Posts

Showing posts from 2013

கார்த்திகை இருபத்தேழு!

நெஞ்சங்கள் தோறும் ரணங்களைச் சுமந்து நிற்கின்றோம் கல்லறை வீரர் காலடி பணிகின்றோம் நாளிது கார்த்திகை இருபத்தேழு! களமாடி ஈழக் கடமை செய்த உயர் வீரா் நினைவேந்தும் நாள்! மாடி வீட்டில் இருந்து நாம் வேடிக்கை பார்த்தபோது ஓடி ஒளியாமல் வாடிச் சாகாமல் பகை தேடிப் புறப்பட்ட மற வீரர் நினைவை மனதில் ஏந்தும் நாள்! சிவப்புத் தோல் போர்த்திய நரிகள் தமைச் சிங்கங்கள் என்றெண்ணி எமைச் சூழ்ந்து அசிங்கங்கள் செய்த போது பாயும் புலியானவர்கள் பச்சைத் துரோகத்தால் பலியானவர்கள்! சாவை எந்நேரமும் சட்டைப் பையில் சுமந்தவர்கள் தலைவன் நாவை அசைத்தால் நாற்றிசையும் பாய்ந்து எம் மண்ணின் மானம் காத்தவர்கள்! முறத்தால் புலியை விரட்டினாளாம் பண்டைச் தமிழச்சி! எம் தலைவன் ஊட்டிய வீரத் திறத்தால் பகையை வாட்டினார்கள் எம் குலப் தமிழ்ப் பெண்கள்! பூச்சூடி பொட்டிட்டு பூவிதழில் புன்னகை மலரவிட்டு மென்மையின் வடிவானவர்கள் தாம்

எரியட்டும் பெரு நெருப்பு!

Image
வீடெங்கும் ஒளி வெள்ளம் மலரட்டும் நமது உள்ளம் நரகாசூரா்கள் வெளியில் இல்லை உனக்குள்ளே சிரிப்பர் பல அசுரா்! தீபங்கள் பல பற்ற வை மள மளவென எரியட்டும் பெருந்தீயாய் பரட்டும் உள்ளமெனும் காடு எரிகின்றபோது மிருகங்கள் பல தெறித்தோடும்! இப்போது உனக்குள்ளும் கேட்கும் கண்ணனின் புல்லாங்குழல் ஓசை!

பழுத்த இலைகள்!

Image
உதிர்ந்து கிடக்கும் பழுத்த இலைகள் வீதியெங்கும். இவைகளின் சோகம் சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். முடியவில்லை… சில சொற்களைச் சேர்த்துச் சும்மா விசிறியிருக்கிறேன். யாருக்கேனும் இந்த இலைகளின் விசும்பல் கேட்கிறதா? பழுத்த இலைகள் பாதை எங்கும் பரவிக் கிடக்கின்றன ஒய்யாரமாய் மேலிருந்து காற்று வந்து காதுகளுக்கிடையில் இரகசியம் சொன்ன போது மகிழ்ந்து சிரித்தவை தான்! இன்று கேட்பாரற்று கால்களுக்கிடையில் மிதி பட்டு முனகிக் கொண்டிருந்தன இளகிய சிந்தை உள்ள எவரேனும் குனிந்து குசலம் கேட்பாரோ என்று ஏங்கிக் கிடந்தன. வாழ்க்கை இப்படித்தான்! உயரத்தில் இருக்கும் போது அண்ணாந்து பார்ப்பதோடு முடிந்து விடுகிறது!

முத்த அறுவடை!

Image
கன்னத்தில் முத்தங்களை நான் விதைக்கிறேன்... எப்போதடி தொடங்கும் அறுவடைக் காலம்?   01 மாசி 2013

மழலையாகிறேன்…!

Image
அங்கும் இங்கும் தவழ்கின்றாள் ஆராய்ச்சி பல புரிகின்றாள்! எழுந்து நிற்க முயல்கின்றாள் விழுந்து பின் அழுகின்றாள்! ஆனாலும் மீண்டும் முயன்று பார்க்கின்றாள் விழ… விழ… எழுகின்ற குழந்தையின் செய்கை கண்டு நாமும் கற்க வேண்டிய பாடம் இதுவென உணர்கின்றேன்! உதடுகளுக்கிடையில் சிரிப்பை ஒளித்து வைக்கிறாள் எப்போது விடுவிப்பாள் என்று அவள் முகம் பார்த்த வண்ணம் நான்! அப்பன் என்னும் உறவெல்லாம் மறந்தே போச்சு நானும் மழலையாகிறேன் அவள் அருகிருக்கையில்!

அவள் உலகம்!

Image
என் உலகம் என் தோள் மேல் ஏறி தன் உலகம் பார்க்கிறது! உலகம் புரிபட்ட பின்னால்(ள்) உதறி நடக்குமோ உள்ளுக்குள் காயம் தருமோ நான் அறியேன்… சுற்றுலா வழிகாட்டி போல் அவள் வாழ்வின் வழிகாட்டி நான் அவ்வளவே! எனக்கே வாழ்வு புரிபடாத போது அவள் வாழ்விற்கு எப்படி காட்டுவேன் வழி? புரிபடாத ஒன்றை புாிந்தது போல் காட்டுவது தான் எத்தனை முரண்? தோளில் ஏற்றுவதோடு சரி அவள் வாழ்வை அவளே புரிந்து கொள்ளட்டும்! சொந்தப் புரிதல் காயப்படுத்தினாலும் உதடுகளுக்கு எப்போதும் புன்னகையை கற்றுத் தரும்!

சந்தோசம்!

Image
சந்தோசம் என்பது எங்கேயும் இல்லடா உனக்குள்ளே இருக்குது உனைப் பாத்துச் சிரிக்குது கை கூப்பி வணக்கம் சொல்லு!

போதையில் நதி!

Image
புதிதாய் குலை தள்ளிய வாழை போல் இளங் குமரிகள் நதிக் கரையில்! போதையில் தள்ளாடியது நதி!

விட்டகலா நினைவுகள்!

Image
கவியரங்கம் ஒன்றில் படிக்கப்பட்ட கவிதை இது. ஒலி வடிவமும் அதன் கீழ் வாசிக்கும் வகையில் கவிதையையும் இணைக்கிறேன்.   தமிழ் வாழ்த்து தோற்றமறியோம் இவள் தொன்மை அறியோம் தோகை இள மயில் போல் இவள் காட்டும் அழகறியோம் மூத்த பெண்ணாம் எம் முகவரி இவளாம்! தாயே தமிழே வணங்குகிறேன் உனை இக்கவிக்கு உனைவிட்டால் வேறு யார் துணை! அறிமுகம் யார் இப்பயல் என நீவீர் கேட்டால் பதில் ஏதும் இல்லை என்னிடம்! அடியேனுக்கே அது தெரியாதபோது சபையோருக்கு எப்படி உரைப்பது? ஆனாலும் ஒரு குறிப்பு தமிழ் பழகும் மழலை போல எழுதுவேன் பல கவிதை இதுவென எழுந்தாடுவேன் ஆகா கவிதை இதுவென நீவீர் மெய்மறந்திருந்தால் மறு நிமிடம் கால் வாருவேன்! கடைசி வரை தமிழன் புத்தி அது வென்பதால் பிழை பொறுத்தருள்க என் கவிதைக்கு காது கொடுத்தருள்க! கேட்கக் கூடாத பலவற்றை கேட்ட காது தானே? கொஞ்சம் தமிழும் கேட்கட்டும் கொஞ்சும் தமிழும் கேட்கட்டும்!

காத்திருப்பு…! (வேறு)

Image
  ஏய்... கடல் அலையே கரையை முத்தமிடும் உன் தாகம் எப்போதும் அடங்காதது போலவே என் காதலனுக்கான காத்திருப்பும்...! 14 ஆடி 2008

கசக்கி எறிந்த ஓவியம்!

Image
நீ வரைந்த கடற்கரை காட்சியில் நம் காதலின் சாட்சியாய் இருந்த படகைக் காணோம்! நாம் பேசிய காதல் மொழி கேட்க ஆர்வமாய் துள்ளி வந்த கடல் அலை காணோம்! கடலை வண்டி தள்ளிப் போகும் வயசான கிழவர் இல்லை... அக்கம் பக்கம் பார்த்துவிட்டு முத்தமிடும் உன் குறும்பில் குங்குமமாய்ச் சிவக்கும் என் நிலா முகம் போனதெங்கே? கடற்கரை கிணற்றில் தண்ணீர் அள்ளிப் போகும் பெண்களின் பார்வை படாது என் முகம் மறைக்கும் உன் உருவம் கரைந்தது எப்படி? அடிக்கடி என் பெயரை உச்சரிக்கும் உதடுகள் கடற்கரை மணலிலும் எழுதிப் பார்த்த அழகு மறைந்தது எப்படி? வசதியாக இப்படிப் பல நினைவுகள் மறைந்து வரைந்த ஓவியம் எதற்கு என்று கசக்கி எறிந்தாயோ என் காதலனே?   09 புரட்டாதி 2008

காத்திருப்பு…!

Image
திரை விலத்தக் குறைவில்லாது காற்று வரும்... காதலும் வந்ததெப்படி காதலனே? பிறை போலிருந்த அம்புலி வளர்ந்து முழு நிலவானது போல்... சிறு கறை போலிருந்த உன் உருவம் ஓங்கி வளர்ந்து என்னுள்ளம் நிறைத்த விந்தையென்ன சொல்...! தினமும் திரை விலத்திச் சிலை போல் காத்திருக்கிறேன்... உனக்காய்... மனச்சாட்சி மறக்கும் மனிதச் சாட்சிகளை விட மகத்தான இயற்கையே இதற்குச் சாட்சி! நான் காத்திருக்கின்ற இரவுகளில் பார்த்துவிட்டுப் போகும் நிலவைக் கேள்... அவ்வப்போது நிலவைக் கொற்றித் தின்பதாய் பறக்கும் பட்சிகளைக் கேள்... அவை சொல்லும் என் காத்திருப்பின் நீண்ட இரவுகள் பற்றி!   ------------------------- 23 புரட்டாதி 2008