நதியோடு...
ஓடுகிறது நதி
சலனமேதுமின்றி...
யாரோ எறிந்த கல்
நதியில் எழுதியது
விளங்க முடியாப்
புதுக் கவிதை...!
படித்துப் பார்த்த
பாமரன் சொன்னான்
"அலை" அதுவென்று
உற்றுப் பார்த்து
கவிஞன் சொன்னான்
"நதி நடக்கின்ற
பாதச் சுவட்டை
எறிந்த கல்
காட்டிக் கொடுத்தது" என்று!
அருகில் வந்த
அறிவாளி சொன்னான்
"கவனிக்கச் சங்கதி பல உண்டு
வேறு திசை நோக்கி
நடக்க இந்த வையம்
சிறக்குமென்று..."
இவை ஏதுமறியாது
சலனமின்றி
ஓடுகிறது நதி!
Comments