மங்கை இவள் பேசினால்(ள்)...
நானிங்கு
காத்திருப்பது
காதலனுக்காக அல்ல
கவிஞரே...
கடல் அலை
மெல்லக்
கால் நனைக்கும்
சுகத்திற்காக...
மரணித்து விளையாடுதல்
பற்றி எங்கேனும்
அறிந்ததுண்டா
கவிஞரே?
பாரும் கடலலையை
மரணம் அதற்கு
விளையாட்டு!
அருகில் நெருங்கி
வாரும் கவிஞரே
இப்படி அமர்ந்து
பேசலாம்...
உப்புக் கலந்த
காற்று...
அலையடிக்கும்
கடல்...
காலுக்கு இதம் தரும்
கடற்கரை மணல்...
சும்மா இராமல்
கடலுக்குள் விழுந்தெழும்பும்
சூரியன்...
என கண்முன் விரியும்
இயற்கையை
கொண்டாடாமல்
ஏதோ வாழ்கின்றோம்!
இந்த உலகம்
பரபரப்புக்குள் சிக்கி
இதயங்களை
இளைப்பாற விடுவதில்லை...
மெல்லிய உணர்வுகளின்
மகத்துவமும்
புரிவதில்லை...
என்ன கவிஞரே
அப்படிப் பார்க்கின்றீர்?
என் பேச்சில்
வியக்க எதுவுமில்லை...
விடை தெரியாத
கேள்விகளோடு
மனசு தவிக்கிறது!
அது இருக்க
கவிஞரே...
ஒன்று கேட்கின்றேன்
பதில் சொல்ல
வேண்டும்!
என் உதடு
எழுதும் புன்னகையை
விட அழகாய்
உம்மால் கவி
புனைய முடியுமா?
முடியுமெனத்
தலையசைத்து
நானும்
புன்னகைத்தேன்!
புரிந்தவளாக
கடற்சோகிகள்
பல ஒன்றாய்ச்
சிதறியது போலச்
சிரித்தாள்!
Comments