ஒன்று
வருகின்ற பதினாங்காம்
நாள் எடுக்கப்படும்!
அனைவரும் வருகை
தந்து சிறப்பிக்கவும்
சிறப்புக் கோரிக்கைகளை
என்னிடம் சமர்ப்பிக்கலாம்
உடன் ஆவன செய்யப்பட்டு
காதலின் தேரில்
வலம் வர
தேவி ரதி சமேதராக
நான் வரம் அருள்வேன்
இப்படிக்கு,
மன்மதன்"

j0436363

Sunday, 10 February 2008

நாளைய பொழுது எமக்காய்...!

j0409304

சொன்னால் தான்
புரியுமா என்
கண்ணே
மனசுக்குள் பல
வண்ணப் பட்டாம்பூச்சி
பறப்பது...

உள்ளுக்குள்
தெரிந்தாலும்
உண்மையிது
புரிந்தாலும் நான்
சொல்லிக் கேட்பதில்
உனக்குப் பரவசம்!

நாடுகள்
எமைப் பிரிக்கும்
எம் உயிர் தாங்கும்
கூடுகள் தான் அதை
மதிக்கும்...
எம் உயிருக்கு
ஏதடி இடைவெளி?
உலவலாம்
எங்கெங்கும்
உலகமிது சமவெளி!

விண்ணில் ஏறுவோம்
விண்மீன் எறிந்து
விளையாடுவோம்
மண்ணில் இறங்கிப்
பாடுவோம்
பூக்களின் மகரந்தப் பொடி
அள்ளித் தூவுவோம்
வண்டுகள் எமை மொய்க்கும்
உன் கண்ணிரண்டு கண்டு
தம்மினமோ என்று
யோசித்து நிற்கும்!

யாசித்து
வருவதில்லையே அன்பு
நமைப் போல்
நேசித்து நின்றால்
ஓடிவரும் முன்பு!

ஆண்டுகள் பல
காதலிப்பதால்
காதல் ஆழமாகுமோ?
நேற்று வந்த நீ
என் உயிர் உருக
வைக்கவில்லையா?
காலம் கடந்தது
இந்தக் காதல் ஆகுமே!

கன்னி நீ
பிரிந்து போனால்
இந்தக் கூடு விட்டு
உயிர் போகுமே!

பாடு கண்ணே
பாடு...
நாளைய பொழுது
எமக்காய் விடியும்
என்றே பாடு...!

-------------------------------------------------

படம் உபயம் : Microsoft Clipart / நன்றி

Friday, 8 February 2008

நம் காதல்

முற்றத்து மல்லிகை
போலுந்தன் புன்னகை
என் மனக் கவலையாற்ற
அது தரும் நம்பிக்கை!

கற்றது கனக்க
ஆனாலும் அதில்
என்ன இருக்கு?
உன்னிரு விழி போடும்
கேள்விக்கு பதில் தேடி
நிற்குமே பணிந்து!

உன்மடி மெத்தை போதும்
உலகமிது மறக்க
தாய் மடிக்கடுத்து
பெண் மடி தேடும்
ஆண் மனம் இருக்கு!

பேசிச் சிரிப்பதுவும்
பின் ஏன் சிரித்தாய் என
கோபத் தீ கிழித்துப்
போடுவதும்...
பாசத்தில் ஊறும்
நம் உள்ளங்களின்
உவப்பான விளையாட்டாகும்!

மாடத்தில் நின்று
மலர்க் கணை
எய்யவில்லை நீ...
பின் தொடர்ந்து கூந்தல்
அழகோடு வேறழகு வர்ணித்து
கூவிப் பிதற்றவில்லை நான்!
ஏதோவொரு கணத்தில்
எல்லைகளற்ற வெளியில்
காதலெனும் ஓர் புள்ளியில்
நிகழ்ந்தது நம் சந்திப்பு!

தொடர்ந்து நடந்த
கதை
ஒருவர் மேல் ஒருவர்
படர்ந்து மகிழ்ந்த
கதை எனப் பல
கதை இருக்கு
நினைத்து மகிழ...!

ஒரு கறுப்பிரவின்
பின்
ஒளி அள்ளித் தரும்
கதிரின் கை!

எம் கவலை
துடைக்க
நீளும் ஒரு கை!

அதுவரை பொறுத்திரு
கண்ணே...
நெய்யப் பல
கனவிருக்கு!

Thursday, 7 February 2008

காதலர் தின சிறப்புக் கவிதைகள்

இனி வரும் நாட்களில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் காதல் கவிதைகள் கவியரங்கத்தை அலங்கரிக்கும். உங்கள் காதல் கவிதைகளையும் இங்கே இணையுங்கள் அல்லது உங்கள் வலைப் பூக்களின் முகவரிகளை பதிவு செய்யுங்கள். ஓரிடத்தில் சங்கமிப்பது காதல் மட்டுமல்ல தமிழை தாய் மொழியாகக் கொண்ட நாமும் தான்...

கீழுள்ள கவிதைகள் மற்றும் வடிவமைப்புக்கு சொந்தக் காரி : சுசி நடா

v_card1

v_card2

v_card3

Monday, 4 February 2008

சுதந்திர தினம்!

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஆண்டு. ஒன்று பெப்ரவரி 4 இல் வரக்கூடிய சுதந்திர தினம்! (அப்படியென்றால்...? என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்?) மற்றையது பெப்ரவரி 14 இல் வரக்கூடிய காதலர் தினம் (அதாவது... அட போடா எங்களுக்கு தெரியாதாக்கும்...) சரி அதை விடுங்கோ... மிகவும் அக்கறையோடு யோசித்து எழுதிய கவிதையை(?) படிக்கலாம் வாங்கோ...

---------------------------------------------------------------------------------

வாலைச் சுருட்டிக்
கொண்டு
அவரவர் வீட்டுக்குள்ளே
பதுங்கி இருங்கள்
இன்று
சுதந்திர தினம்!

சுருட்டு வாங்கப் போகும்
தாத்தாவும் கவனம்!
உன்னையும்
சுருட்டிக் கொண்டு
சென்றிடுவர்!

சட்டப்புத்தகம்
சட்டக் கோவைகளால்
கொழுத்திருந்தாலும்
நடைமுறைப் படுத்துவதில்
இன்னும்
அதே மெலிவு தான்!

சும்மா
உதடுகளால்
உச்சரிக்கப்படுவதெல்லாம்
உயிர்த்தெழும் என்பது
உதவாத கதை!

வெறும்
கோஷங்களையும்
கொள்கை
முழக்கங்களையும்
கக்கத்தில்
வைத்து கொண்டு
களமிறங்கிய
காரசாரமான
அரசியல்வாதிகள்!

மீசை
இருக்கின்றதே என்று
முறுக்குவதைத் தவிர
வேறெதையும்
மிடுக்காக முடிக்கத்
தெரியாதவர்கள்!

சகல பாதுகாப்புடனும்
அரச தலைவர்
கொடியேற்றுவார்!
சுதந்திர தின உரை
படிக்கப்படும்...
வீடுகளில் மக்கள்
தொலைக்காட்சி
முன்னமர்ந்து
வேடிக்கை பார்ப்பர்!

நம்பினால் நம்புங்கள்
இன்று சுதந்திர தினம்!

Related Posts Plugin for WordPress, Blogger...
பின்னூட்டல்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்