கற்கண்டு இதழ் சுவைப்பது எப்போது?
துடைத்து வைத்த
கண்ணாடி போல
இருந்ததடி
என் உள்ளம்!
இப்போதெல்லாம்
அதில்
தெரிகின்றதடி
உன் விம்பம்!
சலனம் இன்றிப்
பயணித்தவன் நான்
என்னுள்ளே நீ
வந்தபின்
உன் பெயரை
மனனம் செய்யப்
பழகிக் கொண்டவன்
மரணம் வரும்
எப்போதோ
நானறியேன்
அதுவரை
சரணம் என்றுன்னை
அணைப்பேன்
ஊரெல்லாம்
ஏதேதோ கதைக்க
நீயும் நானும்
வாய்மூடி
மெளனிகளாவோம்
உன் மனம்
நானறிய
என் மனம்
நீயறிய
உதவாத கதையெல்லாம்
எமக்கெதற்கு?
சிந்தை சிதறாது
காதலி
முந்தை வினையெல்லாம்
கூடி
எம்மை அலைக்கழிக்கும்
பந்தை பக்குவமாய்
வெட்டி விளையாடும்
கால்பந்து வீரனாவோம்!
விந்தை எதுவுமின்றி
விரண்டோடும்
வினையெல்லாம்!
கற்கண்டு இதழ்
அங்கிருக்க
கண்ணே நான்
இங்கிருக்க
எப்போது
தமிழ்ச் சொற்கொண்டு
விளையாடி
உன்மேல் தள்ளாடி
விழுவது?
என்னப்பன்
விநாயகன்
மனசு வைக்கவேணும்
தன் தம்பிக்கு
உதவியது போல்!
Comments