யாழ் களக் கிறுக்கல்கள் - V

கிறுக்கல் 14:

உயிரே
என்றென்னை
உருகி
அழைத்தவளே...

உயிர்
மறந்து போனதென்ன?
வீணே வாய்பிதற்றுகின்ற
வார்த்தைகளை
உண்மையென்று நான்
உணர்ந்தது தான் என்ன?

உண்மைதான் பலரும்
மனிதர்களைக்
காதலிப்பதை விட
வார்த்தைகளைக்
காதலிப்பதே
அதிகம்...

 

-----------------

கிறுக்கல் 15:

 
[Photo - AFP]

போதுமென்று
நீர் உரைத்தாலும்
மனசுக்குள்
ஆசை நரைக்கவில்லை...

'சாது'வாக தான்
இருப்பீர்
காவி
தரிப்பீர்
ஆனாலும்
காரில் வருகின்றீர்
வசை சொற்களை
வாந்தி எடுக்கின்றீர்

மனித நேயம்
மலரவேண்டிய
மனங்களில்
முட்களை பரப்பி
முட்டாளாக்குகின்றீர்...

பிழைக்கப் பல
வழிகள்
உண்டய்யா...

புத்தன் என்னும்
புனிதன் பேரைச்
சொல்லிப்
பிழைக்க
வெட்கமில்லையா?

அரசின் கீழிருந்து
தியானம்
செய்யாமல்
அரசில் ஆசை
ஏனய்யா?
சிரசு தடவிச்
சொல்லும்
பரிசு கெட்டதனம்
இதுவய்யா...

புத்தபிட்சு சொல் கேட்டு
ஆசோகன்
போர்வாள் மறந்தான்

லட்சம் பிட்சு கூடி
'போர் செய்
போர் செய்' என்று
கூர் வாள்
கொடுக்கின்றீர்
பிட்சு இல்லை நீர்
மரந்தான்...!

 

-----------------

கிறுக்கல் 16:


[photo - tamilnet]

நாங்களும்
மனிதர்கள் தான்
அடிக்கடி இப்படிச்
சொல்லிக் கொள்வது
அவசியமாகிறது
மறந்துவிடுகின்ற
அபாயம் உண்டு

அடுத்தவரின் கரிசனையை
எதிர்பார்க்கின்ற போதெல்லாம்
ஏமாற்றங்கள் தான்

புரிந்து கொள்ளாமை
புரிந்தும் உணர்ந்து கொள்ளாமை
இப்படிப் பல காரணங்கள்

பிரச்சனை புரியாதவரெல்லாம்
பாதை இதுவெனச்
சொல்வதில்
அர்த்தமுண்டோ?

தள்ளி நின்று
வேடிக்கை பார்த்து
வேண்டாமெனத் தடுப்பதை
விடுவீர்

கிட்ட வாரும்
பிரச்சனையின்
வேர் தேடும்
பிறகு சொல்லும்
எது வழியென...

நாங்களும்
மனிதர்கள் தான்
விலங்குகளோடு
சண்டைபோடுகிறோம்!!!
விலங்குகள்
உடையுமோ?
விரதங்கள்
முடியுமோ?
விரக்தியோடு
புன்னகைப்பதைத் தவிர
எதுவும் தோன்றவில்லை....

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்