யாழ் களக் கிறுக்கல்கள் - I

யாழ் களத்தில், குறிப்பாக கவிதை அந்தாதிப் பகுதியில் அடியேன் அவ்வப்போது கிறுக்கியவற்றின் தொகுப்பாக இந்தப் பதிவும் இனி வரக்கூடிய சில பதிவுகளும் அமையப்போகின்றன.

மற்றவர்களின் முடிவுச் சொல்லை, முதல் சொல்லாகக் கொண்டு எழுதப்படுவது கவிதை அந்தாதி... எழுத்தைக் கூர்மைப் படுத்திக்கொள்ள அருமையான இடமாக இதனைக் கொள்ளலாம் என்பது என் எண்ணம். அந்த வகையில் அடியேன் எழுதியவற்றில் மிகவும் பிடித்தமானவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்ளவிழைகின்றேன். (என் எழுத்திற்கு முதல் ரசிகன் நானே...!)

இவற்றின் பாடு பொருள் பல்வேறு முகங்கள் காட்டலாம்... காதல்,காமம்,வீரம்,விநோதம் அவற்றில் சில முகங்கள்... இப்படி எழுதப்பட்ட சிலவற்றை வாசித்தவர்கள் தங்களைத் தாக்குவதாக நினைந்து கொண்டு என்னைக் கோபித்துக் கொண்டதும் உண்டு (அதாவது க.அ பகுதியில் உடன் எழுதியவர்கள்... ) அதற்கு நான் என்ன செய்ய முடியும்... (பொது வாழ்க்கை என்று வந்தால் இதெல்லாம் சகஜம் தானே ராஜா... )

சரி அது நிற்க, முதலில் சில கிறுக்கல்களைப் பார்க்கலாம். (நீயும் உன் கிறுக்கல்களும்... என்று கோபித்துக்கொள்வதாக இருந்தாலும் பின்னூட்டல் மூலம் கோபித்துக் கொள்ளுங்கள்...)

 

கிறுக்கல் 01:

கேளாயோ
என் தோழா
நாளாக நாளாக
எம் பகை கூராகும்
குற்றிக் கிழித்து
கும்மாளமடிக்கும்
வாளாக மாறிப்
புலி பாயாதோ...
புவி புருவம் நெளித்து
உள்ளுக்குள் குறுநகை
செய்யாதோ... ?
கூலாக கோலோ
நீ குடிக்கின்றாய்
குதித்து எழு...
கூளிங் கிளாஸ் கழற்று...
களம் விரை என்னோடு
பட படக்கும் புலிக்கொடி...
பார்கலாம் நாளை...!

-----------------

கிறுக்கல் 02:

குட்டித் தேவதையே...
குட்டிக் கரணம் போட்டுக்
கும்பிட்டுக் கேட்கின்றேன்
சட்டித் தலையன் என்று
சட்டை செய்யாது
போகாதே
கட்டி ஒரு
கனி முத்தம் கொடேன்!
எட்டி நின்று எத்தனை
நாள் பார்ப்பது?
உன்னிதயம்
தட்டி காதல் மனுச்
செய்தேன்...!
ஓடி வாவேன்...
ஒன்றாக ஊரெல்லாம்
சுத்தலாம்
விண் முட்டும் வண்ணம்
காதல் செய்யலாம்
வாடி என்னிதயம்
ஆழ்பவளே...!

-----------------

கிறுக்கல் 03:

விருத்திசெய்யென்று
வில்லங்கம் பேசும்
விகடகவி ஐயா,
விநோதமாய் உள்ளது
உம் கணக்கு...!
முத்தக் கணக்கெல்லாம்
மெத்தை மீது விட்டிறங்குவதே
அழகய்யா...
சத்தம் போட்டு
ஜதி பிடித்து
உலகறியச் சொல்ல
இதுவென்ன சிறீலங்கா
ராணுவத் தலைக் கணக்கா?
பட படக்கும் கரு விழி
அழகில் சருகாக
உதிர்ந்து விட்டு...
இதயத்தை இழந்துவிட்டு....
புலம்ப வேண்டாம் ஐயா
போகட்டும் அவள்...
ஆண்களின் அன்பை
அத்தனை பெண்களும்
புரிந்து கொள்வதில்லை...!

 

மேலும் சில கிறுக்கல்களுடன் அடுத்த பதிவில்... (ஒரு வார்த்தை எழுதுங்கோ...)

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்