பூக்கள்
பூக்கள்,
மரங்கள்
தேனள்ளி வழங்கும்
குடங்கள்
வழிகின்ற
தேனுண்ண
ரீங்காரிக்கும்
வண்டுகள்
சில பூக்கள்
வண்டுகளின்
வருகைக்காக
காத்திருந்து
உடல் வாடி
உதிர்கின்றன...
சில பூக்கள்
வண்டுகளின்
ஸ்பரிச சுகத்தில்
மெய் சிலிர்த்து
சந்தோசமாய்
மடிகின்றன...
சில பூக்கள்
காற்றின்
பலாத்கார உறவில்
வேண்டாமென
தலையசைத்து
வேதனையோடு
மடிகின்றன
பூக்கள்
பூசைக்காகவென்று
யார் சொன்னது?
உண்மையில்
பூக்கள் மரங்களின்
புணர்ச்சி
உறுப்புக்கள்!
மரங்களின்
மகிழ்ச்சிக்காக
மலரும்
பூக்களை
மனிதர்கள் தங்கள்
மனங்களின் மகிழ்ச்சிக்காக
ரசிப்பதில்
தவறில்லை
கரங்கள் கொண்டு
காம்பு முறித்து
கிள்ளியெடுக்கும்
போதெல்லாம்
மரங்களும் கண்ணீர்
வடிக்கும் என்பதை மறவாதீர்!
கடவுளுக்கு
அர்ச்சிக்கப்படும்
பூக்கள் எல்லாம்
ஏதோ ஒரு
புரியாத மொழியில்
புலம்புவதைக் கேட்கக்கூடாதென்றே
கடவுளும் கல்லானார்!
Comments