Kaviyarankam Baner

Saturday, 24 December 2011

காதல் காயம்!

எல்லாம் பொய்யாய்
பழங்கதையாய்
போனபின்....
வீணே திரும்பி வந்து 
இதயத்தில் ஏறி 
விளையாடி 
கண்ணே, மணியே என்று 
கொஞ்சுதலும் 
கூடுமோ? 

காதல் என் 
கை பற்றி 
இழுக்க... 
"சீச்... சீ..."
என
'பட்ட'ஞானம் 
தடுக்க 
பெரும் உணர்ச்சியில் 
தள்ளாடும் 
உள்ளம்! 

நேற்றைய நினைவுகளை
அசை போட்டபடி 
மனசு... 
'சுளீர்' எனும் சவுக்கடி 
தானே அதற்குப்
பரிசு...!

போரிலே 
காயம் சுமந்து 
திரும்பிய 
காளைக்கு 
மாலை...! 

காதலில் 
இதயத்தில் 
புண் சுமந்த எனக்கு 
வாழ்க்கையிது 
மாயை ...

ஒன்று மட்டும் 
புரிகிறது 
நேசிக்கத் தெரிந்தவர்களிடம்....
உள்ளம் புரிந்தவர்களிடம்...
பெண்ணை மதிப்பவர்களிடம்...
காதல் 
கடுமையாகத் தான் 
நடந்து கொள்கின்றது!---------------------
சித்திரை 2009

Saturday, 17 December 2011

மழை


மழை
அடிக்கடி
அழைக்காமலே
எனக்குள் விஸ்வரூபம்
எடுக்கும்
உன்னைப் போல
தூறலாகிக்
கனக்கின்றது!

குளிர்காற்று
காதுமடல் தடவி
தலைகோதும்
போதெல்லாம்
உன் உதடும்
கைகளும்
நினைவில்...

பாதங்கள்
வெள்ளம்
அழைகையில்
உன் கால்
கொலுசின்
ஒலி!

மழைத்துளி
மண்ணில்
மோதிச் சிதறித்
தெறிக்கையில்
மரணத்தின்
வலி!

மழை
எல்லோருக்கும்
பொதுவாய்
கடவுள்
எடுக்கும்
பால பாடம்!

புரிந்தவர்கள்
ஞானம்
பெறுகிறார்கள்!

---------------------
சித்திரை 2009

Saturday, 10 December 2011

சூரியனுக்கு ஏது சாவு?
உடைந்த குரலில்
குயில் ஒன்று கூவியது
வண்ணம் இழந்து
மயில் ஒன்று ஆடியது
குனிந்த தலையாய்
நெல் வயல் ஒன்று வாடியது
அநாதையாகிப் போய்
ஈழ மண் அழுதது!

ஈழம் காண
எழுந்து புறப்பட்ட தோழா்களே
துரோகம் விரித்த வலையில்
துடித்து விழுந்தீா்களோ?

விழி மூடிய
வீரா்களே
சாவை வேண்டி
அணைத்த மறவா்களே
பூவைத் தூவி
நிற்கின்றோம்!
உங்கள் கல்லறைகள்
வீரத்தின் கல்வெட்டுக்கள்!

துவக்கு ஏந்திய
துடிப்பு மிக்கவா்களே
மேற்கில் சூரியன்
மறைந்தால்
நாளை விடியாதோ?

சூரியனுக்கு ஏது
சாவு?
வீரனுக்கு
என்றும் வாழ்வு!

---------------------
குரல் சுபா
கார்த்திகை 27/2011

Friday, 9 December 2011

எல்லாம் நீ..!

தேளாகி என்னைக்
கடிக்கின்றபோதெல்லாம்
உன் மனம் ஏனோ
மறந்துபோகிறது
மருந்து போடவும்
நீ தான்
வரவேணும் என்பதை!

 -------------------
சித்திரை 2009

Friday, 2 December 2011

கோலம் தரும் பாடம்!

கோலம் அம்மா
போட்டது - ஒரு
புள்ளியில் தொடங்கி
பல புள்ளிகள் சேர்த்து
அழகாக உருவானது!

வாழ்க்கையின் வடிவான
தத்துவம் கோலத்திற்குள்
தன் கோலம் மறைத்து
நிற்பது புரியாது
எத்தனை முறை
கடந்து போயிருப்போம்
கோலத்தை!

ஒரு புள்ளியில் கோலம்
ஒரு துளியில் மனிதன்!
கோலத்தை கூட்டி
அள்ளினால் ஒரு
பிடி...

உடலை எரியூட்டி
அள்ளினால்
ஒரு பிடி சாம்பல்!

அதிகாலையில்
மீண்டும் நேற்றுப்
போட்ட இடத்தில்
மறுபடிபடியும்
புதுக் கோலம்!

ம்...
வாழ்க்கை
இப்படித் தான்!

எம் கோலத்தை
நாமே போட முடிகின்ற
சலுகை மட்டும்
நம் கையில்!

-------------------

சித்திரை 2009

Sunday, 27 November 2011

நடந்த கதை!–ஒலி வடிவுடன்…

பிழை நடக்குது என
உணா்ந்தவன் துவக்கை எடுத்தான்
களை பிடுங்க – அவன்
எதிரிகள் தலையை எடுத்தான்
சிலை போல் சிலா் நின்றது கண்டு
விழி சிவந்து நின்றான்
மலை மேல் விழினும்
தலையால் மோதி
உடைப்பாய் என்றான்!

நிலை உயா்ந்து நின்ற சிலா்
மண்ணை விலை
பேசுதல் கண்டு
கையிலைச் சிவன் போல்
உக்கிரம் கொண்டான்!

மண்ணை மீற்க
மறவா் படை அமைத்தான்
கழுத்தில் நஞ்சு கட்டி
யமனின் வேலை குறைத்தான்!

களம் பல ஆடி
பகையோடு மோதி
நகை பல செய்து
நின்றான்!

திகைத்து நின்றான்
பகைவன்
திசை பல ஆள் அனுப்பி
சூழ்ந்து நின்று சூழ்ச்சி
செய்தான்!

எதிர்த்து நின்றான்
தம்பிகளோடு அண்ணன்

இறுதியில் வென்றது
துரோகம்!

வீரம் சுமந்து
நெஞ்சில் ஈழம் சுமந்து
நின்ற மாவீரா்களை
இறுதியில் மண்ணே
சுமந்தது!
தன்னோடு அணைத்து
அழுதது
பகையின் பூட்ஸ்
காலின் அடியில்
புண்பட்டுத் துடித்தது…

நகை செய்து
நின்றான் பகைவன்!

பூவை இழந்து
மானம் இழந்து
அங்கம் இழந்து
“அடுத்தது என்ன?” எனும்
நினைவை இழந்து
சொந்த மண்ணில்
அகதியாய் நின்றான் தமிழன்!

ஓரமாய் இருந்து
ஓங்கி அழுதது தமிழ்
ஆதாரமாய் இருந்து மண்ணில்
அனாதையாகிப் போய்
அழுதது தமிழ்!

“அடுத்தது என்ன?”
துடித்து விழுந்தன
கேள்விகள் பல!

நாடு மாறி நாடு
கதைக்குது
நல்லதாய் என்ன தான்
நடக்குது இங்கே?

கிழக்கு விடியும்
எனக் கிடக்கிறான்
தமிழன்!

வழக்குப் பல போட்டும்
வழிக்கு வரமாட்டினம் போல…

அண்ணன் செய்தது போல
ஏறி உழக்கணும் மீண்டும்
கண்ணன் போல் தூது
நடந்து பயனில்லை!

புரட்சி வெடிக்கணும்
பகைவனுக்கு மிரட்சி
கொடுக்கணும்!

தானாய் எதுவும் நடக்காது
குஞ்சுகள் நாம் சோ்ந்து
நின்றால் வானில்
பருந்துகள் இனிப் பறக்காது!

(ஒலி வடிவம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.)

Thursday, 17 February 2011

யாழ் களக் கிறுக்கல்கள் - XV

கிறுக்கல் 45:

கதிரவனும் வைகறையில் உதயமாகும்
கண்ணீரின் வழித்தடங்கள் மறைந்துபோகும்!

நீளுகின்ற கதிரின் கைகள் பற்று
கவலைகள் போகுமே அற்று!

விரயமாகும் காலத்துளிகளை எண்ணு
உயரமாகும் உனது வாழ்க்கை கண்ணு!

எழுந்து நில்லு நீயும் கொஞ்சம்
விழுந்து கிடந்த புல்லும்
எழுந்து நிற்கும் கோலமது பாரு

துணிந்து செல்ல பாதை பல உண்டு
குனிந்து நீயும் நிற்பது ஏன் இங்கு?

 

கிறுக்கல் 46:

பலதாய் அடையாளம் கொண்டே
அது இதுவெனக்
கை காட்டுவார்
கடவுளை!

கல்லன்றி ஏதும் காணாது
எது வெனத் தேடுவார்
மூடரும்!

உள்நின்று சிரிப்பான்
கடவுள்
உனக்குள் நின்று சிரிப்பான்
கடவுள்

கட உள்
காணாத காட்சி காணலாம்
கண்டபின்
ஆனந்தக் கூத்தாடலாம்!

Monday, 24 January 2011

கசங்கிய காகிதங்களோடு…! - VII

திருவிழா
இது
தோ்தல்
திருவழா!

சாமிகளுக்குப் பதில்
ஆசாமிகள் ஆங்காங்கே
தோன்றி
தரிசனம் தந்தனா்

வாக்குக்
கேட்டு
வாக்கிங்
வந்தனா்!

**************************

சேவல்
பாடியது
திருப்பள்ளியெழுச்சி!
சூரியன்
சோம்பல்
முறித்தான்
மேகப் போர்வையை
விலத்தி!

பூவிதழ்
வருடி
தென்றல்
புன்னகை
செய்தது!

சில
இலைகள்
முகம்
வோ்த்து
முணுமுணுத்தன!

தலை
துவட்ட
துணி
கேட்டு
கை
அசைத்தன!

**************************

நீல வானம்
நிறையச்
சன்னம்!
துவக்கு
கக்கிய
இரத்தம்!

காளமேகம்
காணவேண்டும்
"இம்" என்றால்
எழு நூறும்
"அம்" என்றால்
ஆயிரமும்
தாண்டி,
"டும்" என்றால்
இன்னும் பல
நூறு பாடலாம்!

Related Posts Plugin for WordPress, Blogger...
பின்னூட்டல்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்