Kaviyarankam Baner

Thursday, 19 April 2007

நெஞ்சு பொறுக்குதில்லையே....
ரசமான பாடலொன்றை
சுகமாக ரசிக்கையிலே
மெதுவாக வயிற்றினைப்
பசி கிள்ளும்
இது தான் சமயமென்றறிந்து
அந்த நாள் நினைவுகள்
நெஞ்சினுள் விம்மும்

காலைக் கருக்கலில் தான் எழுந்து
சோலைக் குயிலின் நாதமதில்
சிந்தை குளிர்ந்து...
வேலைக்குள் விழுந்து
காலைக்குள் உயிர் மீண்ட
உத்தமனை
ஒளிக்கரம் நீட்டி
உலகுயிர் தன்னை
உறக்கத்தின்று தட்டியெழுப்பும்
தங்கமென தக தகக்கும்
கதிரவனை
"வா...வா..." என் தந்தாய்
போல்வாய் என நாக்குழறி
என் கரம் நீட்டி என்னுயிர்
தன்னில் சந்தோஷக் கலவையிட்டு
வரவேற்ற சுகமான நாளதுவும்
சுட்டுப் பொசுங்கிப் போனதுவே...!

மொட்டு மலரும் படபடவெனச்
சிறகடிக்கும் சிட்டு
வானவீதியில் உயரும்
கட்டுக் காவல் தன்னில் இரவைக்
கழித்த மந்தையினம்
சிந்தை மகிழ்ந்து
பச்சை நதியெனப் பாயும்
வயல் தன்னில்
தம் உறவைக் கூடி
உல்லாசம் போகும்

புல்லினம் தன்னோடு கைகுலுக்கி
தென்றல் குசலம் கேட்கும்

மெல்லினம் ஆன இடையினம்
இறுக்கமாய் தண்ணீர்க் குடந்தனை
இடைதனில் அணைத்து
மெல்லெனக் கதைபேசி
கொல்லெனச் சிரித்துப் போகும்

நில்லெனக் கூவி தம் நண்பர்
தம்மோடு கரம் சேர்த்து
சிறார் இனம் பள்ளி சேரும்
மெல்லென மறைந்த அந்தநாள்
வாழ்வு தன்மேனி எங்கே
பதுக்கியதோ...?
கல்லென இதயம் கொண்டால்
அன்றோ மெல்லென மறக்கலாம்
அந்தநாள் வாழ்வை

சுவர்க்க வாசலில் சுடர்விட்ட
தீபம் ... நரகத்தின்
நாற்றக் காற்றில் நாசிகளை
மூடிக் கொண்டது பாவம்!

நெல்வயல் நாடி
களை எடுக்கும் கலை - எம்
வாழ்வுயர நாம்
கொடுத்த விலை

கள்ளென்றும் ஙொங்கென்றும்
நூறு பயன் தந்திட்ட
பனை எங்கே?
தேங்கும் ஓட்டுக்குள் தெவிட்டாத
நீர் அடைத்து
வாய் குமட்டாத
இளநீர் ஈய்ந்த
தென்னையதுவும் எங்கே?

கொய்யா, ஈச்சு என
மெய்யாய் நின்ற
பலநூறு மரங்களை இனி நாம்
காண்பது பொய்யாய் ஆகுமோ?

காதோரம் கன கதை பேசி
கள்ளால் மயங்குவதாய்
கற்பனை நீர் வார்த்து
சொல்லாமல் போனதந்த
சுகமான நாளதுவும்
இனி என்றும் இல்லாமல்
ஆகிடுமோ?

பட்டிக் காடு தான் அது!
ஆயினும்
பண்போடு, அன்போடு
பகட்டில்லா சுவர்க்க சுகம்
தந்த உன்னத
வாழ்வது கண்டீர்!

சடுகுடு, கிட்டிப்புள்ளு, தாச்சிமறித்தல்
என விளையாடிய
விளையாட்டுகளென்ன?
பட்டம்விட்டு சிறகடித்துப் பறந்த
சிட்டு உள்ளம் சிறகிழந்தது தான் என்ன?

நாச்சிமார், வயிரவர், ஆலடிப் பிள்ளையார்
இப்படிப் பல கடவுள்கள்
வடை மாலை, மோதகம்
எனப் பல பண்டங்கள்
நேர்த்தி வைத்து நோன்பிருந்து
நோய் நொடிதான் நீங்கி
சீர் பல பெற்ற
சிறப்பான வாழ்வது தான் எங்கே?

அங்கமொன்று அறுக்கப்பட்டதடா!
எம் ... ஊரை நாம் பிரிந்த
துக்கமடா!

என்னென்று சொல்வேன்
எங்கு சொல்வேன்?
முன் நின்று கும்பிட்டுக்
கூத்தாடி...
மனதை குமைகின்றவெல்லாம்
மள மளவென்று சொல்ல
என்னூர்க் கோயிலை
நான் நாட நாதியில்லை

உறவெல்லாம் ஓர் இரவுக்குள்
சென்ற திக்கும் நான் அறியேன்

வீட்டோட நின்ற கறவைப் பசுவும்
"ம்பா..." என்றது கத்துகின்ற சுதியும்
"அம்போ..." என்றெங்கோ
அலைமோதிப் போனதுவே!

தகுமோ? இது முறையோ?
என்று யாரிடம் யாம் கேட்பது?

காலமே... இது நின்
ஞாலமே என்று
கதறுவதை விட
எம் வாயினின்று
சிதறுகின்ற வார்த்தை தான்
வேறு என்ன?

2 பின்னூட்டல்கள்:

said...

கவிரூபன் , மிக அருமயான கவிதை , மனதை கணக்க செய்தது. உணர்ச்சு மிகு குரல் வடிவம்
நன்றிகள் பல

said...

பார்த்திபன்,

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்...

Related Posts Plugin for WordPress, Blogger...
பின்னூட்டல்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்