புன்னகை
"வாய்விட்டு ஒருமுறை சிரிப்போம்"
இதிலென்ன கஞ்சத் தனம்?
யார் வீட்டு சங்கதியேனும்
சந்திக்கு வந்தால்
சீர்கெட்டுப் போனதப்பா
அக்குடும்பமென
கொடுப்புக்குள் சிரிப்பதுவும்
வார்த்தையாலே வாள் சண்டை
பிடிப்பதுவும் இருக்கட்டும்...
"ஊர் ரெண்டுபட்டால்
கூத்தாடிக்கு கொண்டாட்டம்" எனும்
பழைய பழ மொழியை
எத்தனை நாள் காவடி தூக்குவாய்?
யோசித்துப் பார்...
கேலிப் பேச்சுக்கு மட்டும்
உதடுகளுக்கு சிரிக்கக்
கற்றுக் கொடுத்தாய்!
சிந்தனை மாற்றடா
சந்தனக் காற்று
மேனி தடுவுகையில்
காற்றின் கைகளை தட்டிவிட்டு
மெதுவாய் புன்னகை
அப்படியே நிலைக் கண்ணாடியில்
நின்றுன் மேனி ரசி
எத்தனை அழகடா
நீ
புன்னகைக்கும் போது என
உனை நீயே ரசி!
கொஞ்ச நாளில் மறப்பாய்
கேலிச் சிரிப்பை
புன்னகைக்க மட்டுமே
உதடுகளுக்கு உத்தரவிடுவாய்!
ஒன்று தெரி்ந்து கொள்
உன் உதடுகள் புன்னகைக்கும்
போதெல்லாம்
நீ அழகாவாய்...
உன்னைப் பார்ப்பவனும்
அழகாவான்...
ஆக
வீட்டுக்கு வரவேற்பறை போல
மனிதனுக்குப்
புன்னகை...
ஆகவே தயங்காது
இன்றே நீயும்
புன்னகை...!
Comments