கலங்காதே கண்ணே...
எங்கிருந்தோ எனை
ஆழ்கின்ற
என்னவளே...
முன்னொருபோதும்
இத்தனை சந்தோசம்
அடைந்தவனில்லை நான்!
பின்பு ஒருநாள்
தேவதை நீ வருவாய் எனும்
அசரீரி ஏதும்
கேட்டதில்லை...
ஆனாலும்
உன் தரிசனம்
கிடைத்தது...
காதலெனும்
புதுசுகம் மலர்ந்தது!
நீ இல்லாத போது
வலிக்கின்ற நெஞ்சம்
அருகில் வந்தபின்
கவனிப்பதே இல்லை
பிரிவின் போது தான்
உள்ளிருக்கும்
காதல் விழித்துக்
கொள்கிறது!
கண்ணே கலங்காதே...
நகருகின்ற நாட்களில்
எம் வாழ்வு எங்கே என்று
தேடாதே...
நாட்களின் வரையறைக்குள்
இல்லையடி நம் வாழ்வு!
பூக்களைப் பார்
மாலையில் மரணம்
என்றாலும்
காலையில் இதழ்விரித்துச்
சிரிக்கின்ற பக்குவம் அதற்கு...
அதனால் தானடி
மீ்ண்டும் மறுநாள் காலை
மறுபடியும் உயிர்த்தெழும்!
கவனி...
பூக்களுக்கு மரணமில்லை!
ஆகவே,
நாட்களை எண்ணி
கைவிரல் சோராதே!
மறுநிமிட சந்தோசத்திற்காய்
இந்த நிமிடம் கொல்லாதே!
கண்ணே...
நெஞ்சில் இருத்தி
நினைக்க
கற்கண்டு நினைவுகள்
நிறைய உண்டு!
யன்னல் திற
இதமான காற்றுன்
இதயம் தடவட்டும்
ஏனெனில்
அந்தக் காற்றைத் தான்
நானும் சுவாசிக்க வேண்டும்!
Comments