Posts

இன்றைய பொங்கல்!

Image
நண்பர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! மேலிருந்து சூரியன் பார்த்திருக்க சுற்றி நின்று சுற்றத்தார் காத்திருக்க முற்றத்தில் அடுப்பு மூட்டி புதுப் பானை அடுப்பேற்றி பொங்கியது உண்டு ஊரில்! அவ்வழக்கம் இங்கில்லை இப்போது! உள்வீட்டில் பொங்கல் பாவம் சூரியன் பல முறை எட்டிப் பார்த்தும் பொங்கல் பானை பார்க்கும் பாக்கியம் இல்லை அவனுக்கு! சுற்றத்தார் எங்கிருந்தோ குறுஞ்செய்தி, தொலைபேசி முகப்புத்தகம், ருவீட்டர் என பல வடிவில் "Happy Pongal" என்றார்! ஏன் பொங்குகிறோம் என்று அறியார் பலர் ஏதோ பொங்குகின்றார் ஏற்பாடுகள் ஏட்டிலே தங்கிவிட பொங்கல் பானையில் தங்கிவட உள்ளங்கள் பொங்குவதில்லை இங்கே உவகை அதில் நிறைவதில்லை பிள்ளை கேட்பான் "ஏன் அம்மா பொங்கல்?" அம்மாவுக்கே அது தெரியாத போது எங்கிருந்து அவள் உரைப்பாள் "அப்பாவிடம் கேள்..."  என்பாள் ஓடியே போவான் பாவம் அவன்!

கந்தக விரல்

Image
எங்கோ ஒரு மூலையில் சிரிப்பைத் தொலைத்து கந்தக விரலுக்கு சொந்தக் காரி ஆகிறாள் ஒருத்தி! வெடித்துச் சிதறும் பல வண்ணப் பட்டாசுகளை கண்டு துள்ளிச் சிரிக்கிறார் இங்கே பலர்! மறவாதீர் அவள் பட்டாசுகளில் பலவாறு சிரிக்கிறாள் சிறு நொடியில் சிரிப்பைத் தொலைத்தும் விடுகிறாள்! வாழ்க்கை எவ்வளவு முரண்பாடு ஒருத்தியின் சிரிப்பைத் தொலைத்த உதடுகளை பார்த்த பின்னும் எவ்வகைப் பட்டாசு வாங்கலாம் என்றே எண்ணமிடுகிறது மனசு!

கார்த்திகை இருபத்தேழு!

நெஞ்சங்கள் தோறும் ரணங்களைச் சுமந்து நிற்கின்றோம் கல்லறை வீரர் காலடி பணிகின்றோம் நாளிது கார்த்திகை இருபத்தேழு! களமாடி ஈழக் கடமை செய்த உயர் வீரா் நினைவேந்தும் நாள்! மாடி வீட்டில் இருந்து நாம் வேடிக்கை பார்த்தபோது ஓடி ஒளியாமல் வாடிச் சாகாமல் பகை தேடிப் புறப்பட்ட மற வீரர் நினைவை மனதில் ஏந்தும் நாள்! சிவப்புத் தோல் போர்த்திய நரிகள் தமைச் சிங்கங்கள் என்றெண்ணி எமைச் சூழ்ந்து அசிங்கங்கள் செய்த போது பாயும் புலியானவர்கள் பச்சைத் துரோகத்தால் பலியானவர்கள்! சாவை எந்நேரமும் சட்டைப் பையில் சுமந்தவர்கள் தலைவன் நாவை அசைத்தால் நாற்றிசையும் பாய்ந்து எம் மண்ணின் மானம் காத்தவர்கள்! முறத்தால் புலியை விரட்டினாளாம் பண்டைச் தமிழச்சி! எம் தலைவன் ஊட்டிய வீரத் திறத்தால் பகையை வாட்டினார்கள் எம் குலப் தமிழ்ப் பெண்கள்! பூச்சூடி பொட்டிட்டு பூவிதழில் புன்னகை மலரவிட்டு மென்மையின் வடிவானவர்கள் தாம்...

எரியட்டும் பெரு நெருப்பு!

Image
வீடெங்கும் ஒளி வெள்ளம் மலரட்டும் நமது உள்ளம் நரகாசூரா்கள் வெளியில் இல்லை உனக்குள்ளே சிரிப்பர் பல அசுரா்! தீபங்கள் பல பற்ற வை மள மளவென எரியட்டும் பெருந்தீயாய் பரட்டும் உள்ளமெனும் காடு எரிகின்றபோது மிருகங்கள் பல தெறித்தோடும்! இப்போது உனக்குள்ளும் கேட்கும் கண்ணனின் புல்லாங்குழல் ஓசை!

பழுத்த இலைகள்!

Image
உதிர்ந்து கிடக்கும் பழுத்த இலைகள் வீதியெங்கும். இவைகளின் சோகம் சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். முடியவில்லை… சில சொற்களைச் சேர்த்துச் சும்மா விசிறியிருக்கிறேன். யாருக்கேனும் இந்த இலைகளின் விசும்பல் கேட்கிறதா? பழுத்த இலைகள் பாதை எங்கும் பரவிக் கிடக்கின்றன ஒய்யாரமாய் மேலிருந்து காற்று வந்து காதுகளுக்கிடையில் இரகசியம் சொன்ன போது மகிழ்ந்து சிரித்தவை தான்! இன்று கேட்பாரற்று கால்களுக்கிடையில் மிதி பட்டு முனகிக் கொண்டிருந்தன இளகிய சிந்தை உள்ள எவரேனும் குனிந்து குசலம் கேட்பாரோ என்று ஏங்கிக் கிடந்தன. வாழ்க்கை இப்படித்தான்! உயரத்தில் இருக்கும் போது அண்ணாந்து பார்ப்பதோடு முடிந்து விடுகிறது!

முத்த அறுவடை!

Image
கன்னத்தில் முத்தங்களை நான் விதைக்கிறேன்... எப்போதடி தொடங்கும் அறுவடைக் காலம்?   01 மாசி 2013

மழலையாகிறேன்…!

Image
அங்கும் இங்கும் தவழ்கின்றாள் ஆராய்ச்சி பல புரிகின்றாள்! எழுந்து நிற்க முயல்கின்றாள் விழுந்து பின் அழுகின்றாள்! ஆனாலும் மீண்டும் முயன்று பார்க்கின்றாள் விழ… விழ… எழுகின்ற குழந்தையின் செய்கை கண்டு நாமும் கற்க வேண்டிய பாடம் இதுவென உணர்கின்றேன்! உதடுகளுக்கிடையில் சிரிப்பை ஒளித்து வைக்கிறாள் எப்போது விடுவிப்பாள் என்று அவள் முகம் பார்த்த வண்ணம் நான்! அப்பன் என்னும் உறவெல்லாம் மறந்தே போச்சு நானும் மழலையாகிறேன் அவள் அருகிருக்கையில்!