யாழ் களக் கிறுக்கல்கள் - XI

கிறுக்கல் 35:

யாவும் என்றோ முடியும்
ஆகும் அத்தனையும்
அழியும் என்ற விதியின் படி
யாவும் என்றோ முடியும்!

நீயும் நானும்
நொடியில்
மயான மடியில்!

சாவின் மடியில்
சண்டியனும் போவான்
நொடியில்!

தாயின் பாலில்
உடம்பில் ஓடும்
இரத்தம்
நோயில் விழுந்து
பாயில் படுத்த பின்னர்
ஓடி அடங்கும்!

வாழும் நாளில்
சூழும் சோகம்
வாடி வதங்கிச்
சோரும் நெஞ்சம்!

ஆழும் கடவுள்
அருள் ஒன்று தரவேண்டும்
நாளும் பொழுதும்
சோகச் சுவடறுத்து
சிந்தனைச் சுடர் வளர்த்து
தூய அன்பில்
உயிரத்தனையும் மூழ்கி
தேட வேண்டும்
பெரும் வாழ்வு தரும் ஜோதி!

 

-----------------

கிறுக்கல் 36:

மனதில் ஆசையோடு
எனக்கொரு ஆணைபோடு
மடியில் வந்து விழுந்து
மங்கை உன்னை
வீணையென மீட்டுவேன்!

நாளை என்று இன்னொரு
நாள் தேவையில்லை
ஆளையாள் அணைத்துக் கொள்ள
ஐயர் வந்து நேரம்
பார்க்கத் தேவையில்லை!

காலை விடியும் பொழுதில்
கற்கண்டு நினைப்பில்
உன் முகத்தை
வெட்கம் மெழுகும்
நல்ல சமயமென்றுணர்ந்து
என் கை
உன் இடை தழுவும்!
உடை அவிழும்!
அவிழும் உன்னுடை பற்ற
விரையும்
உன்னிரு கை
படை நடாத்தும்
காமனின் முன்
நடை தளர்ந்து
பஞ்சணையில் நீ
விழுவாய்! - உன்
நெஞ்சணை தேடி
என் முகம் மறையும்!

வேறென்ன சொல்ல
வேதியலில் சொல்லாத
பலவும்
களவியலில் நடக்குமடி
கண்ணே!

 

-----------------

கிறுக்கல் 37:

வாழ்த்துக்கள் கூறி
வாழ்த்த ஓர் இதயம்
இருந்தால்
கூட்டுக்குள் வீணே
அடைபட்டுக் கிடப்பேனோ?
பாட்டுக்குள் பல
சங்கதி வைப்பேன்
பலர் பாடி மகிழ
பல் சுவை
விருந்தளிப்பேன்!

காட்டுக்குள் கூவும்
குயில் போல்
தன் ஓட்டுக்குள்
தலை மறைக்கும்
ஆமை போல்
பூட்டுக்கள் பல கொண்டு
எனை நானே
பூட்டி வைத்தேன்!

தட்டுங்கள் கைகளிரண்டை
வானக் கூரை தட்டி
வாழ்த்துங்கள்
உதிருகின்ற நட்சத்திரங்கள்
என் மேல் பூவாய்
விழட்டும்...
ஒளிருகின்ற நிலவது
நில்லாது
என் கன்னந் தொட்டு
முத்தமிடட்டும்!

ஏதும் செய்யாது
ஏன் இப்படி நிற்கின்றீர்?

போதும் விளையாட்டு
உங்களை நம்பி
எப்படி புனைவேன்
நான் கவி!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்