உருகும் உயிர்...

சில நூறு வருடங்கள் சேர்ந்திருந்தேனோ? நெஞ்சத்தில் உன் நினைவை எழுதி இருந்தேனோ? பல நூறு மனிதர்கள் தினம் பார்க்கிறேன் பொய்யாய் முக மலர்ந்து, முறுவல் செய்வதன்றி மெய்யான அத்தனையும் உன்னோடு விட்டு வந்தேன்! காலையில் கண் சிமிட்டும் அந்த முகம் இங்கில்லை காதலோடு 'அருகில் வா' என்றழைக்கும் கைகள் இங்கில்லை என் கையால் சூடாக தேநீர் பரிமாற நீ இங்கில்லை உன் பஞ்சு மார்பில் அணைத்த சுகமெல்லாம் இந்தப் பஞ்சுத் தலையணை தருவதில்லை! 'கிச்சு முச்சு' மூட்டும் உன் விரல்கள் கண்ட பின்னால் 'வீணை என்றெண்ணி ஆணை மீட்டுகிறாள் காண்' என்றெப்போதோ எழுதிய கவி வரிகள் நினைவில் வருமடி பிள்ளை! பொய்யான இந்த வாழ்க்கை போய்த் தொலைய வேண்டும் விரைவிலே... பொல்லாத விதி எழுதும் பேனாவை களவு செய்து புதி விதி வரைய வேண்டும் நம் வாழ்விலே!