பழுத்த இலைகள்!

உதிர்ந்து கிடக்கும் பழுத்த இலைகள் வீதியெங்கும். இவைகளின் சோகம் சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். முடியவில்லை… சில சொற்களைச் சேர்த்துச் சும்மா விசிறியிருக்கிறேன். யாருக்கேனும் இந்த இலைகளின் விசும்பல் கேட்கிறதா? பழுத்த இலைகள் பாதை எங்கும் பரவிக் கிடக்கின்றன ஒய்யாரமாய் மேலிருந்து காற்று வந்து காதுகளுக்கிடையில் இரகசியம் சொன்ன போது மகிழ்ந்து சிரித்தவை தான்! இன்று கேட்பாரற்று கால்களுக்கிடையில் மிதி பட்டு முனகிக் கொண்டிருந்தன இளகிய சிந்தை உள்ள எவரேனும் குனிந்து குசலம் கேட்பாரோ என்று ஏங்கிக் கிடந்தன. வாழ்க்கை இப்படித்தான்! உயரத்தில் இருக்கும் போது அண்ணாந்து பார்ப்பதோடு முடிந்து விடுகிறது!