யாழ் களக் கிறுக்கல்கள் - XIV

கிறுக்கல் 43:

என்ன நடந்தது
என்றெனக்குத் தெரியாது

முன்னம் போல்
முறுவல் இல்லை
முகத்தில்!

கன்னம் சிவந்து
காத தூரம் ஓடி மறையும்
காதல் இல்லை
நெஞ்சில்!

இன்னும் இளகிய
உன் சிந்தை
காணவில்லை

முன்னும் பின்னும்
அற்புதங்கள் காட்டும்
அழகவை போனதெங்கே
பிள்ளை?

விளங்காத கவி சொல்லும்
விரிகின்ற கண்களின்
ஒளி மறைந்ததும் என்ன?

பல நூறு துச்சாதனர்கள்
கூடி மான பங்கம்
செய்தது போல
அழகிழந்ததும் என்ன?

"ஈழம்" எனும் பேர்
தாங்கி நின்ற பெண்ணே
எப்போது துடைப்போம்
உன் துயர்?

 

கிறுக்கல் 44:

வலிகள்
மனதில் கவலை
எழுதும் வரிகள்!

மொழிகள் பலவிருந்தும்
என்ன பயன்?

உன்கண்ணடி பட்டு
கண்ணாடி போல்
உடைந்த உள்ளத்தின்
வலி சொல்ல
எந்த வார்த்தையும்
அகப்படவில்லை!

என்னடி எனக்குள்
செய்தாய்?
ஓரடிக் கவிதையில்
ஔிந்திருக்கும்
அத்தனை அதிசயமும்
உன் ஓரங்குலப் புன்னகையில்!

ஈரடி இடைவெளி
இன்னும் எமக்குள் ஏன்?

தேனடி உன்னுதடு என்று
நான் உண்ணும்
காலமதும் எப்போது?

மானடி உன் விழியென்று
மயங்குவதும் எக்காலம்?

இரு கை திறந்து
காத்திருக்கிறேன்
பறந்து வருவது
உன் பொறுப்பு!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்