Kaviyarankam Baner

Saturday, 24 December 2011

காதல் காயம்!

எல்லாம் பொய்யாய்
பழங்கதையாய்
போனபின்....
வீணே திரும்பி வந்து 
இதயத்தில் ஏறி 
விளையாடி 
கண்ணே, மணியே என்று 
கொஞ்சுதலும் 
கூடுமோ? 

காதல் என் 
கை பற்றி 
இழுக்க... 
"சீச்... சீ..."
என
'பட்ட'ஞானம் 
தடுக்க 
பெரும் உணர்ச்சியில் 
தள்ளாடும் 
உள்ளம்! 

நேற்றைய நினைவுகளை
அசை போட்டபடி 
மனசு... 
'சுளீர்' எனும் சவுக்கடி 
தானே அதற்குப்
பரிசு...!

போரிலே 
காயம் சுமந்து 
திரும்பிய 
காளைக்கு 
மாலை...! 

காதலில் 
இதயத்தில் 
புண் சுமந்த எனக்கு 
வாழ்க்கையிது 
மாயை ...

ஒன்று மட்டும் 
புரிகிறது 
நேசிக்கத் தெரிந்தவர்களிடம்....
உள்ளம் புரிந்தவர்களிடம்...
பெண்ணை மதிப்பவர்களிடம்...
காதல் 
கடுமையாகத் தான் 
நடந்து கொள்கின்றது!---------------------
சித்திரை 2009

Saturday, 17 December 2011

மழை


மழை
அடிக்கடி
அழைக்காமலே
எனக்குள் விஸ்வரூபம்
எடுக்கும்
உன்னைப் போல
தூறலாகிக்
கனக்கின்றது!

குளிர்காற்று
காதுமடல் தடவி
தலைகோதும்
போதெல்லாம்
உன் உதடும்
கைகளும்
நினைவில்...

பாதங்கள்
வெள்ளம்
அழைகையில்
உன் கால்
கொலுசின்
ஒலி!

மழைத்துளி
மண்ணில்
மோதிச் சிதறித்
தெறிக்கையில்
மரணத்தின்
வலி!

மழை
எல்லோருக்கும்
பொதுவாய்
கடவுள்
எடுக்கும்
பால பாடம்!

புரிந்தவர்கள்
ஞானம்
பெறுகிறார்கள்!

---------------------
சித்திரை 2009

Saturday, 10 December 2011

சூரியனுக்கு ஏது சாவு?
உடைந்த குரலில்
குயில் ஒன்று கூவியது
வண்ணம் இழந்து
மயில் ஒன்று ஆடியது
குனிந்த தலையாய்
நெல் வயல் ஒன்று வாடியது
அநாதையாகிப் போய்
ஈழ மண் அழுதது!

ஈழம் காண
எழுந்து புறப்பட்ட தோழா்களே
துரோகம் விரித்த வலையில்
துடித்து விழுந்தீா்களோ?

விழி மூடிய
வீரா்களே
சாவை வேண்டி
அணைத்த மறவா்களே
பூவைத் தூவி
நிற்கின்றோம்!
உங்கள் கல்லறைகள்
வீரத்தின் கல்வெட்டுக்கள்!

துவக்கு ஏந்திய
துடிப்பு மிக்கவா்களே
மேற்கில் சூரியன்
மறைந்தால்
நாளை விடியாதோ?

சூரியனுக்கு ஏது
சாவு?
வீரனுக்கு
என்றும் வாழ்வு!

---------------------
குரல் சுபா
கார்த்திகை 27/2011

Friday, 9 December 2011

எல்லாம் நீ..!

தேளாகி என்னைக்
கடிக்கின்றபோதெல்லாம்
உன் மனம் ஏனோ
மறந்துபோகிறது
மருந்து போடவும்
நீ தான்
வரவேணும் என்பதை!

 -------------------
சித்திரை 2009

Friday, 2 December 2011

கோலம் தரும் பாடம்!

கோலம் அம்மா
போட்டது - ஒரு
புள்ளியில் தொடங்கி
பல புள்ளிகள் சேர்த்து
அழகாக உருவானது!

வாழ்க்கையின் வடிவான
தத்துவம் கோலத்திற்குள்
தன் கோலம் மறைத்து
நிற்பது புரியாது
எத்தனை முறை
கடந்து போயிருப்போம்
கோலத்தை!

ஒரு புள்ளியில் கோலம்
ஒரு துளியில் மனிதன்!
கோலத்தை கூட்டி
அள்ளினால் ஒரு
பிடி...

உடலை எரியூட்டி
அள்ளினால்
ஒரு பிடி சாம்பல்!

அதிகாலையில்
மீண்டும் நேற்றுப்
போட்ட இடத்தில்
மறுபடிபடியும்
புதுக் கோலம்!

ம்...
வாழ்க்கை
இப்படித் தான்!

எம் கோலத்தை
நாமே போட முடிகின்ற
சலுகை மட்டும்
நம் கையில்!

-------------------

சித்திரை 2009

Related Posts Plugin for WordPress, Blogger...
பின்னூட்டல்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்