Kaviyarankam Baner

Tuesday, 30 April 2013

விட்டகலா நினைவுகள்!

கவியரங்கம் ஒன்றில் படிக்கப்பட்ட கவிதை இது. ஒலி வடிவமும் அதன் கீழ் வாசிக்கும் வகையில் கவிதையையும் இணைக்கிறேன்.

 


தமிழ் வாழ்த்து

தோற்றமறியோம்
இவள் தொன்மை அறியோம்
தோகை இள மயில் போல்
இவள் காட்டும் அழகறியோம்
மூத்த பெண்ணாம்
எம் முகவரி இவளாம்!
தாயே தமிழே
வணங்குகிறேன் உனை
இக்கவிக்கு உனைவிட்டால்
வேறு யார் துணை!

அறிமுகம்

யார் இப்பயல் என
நீவீர் கேட்டால்
பதில் ஏதும் இல்லை என்னிடம்!
அடியேனுக்கே அது தெரியாதபோது
சபையோருக்கு எப்படி உரைப்பது?

ஆனாலும் ஒரு குறிப்பு
தமிழ் பழகும் மழலை போல
எழுதுவேன் பல
கவிதை இதுவென எழுந்தாடுவேன்
ஆகா கவிதை இதுவென நீவீர்
மெய்மறந்திருந்தால் மறு நிமிடம்
கால் வாருவேன்!

கடைசி வரை தமிழன் புத்தி
அது வென்பதால்
பிழை பொறுத்தருள்க
என் கவிதைக்கு காது கொடுத்தருள்க!

கேட்கக் கூடாத பலவற்றை
கேட்ட காது தானே?
கொஞ்சம் தமிழும் கேட்கட்டும்
கொஞ்சும் தமிழும் கேட்கட்டும்!
நெஞ்சில் புதைந்த நினைவுப் பறவைகள்
எழுந்து பறக்கட்டும்!
நிழலில் மாடு இரை மீட்பது போல
இச்சபையில் நம் நினைவுகளை
மீட்போம்
வாருங்கள் தோழர்களே!


விட்டகலா நினைவுகள்!

எனக்குள்ளே எழுவது பல நூறு நினைவுகள்
எழுபது வயசானாலும் எழும் பல நூறு நினைவுகள்
தொழுவது கடவுளானாலும் வி்ஸ்வரூபம்
எடுக்கும் பல நூறு நினைவுகள்
மயான பூமியில் எரியும் போதிலும்
விரியும் தீயில் எழுந்து நடமிடும்
பல நூறு நினைவுகள்!

சில நினைவுகள் சிலிர்ப்பை உண்டு பண்ணும்
பல நினைவுகள் நெஞ்சில் கனலை மூட்டும்
இப்போது நினைத்தாலும்
உதட்டில் புன்னகை பூக்கவைக்கும்
சில நினைவுகள்!
தப்பாது விழிகளை
குளமாக்கும் பல  நூறு நினைவுகள்!

நினைவுகள் ரணங்களை
மட்டுமல்ல
வரங்களையும் தருகின்றன!

கால்கள் புழுதியழைய
நெஞ்சம் விட்டு விடுதலையாகிப் பறக்க
வளைய வளைய வந்த எங்களுர்
குச்சொழுங்கைகள் அனாதையாகி
விசும்புகின்றனவே!

வெளிநாட்டில் இருந்து
எப்போதாவது வந்து போகும்
அப்பாக்களைப் போல
என்னூர் போய் வருகிறேன்
கண்ணீர் தான் பெறுகிறேன்!

காதலோடு நான் கால் பதிக்க
சுடுகின்ற புழுதி கூட குளிர்கின்றதே
எந்தன் நெஞ்சம் அழுகின்றதே

உயர்ந்த மனித தோரணை
காட்டும் பனை மரங்களே
கேட்காமலே இளநீர் ஈய்ந்த
தென்னை மரங்களே
உடம்பெல்லாம் முள்ளானாலும்
நான் சுவைக்க இனிய கனி
தந்த ஈச்ச மரங்களே
எப்படி மறப்பேன்
உங்களை?

எனக்குள் எப்போதும் சிம்மாசனம்
இட்டு நிற்கும்
நினைவுகள் இவை!

-----
மனைவி கையால் அறு சுவை
உண்டபோதும்
இணை சொல்ல முடியாது
இதயம் கனக்க வைக்கும்
அம்மாவின் கைப் பக்குவமும்
அவள் குழைத்து தந்த
பழச் சோற்று உருண்டையும்!

இள வயதில்
காலைக் கருக்கலில் தான் எழுந்து
நீராடி, நெற்றி நிறைய திருநீறு இட்டு
அம்மம்மாவின் பின் தொடர்ந்து
மார்கழித் திருவெம்பா பாடல்  காதில் ஒலிக்க
மனசெல்லாம் மகேசன் நிறைய
கற்பூர ஆராத்தி கண்களில் நிறைய
அம் மம்மா என்ன சொல்வேன்
எனக்கு நேர்ந்ததெல்லாம்?

பின் வந்த நாட்களில்
கோயிலுக்குப் போவது என்பதே
அதியசம்!
எப்போதாவது போனாலும்
“வராதவன் வந்துள்ளான்” என
கற்பக் கிரகத்து கடவுளின்
நமட்டுச் சிரிப்பு
எனக்கு மட்டுமே புரிகிறது!

----
காதல்
இந்த ஒற்றை வார்த்தை
ஒவ்வொருவருக்கும் ஒரு
பொருள் தரும்!

எனக்குள்ளும் காதல்
புறாக்கள் வந்தமர்ந்தன!
ஆனால்,
கூடு சிறியதென நினைந்து
சொல்லாமல் எழுந்து
பறந்தன!

தாடி வளர்க்க நினைத்தேன்
முடியவில்லை!
முடி வளரும் பிரதேசமாய்
என் முகம்
இருக்கவில்லை!

சோகம் என்னைக்
கை நீட்டி அழைத்தது!
விரல் தட்டி விட்டு
நடந்தேன்
தமிழோடு கலந்தேன்
கவிதை எனச் சில
கிறுக்கினேன் - என்னை
நானே செதுக்கினேன்!

எழுந்து பறந்த
புறாக்களுக்கு
நன்றி!

---

எந்தன் நினைவு அலுமாரியில்
ஒரு பெரிய படம்
தொங்குகிறது
உற்றுப் பாருங்கள்
நண்பர்களே...
உத்வேகம் பெறுவீர்கள்
சிவன் புலியாடை அணிந்தவன்
இவன் புலியேயாகிச் சிரிப்பவன்!

நண்பர்களே,
எனக்குள் மட்டுமா
இந்தப் பெரிய படம்
தொங்குகிறது?
விடையை உங்களோடு
இரகசியமாய் வையுங்கள்
சில புல்லுருவிகள்
புகுந்திருக்கலாம்!

தமிழன் இரண்டு மணி
சினிமாவில் வருபவனை
எல்லாம் தலைவன் என்கிறான்
“தலை” என்கிறான்
வீரத்தின் முளை கூட
விடாத இவர்களா தலைவர்கள்?

சாவை சட்டைப் பையில்
சுமந்த தலைவன்
நாவை நல்லாயுதம் எனக் கருதி
கண்டபடி பேசியறியாத ஒருவன்
ஊமை நெஞ்சில் இருந்த
ஈழக் கனவை
கூா்மைப் படுத்திய சிந்தனையாளன்
எனக்குள் எப்போதும்
வாடாத மலர்போல
வற்றாத நினைவுகளை தருபவன்!
---

நண்பர்களே...
நல்ல நினைவுகளோடு சேர்த்து
கூடாத நினைவுகளையும்
மனம் பதிவு செய்கிறது

தமிழன் சரித்திரத்தின்
சந்து பொந்து எங்கு தேடினும்
முந்தி வந்து முகத்தில் அறைபவை
காட்டிக் கொடுப்புக்கள்!
நாம் மட்டும் குறைந்தவர்களா என்ன?
கூடவே வளர்த்தோம்
கருநாகங்கள் சிலதை
தீண்டாமல் விடுமோ
தீமையின் பிறப்புக்கள்?

---

நண்பர்களே
சில நினைவுகள் கற்றுத் தருகின்றன
பல நினைவுகள்
எம்மைக் குழி தோண்டிப்
புதைக்கின்றன!

கற்றுத் தரும் நினைவுகளை
மட்டுமே கரம் பிடிப்போம்!

இறுதியாக ஒன்று
நண்பர்களே...
என் அன்னை கருவில் தாங்கி
உருத்  தந்தாள்
என் தந்தை கல்வி தந்து
உருவாக்கினார்
என் தமிழ் எனக்கு
அடையாளம் தந்தது!
இன்று இந்தச் சபை முன்
கொணர்ந்து நிறுத்தியது!

அடையாளம் காப்போம்
உடமைகளை இழந்தால்
மட்டும் நீ அகதியில்லை
தாய் மொழி மறந்தால்
சீ எனத் துறந்தால்
அடுத்த நிமிடமே
நீ அகதி!

தமிழ்
இந்த மூன்றெழுத்து தான்
உலக அரங்கில்
எமக்கு முகவரி தந்தது
முடிந்தவரை  முகவரி
காப்போம்!
முகமலர்ந்து நிற்போம்!


நன்றி
21 சித்திரை 2013

Related Posts Plugin for WordPress, Blogger...
பின்னூட்டல்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்