எழுந்து வாருங்கள்...!
எழுந்து வாருங்கள் இனியும் ஒதுங்கி நிற்கும் சாபம் வேண்டாம் எழுந்து வாருங்கள்! சந்து, பொந்து எங்கிருந்தாலும் வாண்டு, பெண்டு அனைவரும் சேர்ந்து முந்தி வாருங்கள் முழு மனசாய் வாருங்கள்! அந்திவானச் சிவப்பை அள்ளி விழிகளில் பூசுங்கள்... ஆதவன் வெப்பம் அள்ளி நாக்கினில் தடவுங்கள்... அடி மேல் அடி அடித்தால் அம்மி நகருமெனில் மனசும் மாறும் எனும் மந்திரம் பழகுங்கள்! தலை ஆறு போல் நீவீர் திரண்டு வந்தால் வரலாறு இதனைப் பதிவு செய்யும் வற்றாத வெள்ளம் போல் எங்கு போய் உற்றாலும் வற்றாத ஈழ வேட்கை கண்டு உலகோரும் புரிந்து கொள்வர் உதவிட முன்வருவர்! முற்றாக எம்மினத்தை அழிக்கின்ற முட்டாள்கள் நட்டாற்றில் நிற்கவேணும் நமக்கொரு நீதி கிடைக்க வேணும்! நாற்றிசையும் அதிரட்டும் நாளிழிதழ்கள் எழுதட்டும் நாளை எமக்கெனும் வேளை பிறக்கட்டும்! சாலை எங்கும் தமிழ் ழுழங்கட்டும்! தமிழன் சாவை தடுத்து நிறுத்தட்டும்!