சுடும் நினைவு
கண் மூடி உள் நினைக்க
படம் போல
உன் நினைவு
விரியும்!
தடம் மாறி
பல மனம் மாறி
அலைந்த என்னை
உன்னோடு
அணைத்துக் கொண்டாய்
உள்ளத்தில் அமிர்தத்தை
தெளித்துச் சென்றாய்
வனம் போல் இந்த மனம்
பல மிருகங்கள் அதில்
நடமாடும்
உன்னிரு கரம் பட்டதாலே
அவை சாந்தமாகிச்
சாதுக்களான விந்தையென்ன?
உருவத்து அழகில்
மயங்குவது சில
மாதத்தில் முடியும்
உள்ளத்து அழகில்
வாழ்நாள் உள்ளளவும்
மயங்கலாம் என்று
உன்னாலே அறிந்தேன்!
நில்லாத உயிர்
நிலைக்காத வாழ்க்கை
எல்லாமே புரிகிறது
நீயில்லாத வாழ்வை
நினைக்க
நினைவெல்லாம் சுடுகிறது!
திட்டுவது போல்
பாசாங்கு செய்வதும்
சற்றே என் முகம் வாடினால்
'என்னடா' என்றென்னைத்
தழுவி அணைப்பதும்
'இன்னும் கொஞ்சம்
திட்டேனடி' என்று
ஏங்க வைக்குமே!
சொல்லச் சொல்ல
ஊறுதடி
பல நினைவு
உன்னை நினைத்திருக்கின்ற
சுகம் பெரிது!
Comments
தொடர்ந்தும் எழுதுங்கள்