நம் காதல்
முற்றத்து மல்லிகை
போலுந்தன் புன்னகை
என் மனக் கவலையாற்ற
அது தரும் நம்பிக்கை!
கற்றது கனக்க
ஆனாலும் அதில்
என்ன இருக்கு?
உன்னிரு விழி போடும்
கேள்விக்கு பதில் தேடி
நிற்குமே பணிந்து!
உன்மடி மெத்தை போதும்
உலகமிது மறக்க
தாய் மடிக்கடுத்து
பெண் மடி தேடும்
ஆண் மனம் இருக்கு!
பேசிச் சிரிப்பதுவும்
பின் ஏன் சிரித்தாய் என
கோபத் தீ கிழித்துப்
போடுவதும்...
பாசத்தில் ஊறும்
நம் உள்ளங்களின்
உவப்பான விளையாட்டாகும்!
மாடத்தில் நின்று
மலர்க் கணை
எய்யவில்லை நீ...
பின் தொடர்ந்து கூந்தல்
அழகோடு வேறழகு வர்ணித்து
கூவிப் பிதற்றவில்லை நான்!
ஏதோவொரு கணத்தில்
எல்லைகளற்ற வெளியில்
காதலெனும் ஓர் புள்ளியில்
நிகழ்ந்தது நம் சந்திப்பு!
தொடர்ந்து நடந்த
கதை
ஒருவர் மேல் ஒருவர்
படர்ந்து மகிழ்ந்த
கதை எனப் பல
கதை இருக்கு
நினைத்து மகிழ...!
ஒரு கறுப்பிரவின்
பின்
ஒளி அள்ளித் தரும்
கதிரின் கை!
எம் கவலை
துடைக்க
நீளும் ஒரு கை!
அதுவரை பொறுத்திரு
கண்ணே...
நெய்யப் பல
கனவிருக்கு!
Comments