கார்த்திகை இருபத்தேழு!
நெஞ்சங்கள் தோறும் ரணங்களைச் சுமந்து நிற்கின்றோம் கல்லறை வீரர் காலடி பணிகின்றோம் நாளிது கார்த்திகை இருபத்தேழு! களமாடி ஈழக் கடமை செய்த உயர் வீரா் நினைவேந்தும் நாள்! மாடி வீட்டில் இருந்து நாம் வேடிக்கை பார்த்தபோது ஓடி ஒளியாமல் வாடிச் சாகாமல் பகை தேடிப் புறப்பட்ட மற வீரர் நினைவை மனதில் ஏந்தும் நாள்! சிவப்புத் தோல் போர்த்திய நரிகள் தமைச் சிங்கங்கள் என்றெண்ணி எமைச் சூழ்ந்து அசிங்கங்கள் செய்த போது பாயும் புலியானவர்கள் பச்சைத் துரோகத்தால் பலியானவர்கள்! சாவை எந்நேரமும் சட்டைப் பையில் சுமந்தவர்கள் தலைவன் நாவை அசைத்தால் நாற்றிசையும் பாய்ந்து எம் மண்ணின் மானம் காத்தவர்கள்! முறத்தால் புலியை விரட்டினாளாம் பண்டைச் தமிழச்சி! எம் தலைவன் ஊட்டிய வீரத் திறத்தால் பகையை வாட்டினார்கள் எம் குலப் தமிழ்ப் பெண்கள்! பூச்சூடி பொட்டிட்டு பூவிதழில் புன்னகை மலரவிட்டு மென்மையின் வடிவானவர்கள் தாம்...