கார்த்திகை இருபத்தேழு!

நெஞ்சங்கள் தோறும்
ரணங்களைச் சுமந்து நிற்கின்றோம்

கல்லறை வீரர்
காலடி பணிகின்றோம்


நாளிது கார்த்திகை
இருபத்தேழு!


களமாடி ஈழக் கடமை

செய்த

உயர் வீரா்
நினைவேந்தும் நாள்!


மாடி வீட்டில் இருந்து

நாம்
வேடிக்கை பார்த்தபோது

ஓடி ஒளியாமல்

வாடிச் சாகாமல்

பகை
தேடிப் புறப்பட்ட

மற வீரர் நினைவை

மனதில் ஏந்தும் நாள்!


சிவப்புத் தோல் போர்த்திய

நரிகள்
தமைச் சிங்கங்கள் என்றெண்ணி
எமைச் சூழ்ந்து
அசிங்கங்கள் செய்த போது

பாயும் புலியானவர்கள்
பச்சைத் துரோகத்தால்
பலியானவர்கள்!


சாவை எந்நேரமும்
சட்டைப் பையில்
சுமந்தவர்கள்
தலைவன்
நாவை அசைத்தால்
நாற்றிசையும் பாய்ந்து

எம் மண்ணின் மானம் காத்தவர்கள்!


முறத்தால் புலியை

விரட்டினாளாம் பண்டைச் தமிழச்சி!

எம் தலைவன் ஊட்டிய

வீரத் திறத்தால்

பகையை வாட்டினார்கள்
எம் குலப் தமிழ்ப் பெண்கள்!


பூச்சூடி பொட்டிட்டு

பூவிதழில் புன்னகை மலரவிட்டு

மென்மையின் வடிவானவர்கள் தாம்

இவர்கள்!


கூந்தல் பிடித்திழுத்து

துயில் உரிந்து

துச்சாதன வாரிசுகள்

மானம் பறித்தபோது

தாமும் புலியானவர்கள்!

ஈழமாம் அன்னை
மானம் காத்துப் பலியானவர்கள்!


சொந்தங்களே,

ஒரு சொட்டுச் கண்ணீருடன்

ஒரு மொட்டவிழ்ந்த ரோஜாவுடன்

ஒரு ஒளி விடும் தீபத்துடன்

நம் கடமை முடிந்து விடுவதில்லை!


மேடையில் சிலர் ஏறி

உணர்ச்சி மிகப் பேசலாம்

நல் தமிழ்ச் சொல்லெடுத்து

என்னைப் போன்றோர்
கவிதை எனப் பல வடிக்கலாம்

காணுமோ இவை?


வெறும் சொற்கள்

வெறும் கூச்சல்

பெற்றுத் தருமோ இவை

எம் வீரர் கனவை?


உயிர் ஆசையில்

ஓடி வந்தோர் தாம்

நாம் எல்லோரும்

கசக்கின்ற உண்மையிது!


பயிர் வாடிக் கிடக்கும்

விளைச்சல் நிலம் போல்

வேதனையோடு கிடக்கிறது

ஈழ நிலம்!


எப்படித் துடைப்போம்

எம் ஈழமாம்

அன்னை துயரினை?


பிரிவு பல செய்து

திக்குகளாய் பிரிந்து நிற்கின்றோம்

பரிவு காட்டி

தமிழர் நாம் ஒன்றாய்க்

கோர்ப்போம் கை!


பல வித

மலர் கொண்ட

மாலை போல்


எண்ணங்கள் பல கொண்டாலும்

மறவோம்

நாம் தமிழர்!


இறுதியாக

ஒன்று


ஒவ்வொருவருக்கும்

ஒரு கல்லறை

நிச்சயம் உண்டு!


ஆனால் அது

இவ்வீரர் கல்லறை போல்

நினைக்கப்பட வேண்டும்!


அதுவே நம்

வாழ்வின் பயன்!

Comments

Anonymous said…
வணக்கம்
கவிதையின் வரிகள் உணர்வு மிக்கது அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
/// ஒவ்வொருவருக்கும்
ஒரு கல்லறை
நிச்சயம் உண்டு! ///

சிறப்பான வரிகள் பல... பாராட்டுக்கள்...
ரூபன், தனபால் உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்.
Iniya said…
பயிர் வாடிக் கிடக்கும்
விளைச்சல் நிலம் போல்
வேதனையோடு கிடக்கிறது
ஈழ நிலம்!

வேதனை வரிகள் கண்டு விம்மும் உள்ளம். நாளும் நினைத்தால் துன்பம் தாளாது வீழும் இதயம் நழுவி கீழே.

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்