யாழ் களக் கிறுக்கல்கள் - XII
கிறுக்கல் 38:
எப்போது அடி விழும்
எப்போது கை சுடும்
என்று இப்போது
நாம் அறியோம்...
நடப்பது
குருசேஷ்த்திரம் அல்ல..
பொல்லாத குளவிகள்
யாரோ எறிந்த கல்லில்
நில்லாது பறக்கின்றன!
விழுகின்றனவே
சில இலைகள்
என்று
மரம் அழுதால்
புதிதாக இலைகள்
துளிர்க்காது...!
சரித்திரம்
மறுபடி திரும்பும்
அதுவரை
பொறுத்திருந்தால்
உண்மை விளங்கும்!
-----------------
கிறுக்கல் 39:
துளிரானாய்
பின் மலரானாய்
என் மனதின்
நினைவெல்லாம்
நீயே ஆனாய்!
கனவானாய்
கனவில் வரும்
காட்சி நீயானாய்!
துணையானாய்
துவளும் போதெல்லாம்
எனைத் தாங்கும்
சுமை கல்லானாய்!
அழும் போதெல்லாம்
கண்ணீர் துடைக்கும
கையானாய்
விழும் போதெல்லாம்
மார்பில் தாங்கி
தாயானாய்!
தேவ தேவா
ஒரு போதும்
பிரிவு வாராத
வரம் தாராய்!
-----------------
கிறுக்கல் 40:
நிலம்
அநாதையாகிப் போய்
அழுதது...
யார் யாரோ
மிதித்துச் செல்கின்ற
வலி தாங்கி
வேறெதற்கோ
நிலம் அழுதது...!
நிலத்தைப் பிரிவது
மனிதர்களுக்கு மட்டும்
துக்கமல்ல...
பரம்பரையாய் வாழ்ந்த
மனிதர்களைப் பிரிவது
கண்டு நிலமும்
துக்கப்பட்டது...
வயலாகி
வடலி முளைத்த
வளவாகி
பூ மணத்த தோட்டமாகி
எம் வாழ்வோடு
கைகோர்த்த நிலம்
இப்போதெல்லாம்
மெட்டந்தலையோடு முணுமுணுக்கும்
மரங்களின் சோகம் கேட்டு
தானும் அழுதது...!
பல இடங்களில்
நிலத்தில் ஈரமிருப்பது
அதன் கண்ணீரை
அடையாளப்படுத்துகிறது!
சில இடங்கிளில்
காய்ந்து போய்
நிலம் இருப்பது
அழுது அழுது
அதன் கண்ணீர் வற்றியதை
அடையாளப்படுத்துகிறது!
--------------------------------------
தற்காலிகமாக முற்றுப் பெறுகிறது யாழ்க் களக் கிறுக்கல்கள்.
Comments