புத்தன் போய் விட்டான்!
போதி மரத்துப்
புத்தன் ஏதோ
மோதி எழுந்தான்!
கூவி வந்த
குண்டொன்றின்
சன்னம் தன் தேகம்
கீறி இரத்தம்
வரக் கண்டான்!
தேடி ஒரு பிக்குவைப்
பிடித்து
நடப்பதென்ன என்று
அறியக் கேட்டான்
ஆதி முதல்
அத்தனையும் உரைத்த
பிக்கு...
அவசரமாய் போக வேண்டும்
என்று ஓடிப் போனான்!
புரியாத புத்தன்
அவனைத் தொடர்ந்து
போனான்...
என்ன ஒரு
முரண்பாடு...!
"புத்தனைத் தொடர்ந்து
பிக்குகள் போவதிருக்க
பிக்குவைத் தொடர்ந்து
புத்தன் போவதா...?"
என்ற தத்துவ
விசாரணை விடுத்து
நடப்பதைக் கவனிக்க...
ஓடிப் போன
அந்தப் பிக்கு
போருக்கு ஆதரவாய்
கோஷம் போட்ட
கூட்டத்தோடு சேர்ந்து
தானும் கோஷம்
போட்டான்...!
சாந்தம்
தவழவேண்டிய
முகத்தில்...
ஒரு வெறித்தனம்...
நரித்தனம்...
பூமியை
இரத்தத்தால் கழுவிய
அசோக மன்னனை
ஒரு புத்த பிக்கு
அன்பால் கழுவினான்!
அவனை நல்வழிப்
படுத்தினான்...!
நினைத்துப் பார்த்த
புத்தன்...
மறுபடியும் ஞானம்
பெற்றான்!
அரச மரங்களின்
அடியில் இருப்பதை
அடியோடு விட்டான்!
யாரேனும் புத்தன்
அரச மரங்களின் அடியில்
இருக்கக் கண்டால்
அது 'வெறும் கல்'
என்று உணர்க!
புத்தன் எப்போதோ
போய் விட்டான்!
-----------------------------------
02-11-2008
படம் உபயம் : Eranga Jayawardena/The Associated Press
Comments