Kaviyarankam Baner

Thursday, 4 December 2014

அன்னைக்கு ஒரு ஆறுதல்!

கார்த்திகை 27, 2014 அன்று படித்த கவிதை.

வணக்கம்

அன்னை தமிழுக்கு வணக்கம்
தாய் மண்ணிற்கு வணக்கம்
தலைவன் தாளிற்கு வணக்கம்
மற வீரா் கல்லறைக்கு வணக்கம்

அநாதையாகி நிற்கும்
பெண்ணே…
ஆதியிலே இருந்தவரெல்லாம்
பாதியிலே போவார் என்று
யாரேனும் சொன்னதுண்டா?

வீதியிலே நிற்கின்றாயே
அம்மா…
விதி வந்து நின்றால்
கலங்க மாட்டோம்
சதி செய்து வாசலில்
நின்ற பகை
முற்றத்தில் பாய்ததே அம்மா…!

கக்கத்தில் இருந்த பிள்ளையும்
கருவிலே உருவான மகவும்
சொர்க்கத்தில் கட்டாய
இடம் தேடிக் கொண்டன!

கற்றைக் கூந்தலது வாரி
பல வண்ணப் பூக்கள் அதில் சூடி
நெற்றித் திலகமது ஒளிர
மங்களமாய் நின்ற பெண்ணே…

சொந்தங்களை நீ இழந்தாய்
மடி நிறையக் கொண்ட
செல்வமதுவும் இழந்தாய்
துடிப்பாய் நின்று
உன் மானம் காத்த
மறவரையும் இழந்தாய்
தூய தமிழ்ப் பேச்சினை இழந்தாய்!

துட்டர்களின் “பூட்ஸ்”
கால்களின் அடியில்
மிதிபட்டுக் கிடக்கின்றாயே அம்மா…

உன் கண்ணின் ஈரம்
எப்படித் துடைப்போம்?
உன் நெஞ்சின் பாரம்
எப்படிச் சுமப்போம்!

ஈழத் தாயே
உன்னிடம் பெற்றதுவும்
கற்றதுவும் கனக்க
ஆனாலும் எம்
கைகள் இன்னும் நீளலையே
உன் கண்ணின் ஈரம் துடைக்க…

நீண்டாலும் விளி உருட்டி
சுடு குழல் நீட்டி
தீண்டாதே உன் மண்ணை
என்று வந்த கூட்டம்
வாலாட்டுதே…

அம்மா…
சிரிசேன ஐயாக்களால்
எமக்கு என்றும்
சரிசமன் வராது
என்று சொன்னானே
உன் இளவல்
எம் தமிழினத் தலைவன் அன்று…

தலைவன் சொன்னதெல்லாம்
நடக்குதே
ஆண்டுகள் ஓடியும் எம்
காயத்திற்கு யாரும்
மருந்து தரவில்லையே…
வருந்துகிறோம் என்பார்
வருந்தி ஆவதென்ன…?

ஐ.நா. விசாரணையில்
அவிழுமோ இவர்களின்
பொய் மூட்டைகள்?

அம்மா என்றுமே
அழுகின்ற கூட்டமா
நாங்கள்?
இல்லையம்மா பொருத்திரு…
காட்சிகள் மாறுது
அரச நாட்காலி
ஆட்டங் காணுது
கூட்டத்தோடு
அவன் போவான்
ஐயோவென்று போவான்!


________________________

கார்த்திகை 27, 2014

Sunday, 5 October 2014

விழும் இலைகள்!

10722179_10203477945201938_655140256_o

விழுந்த இலைகளை
எண்ணி
விழாத இலைகள்
கவலை கொள்வதில்
அர்த்தமில்லை!
நாளையோ மறுநாளோ
அவையுடன் அவையும்!

Monday, 29 September 2014

கோடுகள்

8cb888542df6d9366033f239e558cf5b875716b4a00f2ccd083c794234edcd32

கோடுகளுக்கு இடையில்
மறைந்திருக்கும்
ஓவியத்தை
தேடுகிறேன்…

சிறு கை கொண்டு
இவள் கிறுக்குகையில்
பல விதக் கோடுகள் வந்து
பென்சில் கூரோரம்
குந்தியிருக்கும்
“அடுத்து நான்…” எனக்
கெஞ்சித் தவிக்கும்!

உருவம் ஒன்றெண்ணி
இவள் வரைவதில்லை
வரைந்த பின்னால்
காணலாம் பல நூறு
உருவம்
நம் கற்பனை
விசாலமெனில்!

Saturday, 28 June 2014

என்னத்தை சொல்ல...?

இடம் தெரியாா்
தரம் புரியாா்
தகுதி கிடையார்
பதவி வேண்டி
வலம் வருவார்
கிடைக்காது போனால்
முகம் சுளிப்பார்
காறி உமிழ்வார்
இச்சனம் போல்
எங்கேனும் கண்டதுண்டா?


இலக்கு தான் முக்கியம்
நம்மவர்
செருக்குக் காட்டி
"அவனா தலைவன்..."
என கவனில்
கல் வைத்தடிப்பார்!
எதிரில் பல் இழித்து
"ஐயா உம் போல்
எவருண்டு..."

என்றே நெளிவார்!


"எனக்கேன் இல்லை அழைப்பு?"
என்றே
ஆயிரம் கேள்வி தொடுப்பார்
அழைத்தாலோ பல கதை
சொல்லிப் புளுகுவார்!


பிரிந்து நின்று
பருந்து போல்
மொய்கின்றார்
கூடிச் சேர்ந்து
எறும்பு போல்
அணிவகுக்க மறுக்கின்றார்!


கூடிப் பலர்
தேர் இழுக்காவிடின்
சாமிக்கேது ஊர்வலம்?
ஆசாமி இவனே
சாமி ஆக நினைத்தால்
அதுவன்றோ அநியாயம்!


நோக்கம் ஒன்று
அதை நோக்கி
நடத்தல் நன்று!
தன்னால் இயன்றதை
தான் செய்யின்
எல்லாம் சரியாகும்
முடியாது போனால்
கை தட்டுங்கள்
தானாய் நடக்கும்
எல்லாம்!

Monday, 21 April 2014

பிள்ளைத் தமிழ்!

கற்ற தமிழ் நான்
மறந்தேன்
உன் பிள்ளைத்தமிழ்
கேட்கையிலே!

சொற் தமிழில்
எத்தனை சுவை இறைவா
இவள் சின்ன இதழில்
அது பிறப்பதாலே!

அப்பன் மடியில் அமர்ந்து
பிரணவப் பொருள்
உரைத்தான்
பால முருகன் அன்று

குப்பன் இவனும் இன்று
அப்பேறு பெற்றானே
ஆனால் பொருள் தான்
எதுவும் விளங்கலையே!

விளங்காத போதும்
குறையாத இன்பம்
எனக்குள் நிறைகிறதே

வாழ்வதின் இன்பம்
இது தான் எனப் புரிகிறதே!

Saturday, 22 February 2014

அணையா(த்) தீ!

நீ எந்தன் வானம்
நான் உந்தன் நீலம்
ஏனிந்தக் கோலம்
என் உயிரின் ஓலம் கேட்காதோ
உந்தன் காதும்?

கனவில் வருகிறாய்
மலர்கள் சொரிகிறாய்
எதிரில் மட்டும் ஏனோ
என்னை எரிக்கிறாய்!

நெஞ்சத்தில்
உன்னை வைத்தேன்
தீயென்று தெரியாது விட்டேன்
அணைப்பது எவ்வாறு
நீ வந்து அணைத்தாலும்
அணையாது
வளரும் தீ இது!

Tuesday, 14 January 2014

இன்றைய பொங்கல்!

நண்பர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

மேலிருந்து சூரியன்
பார்த்திருக்க
சுற்றி நின்று சுற்றத்தார்
காத்திருக்க
முற்றத்தில் அடுப்பு மூட்டி
புதுப் பானை அடுப்பேற்றி
பொங்கியது உண்டு
ஊரில்!

அவ்வழக்கம் இங்கில்லை
இப்போது!

உள்வீட்டில் பொங்கல்
பாவம் சூரியன்
பல முறை எட்டிப் பார்த்தும்
பொங்கல் பானை பார்க்கும்
பாக்கியம் இல்லை அவனுக்கு!

சுற்றத்தார் எங்கிருந்தோ
குறுஞ்செய்தி, தொலைபேசி
முகப்புத்தகம், ருவீட்டர் என
பல வடிவில்
"Happy Pongal" என்றார்!

ஏன் பொங்குகிறோம்
என்று அறியார் பலர்
ஏதோ பொங்குகின்றார்

ஏற்பாடுகள் ஏட்டிலே தங்கிவிட
பொங்கல் பானையில் தங்கிவட
உள்ளங்கள் பொங்குவதில்லை இங்கே
உவகை அதில் நிறைவதில்லை

பிள்ளை கேட்பான்
"ஏன் அம்மா பொங்கல்?"
அம்மாவுக்கே அது தெரியாத போது
எங்கிருந்து அவள் உரைப்பாள்
"அப்பாவிடம் கேள்..."  என்பாள்
ஓடியே போவான்
பாவம் அவன்!

Wednesday, 1 January 2014

கந்தக விரல்

009600-indian-firecracker-factory

எங்கோ ஒரு
மூலையில்
சிரிப்பைத் தொலைத்து
கந்தக விரலுக்கு
சொந்தக் காரி ஆகிறாள்
ஒருத்தி!

வெடித்துச் சிதறும்
பல வண்ணப் பட்டாசுகளை
கண்டு துள்ளிச் சிரிக்கிறார்
இங்கே பலர்!

மறவாதீர்
அவள் பட்டாசுகளில்
பலவாறு சிரிக்கிறாள்
சிறு நொடியில்
சிரிப்பைத் தொலைத்தும்
விடுகிறாள்!

வாழ்க்கை எவ்வளவு
முரண்பாடு

ஒருத்தியின்
சிரிப்பைத் தொலைத்த
உதடுகளை பார்த்த பின்னும்
எவ்வகைப் பட்டாசு
வாங்கலாம் என்றே
எண்ணமிடுகிறது மனசு!

Related Posts Plugin for WordPress, Blogger...
பின்னூட்டல்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்