நான் அரசியல்வாதி!

எனக்குள் ஒரு ஆசை உண்டு
எவர் விரலும் எழுதாத கவிதனை
எழுதிடும் தமிழ் பாஷை உண்டு

என் முன்னே தெரிகின்ற என் மண்ணின் விதிதனை
தெரிந்தும் தெரியாமல் இருக்கும்
மனப்பக்குவம் எனக்குண்டு

எம் மைந்தர் எம்முன்னே விண் மைந்தர்
ஆகும் நிலை கண்டும்
உயிர் கொடுக்கும் பிரமாக்கள்
நாமில்லையெனச் செப்பும்
சிறப்பான தொனியுண்டு!

தமிழன் விதி எழுதும் பேனாவின்
சில மைத்துளிகள் நாமென்னும்
உண்மை பல காலமாய் மறந்ததுண்டு

"நமக்கு நம்மக்கள் தான் முக்கியம்"
இலட்சியப் பேனாவின் வியர்வைத் துளிகள்
இப்படிப் செப்பியபோது
நாமவர்களுக்கு சூட்டிய பட்டம்
"பைத்தியம்"

"நம்மக்கள் கஷ்டப்படுகிறார்கள்"
இப்படி யாரும் சொன்னால்
நான் சிரிப்பதுண்டு - ஏனெனில்
அம்மக்களில் ஒருவனான நான்
சுற்றம் சூழ சிறப்பாய் வாழ்வதை
அவர்கள் மறந்தது கண்டு

நாம் எம் கை கொண்டு மக்களை
அணைப்பதில்லை...
அறிக்'கை' எனும் கை கொண்டு
நாமிருப்பதை மக்களுக்கு
நினைவு படுத்திக்கொள்வோம்

எம் மனதில் எம்மக்கள் நினைவு
என்றும் எழுவதில்லை
எம் நினைவே மனதில் இருப்பதால்
கனவிலும் எம்மக்கள் நினைவு வருவதில்லை

எம்மக்கள் நினைவு வருவது
தேர்தலில் மட்டும் தான் - ஏனெனில்
அவர்கள் தான் எமக்கு உயிர்
கொடுக்கும் பிரமாக்கள்!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்