Kaviyarankam Baner

Tuesday, 12 February 2008

தேவலோகத்தில் காதல் விழா!

j0436221

வானத்தில்
உயர் பிரமுகர்கள்
வாசம் செய்யும்
தெருவொன்றை
தேவதச்சனின் கைவண்ணம்
பளிச்சிடும் மாட மாளிகைகள்
அலங்கரித்தன...!

வீதியில் வெளிச்சம் தர
தொங்கவிடப்பட்ட
நட்சத்திரங்கள் தமக்குள்
ஏதோ கதை பேசிச்
சிரித்தன...

ஒரு மாளிகை மட்டும்
மெல்லிய ஒளியில்
தன் மேனி
பதுக்கியிருந்தது!
நுழைவாயிலில்
கரும்புவில்லோடு இதயம்
பொறித்த கொடியொன்று
காற்றில் பட  படத்தது!

அருகில் நெருங்கிச் சென்றால்
மல்லிகை பன்னீர்
இதர வாசனைத்
திரவியங்களின் கூட்டில்
உருவான வாசனை
நுகர நுகர
இன்பம் தந்தது!

கதவு திறந்து
உள்ளே செல்வோம்
காவல் யாரும்
கண்ணில் படவேயில்லை...

இருட்டை மெல்ல
இளக வைத்த
ஒரு வித ஒளி
உள்ளே...

மெல்லிய பேச்சொலியன்றி
வேறெந்த அரவமும்
காணோம்!

யாரென அறியும் ஆவலில்
கண் களால் எங்கும்
துளாவித் தேடினால்...

உயர்ரகப் பட்டினால்
மூடிய மஞ்சம்
ஆங்காங்கே பூக்களின்
சிதறல்...
மஞ்சத்தின் மேல்
இரு காதல் கிளிகள்!

காதலின் கடவுளும்
கடவுளின் காதலியும்!

மன்மதன் மார்பில்
தலை சாய்த்து
படுத்திருந்தாள்
அழகுக் கிளி ரதி!

அவள் மேவாய்
உயர்த்தி
கண்களில் ஏதோ
தேடினான் மதன்!

துடிக்கின்ற அவள்
இதழில்
ஒத்தடச் சிகிச்சை
செய்தான்...
கண்மூடி தனக்குள்
உருகினாள்
ரதி...

"அத்தான்..."
"ம்..."
"சேதி தெரியுமா...?"
அவள் கூந்தல்
கோதியவண்ணம்,
"என்ன?" என்றான் மதன்
"மண்ணுலகில் காதலுக்கு
விழா எடுக்கிறார்களாம்..."
"சரி அதற்கென்ன...?"
மோகத் தீ அணைக்கின்ற
அவள் பேச்சுப் பிடிக்காமல்
சலித்தான் மதன்...

"கொஞ்சுவதிருக்கட்டும்
அத்தான்... என் பேச்சை
கேட்கக் கூடாதா?"
பொய்க் கோபத்தில்
அவன் இதழ் எச்சில்
துடைத்தாள் அவள்...!
"சரி கேட்கிறேன்"
அக்கறை காட்டினான்
அவன்...

"மண்ணுலகில் மாந்தர்
நாளொன்று ஒதுக்கி
காதலுக்கு விழா
எடுக்கின்றனர்...
தேவ உலகாம்
நம் உலகிலும்
ஏன் எடுக்கக் கூடாது
ஓர் விழா...?"
வினவினாள்
அழகு ரதி...
"தினமும் நாம்
நடாத்தும் காதல்
கூத்து போதாதென்று
விழா வேறா...?"
அவள் காதில்
கிசு கிசுத்தான் மதன்!
கரும்பு முறித்து
அடிக்க ஓங்கினாள்
ரதி - பின்
ஓதினாள் தலையணை
மந்திரம்!

விடிந்தெழுந்து
அவள் இதழமுதம்
அருந்தி
ஓலை பல வரைந்தான்
மதன்...
அதில்...
"மன்மதன் எழுதிக் கொள்வது,
மகேசன் முதல்
மகாவிஷ்ணு வரை
சகலருக்கும் பொதுவான
செய்தி...
இந்திர சபையின்
இருபத்திரெண்டாவது
மண்டபத்தில்
தேவ மங்கையர்
ஊர்வசி, ரதி, மேனகை
ரம்பை போன்றவர்களின்
அழகு நாட்டியத்துடன்
காதலுக்கு விழா ஒன்று
வருகின்ற பதினாங்காம்
நாள் எடுக்கப்படும்!
அனைவரும் வருகை
தந்து சிறப்பிக்கவும்
சிறப்புக் கோரிக்கைகளை
என்னிடம் சமர்ப்பிக்கலாம்
உடன் ஆவன செய்யப்பட்டு
காதலின் தேரில்
வலம் வர
தேவி ரதி சமேதராக
நான் வரம் அருள்வேன்
இப்படிக்கு,
மன்மதன்"

j0436363

0 பின்னூட்டல்கள்:

Related Posts Plugin for WordPress, Blogger...
பின்னூட்டல்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்