முகங்கள்

எனக்கே என்முகம் அடிக்கடி
மறந்து போகிறது!
கண்ணாடி கூட துலக்கமின்றி
துக்கம் அனுஷ்டிக்கின்றது
வயல் வரம்பில், ஏர்தடங்களில்
வடலி முளைத்த பிட்டிகளில்
என்று எங்கேயோ என் முகம்
தொலைந்து போயிருக்கலாம்
தேடி எடுத்து என் முகம் இதுவென
அடையாளம் சொல்வதும் கஷ்டந்தான்!

எத்தனை... எத்தனை... முகங்கள்
அதில் என் முகம் எது?
'பூட்ஸ்' கால்களின் அடியில்
புண்பட்டுத் துடிக்கின்ற முகங்கள்!
'ட்ரக்' வண்டிச் சில்லின் அடியில்
சிக்கிச் சிதலமடைந்து போன முகங்கள்!

இப்படிப் பல
பல விதங்களில்...

கண்களில் ஏக்கத்தை தாங்கி
தூக்கத்தை தேடும் ஒரு முகம்!
கண்ணீர் போடும் திரையோடு
கால தேவனை நிந்திக்கும் ஒரு முகம்!
கடைசியில் போவது கல்லறை தான்
ஆனாலும் கட்டாய லீவில் அனுப்ப
யாரிவர் என மனுப் போடும் ஒரு முகம்!

கட்டிய சேலையை உருவும்
துச்சாதன வாரிசுகள்!

'துடிக்காத மீசைகள்' போலியாய்
பொய்க் கோபம் காட்டும்!

கற்பென்ன கற்கண்டா
கண்டவர் எடுத்துக் கொள்ள?

நறுக்கென்று நாலு வார்த்தை
எடுத்துச் சொன்னால் என்ன?

எங்கள் முகங்களின் முகவரிகளை
முடிந்தவரை படித்துப் பாருங்கள்
புதிதாய் ஒரு பாரதம் செய்யலாம்!

ஒருவருக்கு இத்தனை முகங்களா
என்று வியப்பில் வீங்கலாம்!
வாருங்கள்...

அநியாயங்களில் ஒரு அடுக்குமாடி
கட்டலாம்
அரிதாரம் பூசி யாரும்
அறியாமல் மறைக்கலாம்!

ஒரு முகத்தோடு
உலகோடு
கைகுலுக்குவோம்

மற்ற முகங்களுடன்
சம்காரம் செய்து
வெண்புறாவை
நிறம் மாற்றுவோம்!

கதறக் கதற
கற்பை விலை பேசுவோம்

கடுமையாய் சாடினால்
விசாரணைக் கமிஷன்
வைப்போம்!

எத்தனை... எத்தனை...
முகங்கள்...
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
யோசிக்க வைக்கும்
முகங்கள்

கருணை மிகு கந்தா
ஆறு முகம் காட்டு
எமைச் சூழும் பகையை
வெந்தணலில் வாட்டு
உன் கொடியைக்
கொஞ்சம் மாற்று - அதில்
வெண்புறாவைப் போட்டு!

Comments

Nalla iruku Ruban!! niraya thalaipugal madum sidebar la iruku kavitaikalai kaanavilaye???
வணக்கம் கவி ரூபன்
உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கிறன.

தமிழ்மணம்.கொம் http://www.thamizmanam.com/
இல் இணைக்கலாமே.
சினேகிதி, நன்றி! நிறைய தலைப்புக்கள் போட்டிருக்கிறேன்... ஆனால் தட்டச்சு செய்ய சோம்பல்... வெகு விரைவில் முழுமைபெயறும் என்று நம்பலாம்...!
சந்திரன் தமிழ் மணத்தில் இணைக்க முயற்சிக்கின்றேன். ரசனைக்கும் நேரத்துக்கும் நன்றி...

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்