Posts

காதல் விருந்து!

காதல்  அடிக்கடி  விருந்துண்ண  அழைக்கின்றது இலை விரித்து பந்தி  பரிமாறும்  வேளையில்  அடுத்த  பந்தியில் அமருமாறு  அறிவிக்கின்றது!

வேலை முடிந்து வீடு திரும்புகையில்...

இரவு நேர வேலை முடிந்து பஸ்சில் வரும்போது பல சிந்தனைகள் மனசில்.... கவியுள்ளம் கொஞ்சம் எட்டிப் பார்த்தது... முடிவில்லாவிட்டாலும் தொடங்கிய வரிகளை பதிந்து கொள்ளத் தோன்றியது. /* காதல் நிராயுதபாணிகளையே குறிவைத்து நடக்கும் அழகிய யுத்தம் மலர்க் கணை எய்தவளே மடியில் தாங்கி தருவாள் முத்தம்! தோற்றவன் மடியில் வென்றவள் இங்கே தோற்றவர் தான் வென்றவர் */ /* வீதியில் நடந்து வரும்போது இரவு கொட்டிய Snow இல் புற்கள் எல்லாம் வெள்ளையாக... உடனே நான், புற்களுக்கெல்லாம் நரை விழுந்தது எப்படி? */

காலத்தின் பிறந்த நாள் (2012)!

Image
விழி மூடிய கனவுகள் விழி திறக்கும் நாளை பனி மூடிய புல் வெளி பனி விலகிச் சிரிக்கும் காலை! இனி உனக்குச் சொந்தமில்லை கவலை தனி வழி திறக்கும் கவனி… போகலாம் பவனி எழுந்து முன்னே வா! காலத்தின் பிறந்த நாள் புதுப் புஸ்பங்கள் பூக்கும் நாள்! கடந்த நொடி திரும்பாது பிறக்கின்ற பொழுதுகள் உனதாக்கு! இழந்த சோகம்  ஆயிரம் இருக்கும் இரும்பாகு… காலம் துடைக்கும் கண்ணீா் என்ற ஞானம் கூட வேணும்! எப்போதும் அழுகின்ற கூட்டமா நாம்? காட்சியிது மாறும் காலதேவன் கணக்கது அப்போது புரியும்! -------------------------- 31 மார்கழி 2011

காதல் காயம்!

எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போனபின்.... வீணே திரும்பி வந்து  இதயத்தில் ஏறி  விளையாடி  கண்ணே, மணியே என்று  கொஞ்சுதலும்  கூடுமோ?  காதல் என்  கை பற்றி  இழுக்க...  "சீச்... சீ..." என 'பட்ட'ஞானம்  தடுக்க  பெரும் உணர்ச்சியில்  தள்ளாடும்  உள்ளம்!  நேற்றைய நினைவுகளை அசை போட்டபடி  மனசு...  'சுளீர்' எனும் சவுக்கடி  தானே அதற்குப் பரிசு...! போரிலே  காயம் சுமந்து  திரும்பிய  காளைக்கு  மாலை...!  காதலில்  இதயத்தில்  புண் சுமந்த எனக்கு  வாழ்க்கையிது  மாயை ... ஒன்று மட்டும்  புரிகிறது  நேசிக்கத் தெரிந்தவர்களிடம்.... உள்ளம் புரிந்தவர்களிடம்... பெண்ணை மதிப்பவர்களிடம்... காதல்  கடுமையாகத் தான்  நடந்து கொள்கின்றது! --------------------- சித்திரை 2009

மழை

மழை அடிக்கடி அழைக்காமலே எனக்குள் விஸ்வரூபம் எடுக்கும் உன்னைப் போல தூறலாகிக் கனக்கின்றது! குளிர்காற்று காதுமடல் தடவி தலைகோதும் போதெல்லாம் உன் உதடும் கைகளும் நினைவில்... பாதங்கள் வெள்ளம் அழைகையில் உன் கால் கொலுசின் ஒலி! மழைத்துளி மண்ணில் மோதிச் சிதறித் தெறிக்கையில் மரணத்தின் வலி! மழை எல்லோருக்கும் பொதுவாய் கடவுள் எடுக்கும் பால பாடம்! புரிந்தவர்கள் ஞானம் பெறுகிறார்கள்! --------------------- சித்திரை 2009

சூரியனுக்கு ஏது சாவு?

உடைந்த குரலில் குயில் ஒன்று கூவியது வண்ணம் இழந்து மயில் ஒன்று ஆடியது குனிந்த தலையாய் நெல் வயல் ஒன்று வாடியது அநாதையாகிப் போய் ஈழ மண் அழுதது! ஈழம் காண எழுந்து புறப்பட்ட தோழா்களே துரோகம் விரித்த வலையில் துடித்து விழுந்தீா்களோ? விழி மூடிய வீரா்களே சாவை வேண்டி அணைத்த மறவா்களே பூவைத் தூவி நிற்கின்றோம்! உங்கள் கல்லறைகள் வீரத்தின் கல்வெட்டுக்கள்! துவக்கு ஏந்திய துடிப்பு மிக்கவா்களே மேற்கில் சூரியன் மறைந்தால் நாளை விடியாதோ? சூரியனுக்கு ஏது சாவு? வீரனுக்கு என்றும் வாழ்வு! --------------------- குரல் சுபா கார்த்திகை 27/2011

எல்லாம் நீ..!

தேளாகி என்னைக் கடிக்கின்றபோதெல்லாம் உன் மனம் ஏனோ மறந்துபோகிறது மருந்து போடவும் நீ தான் வரவேணும் என்பதை!  ------------------- சித்திரை 2009