எம் இலக்கு...

அனுபவிக்க வேண்டுமடி அத்தனையும்! ஆகுதியில் நெய் வார்ப்பது போல் என் ஆவியில் அன்பைச் சொரிந்தாய் என் சோகம் துடைத்தாய்! வாழும் இவ்வுலகில் நாளை கூட சொந்தமில்லை எமக்கு... போகும் வரை கூடி வாழ்வது தானே எம் இலக்கு...! கூழும் பழஞ்சோறும் உண்டு மகிழ்ந்தது ஓர் காலம் ஆலும் அரசும் தரு நிழல் தேடி அதனடி அமர்ந்து நாளும் மகிழ்ந்ததும் ஓர் காலம்! பாழும் போரில் சாவின் நீளும் கரத்தை தட்டி பறந்து வந்து பாதை மறந்து ஏதோ வாழ்கின்றோம் இங்கே... நீயும் நானும் திக்குகள் வெடித்துச் சிதறியதில் துடித்து விழுந்தவர்கள்! உன் கரம் தேடி என் கரம் நீளும் பொழுதில் இறுக்கிப் பிடித்தது நம் வாழ்வின் ஆசை! வாழ்க்கை வசந்தம் தான் வீழுகின்றபோதெல்லாம் தேடி ஒரு கை கண்ணீர் துடைத்தால்!