பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!

1997 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பொங்கல் கவியரங்கில் பாடப்பட்ட கவிதை இது. பொருத்தப்பாடு கருதி இப்போது பதிகின்றேன்.

 

புது வருஷம் ஒன்று புஷ்பமாகுது - அதில்
ஒரு நிமிஷம் கூட அர்த்தமாகுது
ஆண்டு பல கண்டோம் - அதில்
என்ன சுகம் கொண்டோம்
வேண்டும் வரம் வேண்டி நின்றோம்
'97 இன் உதயத்தையே
தொழுது நின்றோம்

தையே நீ
கிழிந்த மனங்களை தையேன்
வெய்யோன் கண்டு அஞ்சாதே
அவனுன்னை வையான்
பையவே வருவாய்
நல்லதே தருவாய்
மின்னலே உன்னைத் தொழுதேன்
என்னுள்ளே புகுவாய்
கோடிப் பிரகாசம் கூட்டுவாய்

'தை' என்ற தையலுக்கு
தாலி கட்டவென்றே
'வெய்' என்ன வெய்யோனும்
வேளை பார்த்து நின்றான்
மை பூசும் தையலவள்
சுடர் வீசும் சுந்தர புருஷனுடன்
ஜோடி சேர்ந்து நின்றாள்
'பொங்கல்' என்னும்
இன்பவிழா தந்தாள்

புதுநெல் அரிந்தெடுத்துப்
பக்குவமாய் குற்றிப் புடைத்து
குறுநெல் நீக்கி
புதுப் பானை தனை அடுப்பேற்றி
பால் பொங்க...
அது கண்டு...
மனம் துள்ள...

பெண்டுடன் வண்டுறங்கும்
புதுமலரில் பட்டுச் சிரிக்கும்
சுடர் கதிரை உண்டி
உண்ண, அண்டி வருகவென்று
அருகழைத்து
மண்டி நிற்கும் மகிழ்ச்சி தன்னைக்
கொட்டி பொங்கல் உண்ணச்
செய்யும் உழவரைக்
கண்டு மகிழும் கதிரும்
அவன் அருளால் மறையும்
அவர்தம் வாழ்க்கைத் துயரும்!

பொங்கும் நாளில் எங்கும்
தங்கும் இன்பம்
சுடரும் ஒளியில் சுட்டுப்
பொசுங்கும் துன்பம்
மலரும் மலரில்
தெரியும் எங்கள் வாழ்க்கை
அலறும் தீமை
ஓடி மறையும் சேய்மை
"ஆகா..." இதுவென்ன
புதுமை என்று மனம் பாடும்
கவிதை
உலகமெல்லாம் தொழுது
நிற்கும் அந்தச்
சுந்தரக் கதிரை!

ஆண்டாண்டாய் எதிர்பார்த்த
அத்தனையும்
புத்தாண்டாய்ப் பூத்திட்ட
'97 இன் வசந்தத்தில்
சுகந்தமாய் சுடர்கவென்று
தொழுது நிற்போம்
அந்தச் சுடர் ஒளியை

தையென்ற தையலின்
உயிர் போன்ற கதிரே
நீ தானே எம்மவர்க்கு
கதியே என இறைஞ்சி
நிற்போம் இன்னருள்ச் சுடரை!

சூழும் யுத்தத்தில் சாகும்
உயிரை
வாழும் உயிரென வரம்
அருள்வாய் என
வேண்டி நிற்போம்
அந்த திங்களவனின்
பள்ளித் தோழனை!

செயற்கையின் கடைக்கண்
பார்வையில் இழந்தோம்
எங்கள் மனப் போர்வையை
இயற்கையாய் வீசும் சுடரொளியே
செயற்கையாய் பூசும்
ஒவ்வொன்றையும்
குப்பையாய் கொழுத்து
எம்மை சந்தோச
வெள்ளத்தில் அழுத்து!

பகட்டாய் வெளியில்
பல தெரியும்
உள்ளத்தில் உருளுகின்ற
சோகப் புயல் யாருக்குப்
புரியும்?

நாளை துவக்கோடு தான்
பிள்ளை பிறக்கும்
அது கண்டு ஒவ்வொருவர்
மனமும் அதிர்ச்சியால்
பிளக்கும்...!

யுத்த காளான்கள்
உலகில் முளைக்கின்றபோது
வாழ்க்கை எப்படிச்
சிறக்கும்?

இன்னும்
சொற்ப காலத்தில்
மனித வாழ்க்கையே
கசக்கும்

கண்டு விட்ட கவலையை
எந்த மனித மனம் மறக்கும்?
கதிரே இனி உன்னையல்லோ
தினம் தினம் துதிக்கும்!

முக்கனியாய் மூன்று
தமிழ் ஓங்கும்
சர்க்கரையாய் சந்தோசம்
உள்ளங்களில் தேங்கும்

இளங்கரும்பாய் இன்னல் கூட
மறைவிடத்தில் தங்கும்
இன்பப் பாட்டினையே
உயிர் பாடும் எங்கும்!

இத்தனையும் வாய்க்கவே
பொங்கல் பானை பொங்கும்

பால் பொங்கும் வேகத்தில்
இன்னல்கள் அழிந்து போகும்
கோலங்கள் கண்களில்
மின்னிடட்டும்

இளவேனில் வண்டியேறி
இளசுகள் காதல் பாட்டு
பாடிடட்டும்

நின்று பல ஆண்டு
ஆண்டு விட்ட சோகம்
மண்ணோடு மண்ணாய்
மரித்து விடட்டும்

கண்ணோடு கண் கவ்வி
உயிரோடு உயிர் கலந்து
ஜோடியோடு கூடி
வாழும் யோகமான வாழ்க்கையொன்று
வேகமாக மண்ணினில்
நிலைத்திடட்டும்

உலக உயிரனைத்தும்
ஊற்றெடுக்கும் அன்பருவியில்
மூழ்கி மூழ்கி
இன்பம்
மாந்தி மாந்தி
எங்கும் நிலவிடட்டும்
சாந்தி சாந்தி!

பொங்குகின்ற பொங்கலிலே
மனித நேயம் மலிந்து கிடக்கட்டும்
எங்கள் மனங்களிலே

சங்கெடுத்து எங்கும்
முழங்கு...
'சண்டை' என்ற ஒன்றை
உயிரினி அறியாதென
இயம்பு!

சமாதானமாய் வாழவே
தீர்வுப் பொதி ஒன்று
தீட்டி விட்டோம் - அதில்
திட்டமாய் மூன்று
தீர்வினையே குறித்து விட்டோம்
ஒன்று அன்பு
இரண்டு அன்பு
மூன்று அன்பு...!

எங்கும் அன்பு
அன்பே வடிவம் சிவம்
இனி அகிலமே அன்பின்
வடிவம்...!
உயிரே அதில் தெய்வம்
ஒவ்வொன்றை ஒவ்வொன்றும்
வணங்கும்
சந்தோச வாழ்க்கையே
அதிலிருந்து தொடங்கும்!

பொங்கலோ... பொங்கல்...
என ஒவ்வொருவர்
வாயும் உச்சரிக்கும்
அத்தனை இன்ப சாகரத்தில்
மூழ்குவதால் எந்தன்
மூச்சடைக்கும்!

நிலவும் நிலவும் உலவும்
உலகமொன்று புதிதாய்க்
கருத்தரிக்கும் - அதில்
புத்தொளி கூடி
ஒவ்வொருவர் உயிரையும்
ஆசீர்வதிக்கும்!

போருக்கு ஒரு கல்லறை
ஒவ்வொருவர் மனவறையிலும்
கட்டப்படும்
ஆகவே,
செத்துவிட்ட போர்தன்னை
உயிர் என்றென்றும்
நினைக்காது சுகம்
கொண்டு சுகித்திருக்கும்!

பொங்குக பொங்கல் - அதில்
ஓங்குக இன்பம்
வளமான வாழ்வொன்று
விரைவாக நீவீர் காண
உளமார்ந்த பொங்கல்
வாழ்த்துக்கள்
எங்கும் தை... த... தை...
தாளங்கள்
சென்று வருகிறேன்
அன்பாய் விடை
கூறுங்கள்...

 

தை, 1997

------------------------------------------------------------------------

என்னை ஒவ்வொரு கவியரங்கிலும் அழைத்து உற்சாகப்படுத்தி கவிதை பாடச் செய்த செல்வி சிறிகுமாரி அவர்களுக்கு என்றென்றும் என் நன்றிகள்... _/\_

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்