Kaviyarankam Baner

Thursday, 31 December 2009

2010 இல்…

இன்னொரு ஆண்டின்
இனிய பிறப்பு
வேண்டுவது என்னவென்று
அறியாது உள்ளுக்குள் தவிப்பு!

ஆள ஒரு நாடு வரும் என
கண்டு வந்த கனவு
மீள முடியாச் சோகத்தோடு
கலைந்து போனதென்ன நீ வினவு!

எழுகின்ற கேள்விகள்
எனக்குள்ளே பல நூறு
ஒவ்வொன்றாய் நீ வந்தே
பதில் கூறு!

விரிகின்ற பாதைகள்
தெரிகின்ற காட்சிகள்
சரிகின்ற உண்மைகள்
காலகாலமாய் நாமெல்லாம்
ஊமைகள்!

பிறக்கின்றாய் நீயென்று
துதிக்கின்றோம் நாமின்று
சிரிக்கின்ற உன் இதழ் கண்டு
பறக்கின்றது நம்பிக்கை வண்டு!

ஆண்டெனும் அழகு நங்கையே
அமைதி தருவாய் - எம்
முன்னெழும் இடா் எல்லாம்
களைந்தே விடுவாய்!

Wednesday, 16 December 2009

கசங்கிய காகிதங்களோடு…! - IV

அன்னை தெரேசா

image ஏழைகளின் மீட்பர் அன்னை தெரேசா, எம்மை விட்டுப் பிரிந்த போது (5 புரட்டாதி 1997) எழுந்த சோகத்தில் இதயம் கக்கிய வார்த்தைகளை ஒழுங்குபடுத்தியபோது…!

 

வானொலி கூட ஒரு கணம் விசும்பியது
மறுகணம் செய்தி என்னவென்று விளம்பியது
கவலைக் காளான்களால் இதயம் நிரம்பியது
கடவுளே! மனிதக் கடவுளை ஏன் விண்ணுக்கழைத்தாய்
என்றொவ்வோர் மனமும் புலம்பியது!

"அன்னை" என்று அகிலத்தார் அழைக்க
தன்னை உருக்கி ஒளி உமிழும்
மெழுகுவா்த்தியாய்...

முன்னைப் பிறவியில் நாம் செய்த தவத்தால்
பொன்னை நிகர்த்த ஒளி வடிவாம்
அன்பின் மறுவடிவாம்
அன்னை தெரேசா!
அழும் கண்களோடு எமை விட்டு
மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டார்!

பாழும் கிணற்றில் வீழும் ஏழை வாழ்வை
நாளும் காத்திடவே சீரும் சிறப்பாய்ச்
சிகரம் ஏற்றிடவே
நகரம் பல நாடி - அவா்
வாழ்வு கண்டு மனமிக வாடி
ஏழைகளைக் காத்துநின்றவா்!
எமை ஏங்கவிட்டு எட்டாத இடத்தினுக்குச்
சிட்டாகப் பறந்து விட்டார்! - எமை
விட்டுப் போக அவா் எப்படித் துணிந்துவிட்டார்?

பிணி கொண்டவா் பால் அவா் பிரிந்து நின்றதில்லை
அவரிடம் பரிந்து சென்றார்!
தன் பணி என்னவென்று தானறிந்து
எவரிடமும் உள்ளங் கனிந்து நின்றார்!
தன் பிணி காலத்திலும் தன் பணி மறவாது
உவகையுடன் வாழ்ந்து உலகை வென்றார்!

அகவை பல கண்டும் தன் கடனை
நிறைவுடனே செய்தார்!
நிர்மல மனதுடன் எம்மனங்களில் தன்
நினைவை ஊன்றிச் சென்றார்!

அன்பு,கருணை,அழகு என்றெல்லாம்
எம்மவா் பேசுகின்ற போதினில்
வீசுகின்ற தென்றலில் கூட அவற்றின்
அர்த்தம் ஏறிவரும் - அது
அன்னை தெரேசா என்றே கூறி வரும்!

 

-வளரும்…

Thursday, 17 September 2009

கசங்கிய காகிதங்களோடு…! - III

நாங்கள்
வாழத் தெரியாதவா்களல்ல!

வாழும்
இடங்களெல்லாம்
விழுதுகள் விட்ட
வியப்புக் குரியவா்கள்!

தமிழனென்றால்
மரம்
பற்றிப் படரும்
கொடிகள் அல்ல!

மறம் பற்றிப்
படரும் மாயாவிகள்…

“பூனை குட்டியைக்
காவுவது போல்…”
என்ற உவமை
எங்களுக்கு மிகவும்
பொருந்தும்

இடங்கள் தான்
வித்தியாசமே தவிர
நடப்புக்கள்
ஒன்று தான்!

**********

கண்களும் கழிவகற்றுகின்றன
கண்ணீா்!

********** 

 

-வளரும்…

Wednesday, 16 September 2009

கசங்கிய காகிதங்களோடு…! - II

சூரியப் பந்து
இயற்கை அடித்த
சிக்ஸில்
காணாமல் போனது
மாலை!

**********

தீா்வுப் பொதி
போல
வர… வர…
காணாமல் போனது
மேகக் கூட்டம்!

**********

காலை வந்து மாலை வந்து
காலம் செல்லுது
காதல் வந்து போதை தந்து
உயிரைக் கொல்லுது
விரல்கள் பிணைந்து உயிரில் கலந்து
சரணம் என்குது
குண்டு பட்டு உயிர்கள் பறந்து
மரணம் வருகுது!

**********

ஓடும் அருவி
முதுகு தேய்க்கவா
பாறை முகடுகள்!

**********

காற்றுக்கு கால்
வலிக்குமென்றா
மரங்களில் இந்த
இலைச் சிம்மாசனங்கள்!

**********

- வளரும்…

Tuesday, 15 September 2009

கசங்கிய காகிதங்களோடு…! - I

கசக்கி எறிய எண்ணிச் சில காகிதங்களைப் புரட்டும் போது ஒரு வித ஆா்வம் மேலெழும். எப்போதோ ஏதோ நினைவில் சும்மா கிறுக்கியவை எல்லாம் இதழ் விரித்துப் புன்னகைக்கும்! பதிலுக்குப் புன்னகைத்து கைகொடுத்து கன போ் கண்களுக்கு விருந்தாக்கும் எண்ணம் பிறக்கும்! இதோ… என் புரியாணி… ஏதேனும் புரியா(து) நீ(நீங்கள்) தடுமாறி நின்றால் அடியேன் குற்றமன்று!

image

சோமாலியா
ருவாண்டா
சுற்றி வந்தால்
எங்கள் ஊா்
வராண்டாவிலும்
வயிறு எக்கிய
வாடிய முகங்கள்!

எண்ணுவதற்கு இலகுவாய்
எலும்புகளின் அணிவகுப்பு!

பாலுக்கு அழும்
பாலகா்கள்…

பால் வற்றிய
முலைகளோடு
முகம் தேய்க்கும்
மழலைகள்!

தன் முலை
தீண்டும் தனயனைக்
கண் முலை
சொரிய நோக்கும்
தாய்மார்கள்!

மணிவாசகருக்கு
ஒரு தந்தி
அடிக்க வேண்டும்
மீண்டும் பல நூறு
பதிகம் பாடச் சொல்லி!

இவா்கள்
பாலுக்கு அழும்
பாலகா்கள்!

 

(இன்னும் வரும்…)

Thursday, 18 June 2009

கடவுள் எழுதிய கவிதை!

கடவுள் எழுதிக் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று அடியேனின் முற்றத்தில் வந்து விழுந்தது. விரித்துப் படித்த போது… ;-)

 

வானம்
என் அகண்ட
மேனி!

நட்சத்திரங்கள்
என் கனவுகளின்
கண்சிமிட்டல்கள்

நிலவு
யார் கண்ணும்
படாமல் இருக்க
நான் வைத்த
திருஷ்டிப் பொட்டு!

காற்று
மரங்களின் நடனம்
இலைகளின் கை தட்டல்
அலைகளின் ஆட்டம்
அத்தனையும் காண 
அடியேன் அனுப்பிய
இரகசியத் தூதன்!

மழை
என் கண்களின்
கருணை!

சூரியன்
நான் கையிலேந்தும்
தீபம்!

மனிதன்
மறந்துபோய்
நான் செய்த பிழை! 

Sunday, 12 April 2009

அதிகார நாடுகளே அசையுங்கள்…

லண்டன் நகரில் நடந்த கவன ஈர்ப்பு போராட்டம்

திக்கெட்டும் அதிருது
‘எங்கள் கோஷம்’ எவர்
காதில் விழுகுது?

எல்லைகள் கடந்தும்
எம் உறவுகளின்
கண்ணீர் சுடுகுது
எழுந்து சென்று
துடைக்காமல் தமிழனென்று
நாம் என்ன வாழ்வது?

ஜ.நா வும் அழைத்தது
அமெரிக்கா நீதி உரைத்தது
இந்தியா நீலிக் கண்ணீர் வடித்தது
இங்கிலாந்தும் இளகி வந்தது
எந்த 'லாண்ட' என்ன செய்தாலும்
எனக்கென்னவென்று
சிங்களம் தமிழர்களைக்
கொன்று குவிக்குது!

தூர தேசங்களில் வாழ்ந்தாலும்
ஈழ தேசத்தின் கனவு
எமக்குள்ளே எழுந்து விரியுது

ஈர நெஞ்சங்கள்
ஓரப் பார்வை பார்த்தால்
போதும்...
எம் மண்ணை
ஆரத் தழுவும்
கனவு நனவாகும்!

நேரங் கடந்த பின்
ஞானம் வந்து பயனில்லை

அதிகார நாடுகளே
கொஞ்சம் அசையுங்கள்
நோகாமல் அடிப்பதெல்லாம்
நோவுக்கு மருந்தில்லை
பாராமல் இருக்கின்ற
கொள்கை தளர்த்துங்கள்
தமிழன் உயிருக்கு எதுவும்
நேராமல் காக்கின்ற
பொறுப்பு உமக்கும் உண்டு!

Tuesday, 3 March 2009

யாழ் களக் கிறுக்கல்கள் - XII

கிறுக்கல் 38:

எப்போது அடி விழும்
எப்போது கை சுடும்
என்று இப்போது
நாம் அறியோம்...

நடப்பது
குருசேஷ்த்திரம் அல்ல..

பொல்லாத குளவிகள்
யாரோ எறிந்த கல்லில்
நில்லாது பறக்கின்றன!

விழுகின்றனவே
சில இலைகள்
என்று
மரம் அழுதால்
புதிதாக இலைகள்
துளிர்க்காது...!

சரித்திரம்
மறுபடி திரும்பும்
அதுவரை
பொறுத்திருந்தால்
உண்மை விளங்கும்!

 

-----------------

கிறுக்கல் 39:

துளிரானாய்
பின் மலரானாய்
என் மனதின்
நினைவெல்லாம்
நீயே ஆனாய்!

கனவானாய்
கனவில் வரும்
காட்சி நீயானாய்!

துணையானாய்
துவளும் போதெல்லாம்
எனைத் தாங்கும்
சுமை கல்லானாய்!

அழும் போதெல்லாம்
கண்ணீர் துடைக்கும
கையானாய்
விழும் போதெல்லாம்
மார்பில் தாங்கி
தாயானாய்!

தேவ தேவா
ஒரு போதும்
பிரிவு வாராத
வரம் தாராய்!

 

-----------------

கிறுக்கல் 40:

நிலம்
அநாதையாகிப் போய்
அழுதது...

யார் யாரோ
மிதித்துச் செல்கின்ற
வலி தாங்கி
வேறெதற்கோ
நிலம் அழுதது...!

நிலத்தைப் பிரிவது
மனிதர்களுக்கு மட்டும்
துக்கமல்ல...

பரம்பரையாய் வாழ்ந்த
மனிதர்களைப் பிரிவது
கண்டு நிலமும்
துக்கப்பட்டது...

வயலாகி
வடலி முளைத்த
வளவாகி
பூ மணத்த தோட்டமாகி
எம் வாழ்வோடு
கைகோர்த்த நிலம்
இப்போதெல்லாம்
மெட்டந்தலையோடு முணுமுணுக்கும்
மரங்களின் சோகம் கேட்டு
தானும் அழுதது...!

பல இடங்களில்
நிலத்தில் ஈரமிருப்பது
அதன் கண்ணீரை
அடையாளப்படுத்துகிறது!

சில இடங்கிளில்
காய்ந்து போய்
நிலம் இருப்பது
அழுது அழுது
அதன் கண்ணீர் வற்றியதை
அடையாளப்படுத்துகிறது!

--------------------------------------

தற்காலிகமாக முற்றுப் பெறுகிறது யாழ்க் களக் கிறுக்கல்கள்.

Saturday, 28 February 2009

யாழ் களக் கிறுக்கல்கள் - XI

கிறுக்கல் 35:

யாவும் என்றோ முடியும்
ஆகும் அத்தனையும்
அழியும் என்ற விதியின் படி
யாவும் என்றோ முடியும்!

நீயும் நானும்
நொடியில்
மயான மடியில்!

சாவின் மடியில்
சண்டியனும் போவான்
நொடியில்!

தாயின் பாலில்
உடம்பில் ஓடும்
இரத்தம்
நோயில் விழுந்து
பாயில் படுத்த பின்னர்
ஓடி அடங்கும்!

வாழும் நாளில்
சூழும் சோகம்
வாடி வதங்கிச்
சோரும் நெஞ்சம்!

ஆழும் கடவுள்
அருள் ஒன்று தரவேண்டும்
நாளும் பொழுதும்
சோகச் சுவடறுத்து
சிந்தனைச் சுடர் வளர்த்து
தூய அன்பில்
உயிரத்தனையும் மூழ்கி
தேட வேண்டும்
பெரும் வாழ்வு தரும் ஜோதி!

 

-----------------

கிறுக்கல் 36:

மனதில் ஆசையோடு
எனக்கொரு ஆணைபோடு
மடியில் வந்து விழுந்து
மங்கை உன்னை
வீணையென மீட்டுவேன்!

நாளை என்று இன்னொரு
நாள் தேவையில்லை
ஆளையாள் அணைத்துக் கொள்ள
ஐயர் வந்து நேரம்
பார்க்கத் தேவையில்லை!

காலை விடியும் பொழுதில்
கற்கண்டு நினைப்பில்
உன் முகத்தை
வெட்கம் மெழுகும்
நல்ல சமயமென்றுணர்ந்து
என் கை
உன் இடை தழுவும்!
உடை அவிழும்!
அவிழும் உன்னுடை பற்ற
விரையும்
உன்னிரு கை
படை நடாத்தும்
காமனின் முன்
நடை தளர்ந்து
பஞ்சணையில் நீ
விழுவாய்! - உன்
நெஞ்சணை தேடி
என் முகம் மறையும்!

வேறென்ன சொல்ல
வேதியலில் சொல்லாத
பலவும்
களவியலில் நடக்குமடி
கண்ணே!

 

-----------------

கிறுக்கல் 37:

வாழ்த்துக்கள் கூறி
வாழ்த்த ஓர் இதயம்
இருந்தால்
கூட்டுக்குள் வீணே
அடைபட்டுக் கிடப்பேனோ?
பாட்டுக்குள் பல
சங்கதி வைப்பேன்
பலர் பாடி மகிழ
பல் சுவை
விருந்தளிப்பேன்!

காட்டுக்குள் கூவும்
குயில் போல்
தன் ஓட்டுக்குள்
தலை மறைக்கும்
ஆமை போல்
பூட்டுக்கள் பல கொண்டு
எனை நானே
பூட்டி வைத்தேன்!

தட்டுங்கள் கைகளிரண்டை
வானக் கூரை தட்டி
வாழ்த்துங்கள்
உதிருகின்ற நட்சத்திரங்கள்
என் மேல் பூவாய்
விழட்டும்...
ஒளிருகின்ற நிலவது
நில்லாது
என் கன்னந் தொட்டு
முத்தமிடட்டும்!

ஏதும் செய்யாது
ஏன் இப்படி நிற்கின்றீர்?

போதும் விளையாட்டு
உங்களை நம்பி
எப்படி புனைவேன்
நான் கவி!

Friday, 27 February 2009

யாழ் களக் கிறுக்கல்கள் - X

கிறுக்கல் 31:

தொடர்வதேனோ என்னை?
நிமிர்ந்து பார்த்து
நிலவைக் கேட்டேன்!

தலை கவிழ்ந்து
முகம் பார்த்துச் சொன்னது
நிலவு...
களவு போன என்
உள்ளத்தை களவாடிய கள்வன்
இவனா என அறியத் தொடர்ந்தேன்!

 

-----------------

கிறுக்கல் 32:

அவனாகட்டும்
உன் காதல் வானம் - உன்
செவ்விதழாகட்டும்
அவன் பருகும் தடாகம்!

மொட்டு அவிழட்டும்
அவன் கைகள் பட்டு
சொட்டுச் சொட்டாய்
ஜீவன் உருகட்டும்

கட்டு அவனை
காதலில் கட்டு
விட்டுப் பறக்காது இனி
அவன் காமனின் சிட்டு!

காட்டு உன்னழகை
அவன் முன் காட்டு
பார்த்து கண்கள் இமைக்காது
பார்த்து எழுதுவான்
பல பாட்டு!

நிப்பாட்டு
மின்சாரத்தை
அவன் ஆழட்டும்
உன் அழகின் சாரத்தை!!!

 

-----------------

கிறுக்கல் 33:

வெல்லலாம்
பெண் மனதை என்று
வெளிக்கிட்டால்
வில்லெல்லாம்
பழுது பார்த்து - எனைக்
கொல்லலாம் என்று
முடிவுகட்டி
கொவ்வையிதழ் வெடிப்புக்களில்
எனை வீழ்த்தி
புருவ வில் வளைத்து
பருவக் கணை தொடுத்து
நிராயுதபாணியைக் கொல்கின்றீரம்மா!
நிறுத்துங்கள் என்று
ஒரு குரல் வரக் காணோம்...
என்ன செய்குவேன்?
வேறேதும் செய்யாது
வேண்டாமிவள் என்று
விரைந்து செல்லின்
கனவுக் காட்சியில்
முதல் காட்சி
உன் மூச்சு வாங்கும்
முன்னிரு எழில் தானடி...
திடுக்கிட்டு விழித்தெழுந்து
திரு திருவென முழித்து
நாளை மீண்டும்
போர்க்களம் போக முடிவெடுப்பேன்...
நடப்பது நடக்கட்டும்
அடிப்பவளே
அணைப்பது தானே
காதல்...!

 

-----------------

கிறுக்கல் 34:

ஏதுமில்லை... ஏதுமில்லை
ஊருமில்லை உறவுமில்லை
உனக்கு நீயே சொந்தமில்லை
உலவிடும் உயிர் பறந்துபோனால்
தேடிவரப் பருந்துமில்லை இங்கே
போடா போ...
தமிழன் நீ என்பதால்
கோடி சாமி உனக்குண்டு
தேடி ஒரு சாமி வரவில்லை
உதவிட இன்று!

Sunday, 22 February 2009

யாழ் களக் கிறுக்கல்கள் - IX

கிறுக்கல் 27:

முத்தங்களை நான்
தருவேன்
அர்த்தங்களை நீ
புரிவாயோ?
வித்தகக் கவியிவன்
விண்ணாளாவும் தமிழோடு
விளையாடும் வெள்ளை நிலாவே
கொள்ளையழகும் சின்னவிதழும்
நான் சுவைப்பேன்
சிணுங்காமல் சிறைப்பட்டு
நீ கிடப்பாயா?
பாஷை பல பேசி
நேர முட்களை
சோம்பலோடு நோக்குவதென்ன?
ஆசை புரிய வைக்க
அன்பால் சிறை வைக்க
மீசை குற்றினாலும்
மிடுக்காக நான் தரும்
முத்தங்களே பல
பாஷை பேசுமடி!
பதிலாக நீ ஏதும்
பேசாதே...
சரியாகக் கணக்கிட்டு
முத்தங்கங்களைத்
திருப்பித் தருவாயா?

 

-----------------

கிறுக்கல் 28:

நீ
எய்கின்ற கவிப் பூக்கள் நன்று
நிமிடத்தில் பல கவிதை
எனக்குள்ளே தோன்றதடி இன்று!

பூ
பூக்கின்ற மெல்லிய ஓசை
செடி அறிந்திடும்
பெண் மனசில் பூக்கின்ற
காதலின் பாஷை
அவள் கண்ணில் புரிந்திடும்!

விழியாலே அழைப்பாள்
விரதங்கள் உடைப்பாள்
மெளன மொழி பேசுவாள்
மயக்கத்தில் ஆழ்த்துவாள்

முதல் ஸ்பரிசத்தில்
இதயத்தில் சிறகு முளைக்கும்
அவள் அருகிருந்தால்
எல்லாமே அந்நியமாகும்!

காதல்
சொல்வது போல்
அழகானதல்ல - அது
அழகிய
அவஸ்தையானது!

-----------------

கிறுக்கல் 29:

எப்படிப் புரியும்
இவர்களுக்கு
உனக்கும் எனக்குமிடையில்
உருகாத மெழுகுவர்த்தியொன்று
ஒளி தருவது...!

எப்படிச் சரியும்
இத் தேகம்
உன் பஞ்சுத் தலையணை மீது
பிஞ்சு விரல்கள்
ஸ்பரிசம் தராமல்!

எப்படி அறியும்
இவ் உலகம்
உனக்கும் எனக்குமிடையில்
பொதுவான மொழி
அன்பு என்பதை!

எப்படி அறிவார்
நம் பெற்றோர்
நம்மிருவர் வாழ்விலும்
நலம் வரும் என்பதை!

உன் நலனில் நானும்
என் நலனில் நீயும்
மனசுக்குள் அழுகின்றவேளை
நம் நலனில்
நமையாளும் இறைவன்
கை தரானா?
தருவான் என்கின்ற
நேர் சிந்தனையோடு மட்டும்
வாழ்கின்றேன்!

-----------------

கிறுக்கல் 30:

உனக்காக
தருவதற்கு
என்னிடம் எதுவுமில்லை
உன் நினைவுகளைத்
தவிர...

தனக்காக
எதையும் சிந்திக்காது
காதல்...

நமக்காக என்ற
சிக்கன வார்த்தையில்
சிறைப்படுவதில்
தனிச் சுகம்!

உயிரையும்
தருவேன் என்று
உளறுவதெல்லாம்
மகா கிறுக்கு!

வாழ்கைப் புத்தகத்தை
புரட்டும் போது
கூடவே நானும்
இருப்பேன் என்பதில்
தான் சுகம் இருக்கு!

வார்த்தைகளில் ஜாலம்
காட்டிப் புரியவைப்பதில்
இல்லை அன்பு!

Saturday, 21 February 2009

யாழ் களக் கிறுக்கல்கள் - VIII

கிறுக்கல் 24:

வாழ்கின்றேன் என்று
தான் சொல்கிறாய்
நீயும்
உண்மையில் வாழ்தல்
என்றால் என்ன?

சூரியனுக்குப் பின்
எழுந்து
பல் துலக்கி
தேநீர் தயாரித்து
குடித்து முடிய
கணினியின்
உயிர் பொத்தான் அழுத்தி
இணையத்தில் கொஞ்சம்
நடந்து திரிந்து
நாலைந்து தொ(ல்)லை பேசி
நேரம் கரைத்து
மதியம் ஏதேனும்
சமைத்துப் புசித்து
குட்டித் தூக்கத்தில்
தேகக் களைப்பகற்றி
மீண்டும் கணினி,இணையம்
இரவுணவு என்று
அதே பழைய பல்லவி
பாடி
நீயும் சொல்கிறாய்
வாழ்கின்றேன் என்று!

என்ன இது
காலத்தின் கை பிடித்து
நடை பழகாமல்
என் விதி
இதுவென மண்வாரித் தூற்றி
சந்தோசம் தொலைக்கின்றாய்!

நான் சொன்னது
கேட்டாய்
சொல்லாத சேதி எல்லாம்
உய்த்தறிந்து
சொல்லாததும் புரிவாய்!

உலக இயக்கம்
இம்மியும் நிற்காது
விலகி நிற்பதால்
விந்தைகள் நடக்காது
விம்மி நீ அழுதால்
கையொன்று நீளவேண்டும்
உனை நோக்கியும்!
தொட்டுத் துடைக்க
கையொன்று நீளும்மெனின்
பொய்கை போல் நீர் கொண்டு
கண்கள் அழுவதில் கூட
சுகமுண்டு!

 

-----------------

கிறுக்கல் 25:

எதிர்பார்ப்பு
ஏதுமில்லை எனக்குள்
கண்ணே உன் கை விரல்
பிடித்து நடப்பதுவும்
கண்ணசைவில் காலங்கள்
மறப்பதுவுமல்லால்
வேறெந்த எதிர்பார்ப்பும்
இல்லை எனக்குள்!

புதிர்போல இவ்வாழ்க்கை
முடிச்சுக்கள் அவிழ்கின்ற போது
அர்த்தங்கள் புரியும்!

எதிர்படும் இடர் எல்லாம்
என் அருகில் நீ
இருந்தால் விரைந்தே
ஓடுமடி!

கண்ணே கடைசிவரை
காதலிப்போம்
கட்டிலறைப் போர்
தொடுப்போம்!

 

-----------------

கிறுக்கல் 26:

கொஞ்சி
விளையாடலாம் தான்
அஞ்சி அஞ்சி
நீ போனால்
ஆவதெப்போது?

பஞ்சி பார்க்காது
பக்கத்தில் வாவேன்
கஞ்சி குடித்தபடி
கதைக்க
பல கதை உண்டு!

குஞ்சி பார்த்தால்
குடும்பத்திற்கே
தெரியவரும்...
ஆதலால் யாரும்
பார்க்காமல் என்னிடம்
வா நீ!

கை கோர்த்தபடி
பொது மைதானத்தில்
நடை பழக
எனக்கு விருப்பமில்லை
மெல்லிய இருட்டில்
நட்சத்திர வானம்
பார்த்தபடி
நடப்பதெனில் கொள்ளைப்
பிரியம்...
என்ன ஒன்று
கூடவே வெண்ணிலாவும்
வரும்...

Monday, 16 February 2009

யாழ் களக் கிறுக்கல்கள் - VII

கிறுக்கல் 20:

தவிக்கின்றேன்
மெத்தை மேல் நான்
அத்தை பெத்த
அருமை அத்தானே
அங்கங்கே தொடுகின்றாய்
அங்கங்கள் வலிக்காமல்...

இதழில் இளைப்பாற
வேண்டுமென்கிறாய் - என்
நுதலில் இதழ் ஒத்தடம்
தருகின்றாய்
மஞ்சமென என்
நெஞ்சில் தலைசாய்கின்றாய்

கொஞ்சமோ நீ
செய்யும் கூத்து...?
இன்னும் இன்னும்
வேண்டுமென கெஞ்ச
வைக்கின்றாய்
நொடிக்கொரு முறை
சொர்க்கத்தில்
தூங்கவைக்கின்றாய்

எல்லாம் சொர்பனமாய்
தோன்றுதடா கண்விழிக்க
நிஜத்தில் எப்போதடா
புரிவாய் எல்லாம்?

 

-----------------

கிறுக்கல் 21:

தேடுகின்றாய் நீயும்
எனக்குள் உறங்கும்
இன்னொருவனை...

சூடுகின்ற மலரிலும்
சுந்தரத் தமிழிலும்
பாடுகின்ற பட்சியின்
குரல் விநோதத்திலும்
என் வாசம் கலந்திருக்கும்!
காது திருப்பி
மெய் சிலிர்த்து
மனசுக்குள் உள்வாங்கு
வடிவாய் விஷ்வரூபமாவேன்!

நண்பனாய் நான் சிரிப்பேன்
நல்ல உள்ளதோடு
உனை அணைப்பேன்!

கண்களை மூடி
நீ தூங்கு
கண்டறியாத உலகம்
காறியுமிழும்
விடு...
விழி மூடி தியானி
வழி காட்டாத
உலக செய்கை
உனக்கேன் பயணி!!!

 

-----------------

கிறுக்கல் 22:

பயணி
கஜனி முகமது போல்
எத்தனை முறை
வேண்டுமெனினும்
பயணி
கோட்டை உனக்குத் தான்!

வீணே சயனித்திருப்பதிலும்
'விசர்'க் கதை பேசி
சாதாரண நரனாய்
நீ இருப்பதிலும் என்ன பயன்?

நடந்தால் தான் நதி
நுரை கக்கினாலும்
கரை தொட்டால் தான் கடல்
குறை இருந்தாலும்
உனக்குள் நம்பிக்கை
நிரப்பி
கறை யளித்து
பிறையென வளந்து
முழு நிலவாய்
ஒளி கொடுத்தால் தான்
நீ மனிதன்!

 

-----------------

கிறுக்கல் 23:

வீழமாட்டோம்
அண்ணன் சொல்
மீறமாட்டோம்

காலனாவோம்
கரிகாலன்
ஆணையேற்று

சிங்களஞ் சேனை
முடித்து
வெற்றி வீரனாவோம்!

மங்களம்
பாடவேணும்
மறப் புலி வீரம்
காணவேணும்

அங்கிள்
அன்ரி எல்லோரும்
கைசேருங்கோ
எம் தேசத்தின்
கங்குல் விடியும்
கோலம் பாருங்கோ!

Sunday, 15 February 2009

யாழ் களக் கிறுக்கல்கள் - VI

கிறுக்கல் 17:

இருட்டுக்குள்
இருப்பதாக சொல்பவர்களே
ஒரு விளக்கேற்றும்
அறிவில்லையா?
'அறிவு' இருட்டுக்குள்
இருக்குமெனின்
சிந்தனைத் திரிதூண்டியை
திருகுங்கள்
அடுத்தவரின்
அனுதாபத்திற்காக
ஏங்கின்றீர்கள்
வேண்டாமே...
இந்தச் சமூகம்
வேதனைப்படும் போதும்
வேர்வை வடிக்கும் போதும்
வேடிக்கை பார்பதோடு சரி
தொட்டு அணைத்து
தோளில் சாய்த்து
ஆறுதல் தராது
அறிவுரைகள் தருவதில்
என்ன பயன்?
வேண்டாம் வெங்காயமும்
இந்த வேடிக்கைச் சமூகமும்!

 

-----------------

கிறுக்கல் 18: 

எப்போது
கண்ணே
என் தேசம் விடியும்?

கடிகார முள்
சுற்றுகிறதே தவிர
எம் வாழ்க்கை
இன்னும்
சூனியமாய்...

சுழன்றடித்த காற்றில்
பறந்து போன
சருகுகள் போல
ஆளுக்கு ஒரு பக்கம்!

இன்று வரும்
நாளை வரும்
என்று சொன்னாலும்
என்று வரும்
என்று தெரியாததால்
எம் நம்பிக்கையின்
நாடித் துடிப்பும்
தளர்கிறது கண்ணே...

முற்றத்து மண்ணில்
பாயின்றிப் படுத்தாலும்
பயங்கரமாய் தூக்கம்
வருமே...
குமுறி அழுகின்றேனடி
குங்குமப் பூக் கன்னம்
தடவி...
குவிகின்ற இதழ் தொட்டு
முத்தமிட துடிக்கின்றதே
என் மனது
நடக்குமாடி கண்ணே?
அடுக்குமாடியில் குடியிருந்து
அங்கேயும் இங்கேயும்
விழியசைந்தாலும்
ஒரு மையத்தில்
வட்டமிடுதே நினைவெல்லாம்
உற்றுப் பார்த்தால்
அது நீயும் என் தேசமும்!

 

-----------------

கிறுக்கல் 19:

வழி என்னவென்று கேட்டு
விழி மூடும் பாவாய்
கவி நான் வரைய
கருவாக நீயே ஆவாய்
கரையும் சில திங்கள்
காத்திருக்கப்
புரியும் என்னுள்ளம்
புரிந்துவிட்டால்
சொர்க்கம் உனதில்லம்!

சுந்தரியே புரிவாயா?
புரிந்து பின் என்மேல்
கருணை மழை
பொழிவாயோ?

மந்திரியாய் நீயாவாய்
மன்னனாக நானாவேன்
நீதிகள் எனக்குச் சொல்வாய்
நிறைவாக அமையுமடி
எம்மரசு!

Wednesday, 11 February 2009

யாழ் களக் கிறுக்கல்கள் - V

கிறுக்கல் 14:

உயிரே
என்றென்னை
உருகி
அழைத்தவளே...

உயிர்
மறந்து போனதென்ன?
வீணே வாய்பிதற்றுகின்ற
வார்த்தைகளை
உண்மையென்று நான்
உணர்ந்தது தான் என்ன?

உண்மைதான் பலரும்
மனிதர்களைக்
காதலிப்பதை விட
வார்த்தைகளைக்
காதலிப்பதே
அதிகம்...

 

-----------------

கிறுக்கல் 15:

 
[Photo - AFP]

போதுமென்று
நீர் உரைத்தாலும்
மனசுக்குள்
ஆசை நரைக்கவில்லை...

'சாது'வாக தான்
இருப்பீர்
காவி
தரிப்பீர்
ஆனாலும்
காரில் வருகின்றீர்
வசை சொற்களை
வாந்தி எடுக்கின்றீர்

மனித நேயம்
மலரவேண்டிய
மனங்களில்
முட்களை பரப்பி
முட்டாளாக்குகின்றீர்...

பிழைக்கப் பல
வழிகள்
உண்டய்யா...

புத்தன் என்னும்
புனிதன் பேரைச்
சொல்லிப்
பிழைக்க
வெட்கமில்லையா?

அரசின் கீழிருந்து
தியானம்
செய்யாமல்
அரசில் ஆசை
ஏனய்யா?
சிரசு தடவிச்
சொல்லும்
பரிசு கெட்டதனம்
இதுவய்யா...

புத்தபிட்சு சொல் கேட்டு
ஆசோகன்
போர்வாள் மறந்தான்

லட்சம் பிட்சு கூடி
'போர் செய்
போர் செய்' என்று
கூர் வாள்
கொடுக்கின்றீர்
பிட்சு இல்லை நீர்
மரந்தான்...!

 

-----------------

கிறுக்கல் 16:


[photo - tamilnet]

நாங்களும்
மனிதர்கள் தான்
அடிக்கடி இப்படிச்
சொல்லிக் கொள்வது
அவசியமாகிறது
மறந்துவிடுகின்ற
அபாயம் உண்டு

அடுத்தவரின் கரிசனையை
எதிர்பார்க்கின்ற போதெல்லாம்
ஏமாற்றங்கள் தான்

புரிந்து கொள்ளாமை
புரிந்தும் உணர்ந்து கொள்ளாமை
இப்படிப் பல காரணங்கள்

பிரச்சனை புரியாதவரெல்லாம்
பாதை இதுவெனச்
சொல்வதில்
அர்த்தமுண்டோ?

தள்ளி நின்று
வேடிக்கை பார்த்து
வேண்டாமெனத் தடுப்பதை
விடுவீர்

கிட்ட வாரும்
பிரச்சனையின்
வேர் தேடும்
பிறகு சொல்லும்
எது வழியென...

நாங்களும்
மனிதர்கள் தான்
விலங்குகளோடு
சண்டைபோடுகிறோம்!!!
விலங்குகள்
உடையுமோ?
விரதங்கள்
முடியுமோ?
விரக்தியோடு
புன்னகைப்பதைத் தவிர
எதுவும் தோன்றவில்லை....

Tuesday, 10 February 2009

யாழ் களக் கிறுக்கல்கள் - IV

கிறுக்கல் 11:

மாறும் எல்லாமே
ஒரு நாள் மாறும்
மாற்றம்
என்பதைத் தவிர

சீறும் புலியின்
சீற்றத்தின் முன்னே
சீயங்கள் (சிங்கங்கள்)
சிதறி ஓடும்

ரணங்கள் ஆறும்
வாழக்கை
ரம்மியமாய் மாறும்

ரகசியமாய்ச்
சேர்த்து வைத்த
என் ஈழக் காதல்
ஐ.நா வில் முழங்கி
உலக வீதியில்
கேட்கும் ...

ஈழம் இன்னொரு
சிங்கப்பூராய்
ஆகும்

எதுவும் தூரமில்லை
எழுந்து நடந்தால்!

 

-----------------

கிறுக்கல் 12:

அரங்கேறும் என்பாடல்
ஒருநாள்
தமிழ்கூறும் உலகெங்கும்
எழுந்தாடும்
திருநாள்
மரமேறும் மந்தியும்
மகிழ்தாடும்
பலவேறு புதினங்கள்
எனைப் புகழ்ந்தெழும்
ஒருவாறு தமிழ்
உலகாளும் - நாம்
உரையாடும்
பாஷை
தமிழாகும்
அழகுத்
தமிழாகும்!

 

-----------------

கிறுக்கல் 13:

வாங்கித் தா
ஈழத்தை
தூக்கத்திலும்
துட்டர் பயம்
வந்தெழுப்பி
'வா' வென்று உறுமி
வசை மொழி பேசி
வரிசையாய் ஏற்றுகின்றார்
பஸ்சில்...

வாழ வழியில்லையாம்
கொழும்பில்
கோழைகாள்
எம்மையடா
துரத்துகின்றீர்?
எமனின் கரம்
தொட்டா விளையாடுகின்றீர்?
சிவப்புத் தோல் போர்த்திய
வெள்ளை நரியே
ஈழத்தின் வீதியெங்கும்
சிவப்பை அள்ளித்
தெளிக்கின்றாய்
சிந்திக்கும் திறன்
மறந்தாய்
அலரி மாளிகையில்
குளறி அழுவாய்
பொறு!

ஈழமே
உன் பெறுமாதம்
நெருங்குகின்றது
காலமே
சுகப் பிரசவம்
நடக்கும்
வகை செய்வாய்
உலகமே
குந்தியிருந்து
குறட்டைவிட்டு
கனவில் விழித்து
'ஆ' வென்று கேட்காதீர்
குழந்தைக்கு
வாழத்துச் சொல்வீர்
அங்கீகரிப்பீர்
முடியாவிடின்
ஊமையாவீர்
எம் விதியை
நாமே வரையும்
பிரமாக்களாவோம்!

Monday, 9 February 2009

யாழ் களக் கிறுக்கல்கள் - III

கிறுக்கல்கள் தொடர்கிறது...

 

கிறுக்கல் 08:

வாழ்க்கை
ஒன்றும்
புதிரில்லை
நாளைய ஏக்கம்
நேற்றை கவலை
பலருக்கு...
இன்று, இந்த நிமிஷம்
நாமிருப்பதே
நிஜம்..
இன்றையப் பொழுதைக்
கொண்டாடுங்கள்
சந்தோஷங்களை
ஒத்தி வைக்க
இது ஒன்றும்
கூட்டத் தொடரில்லை!
வாருங்கள்
நண்பர்களே
வசந்தங்கள்
காத்திருப்பதில்லை
வசந்தாக்களும்
கூடத் தான்!!!

-----------------

கிறுக்கல் 09:

என்னவளே
என்னிதயம்
ஆள்பவளே
சின்னவளே
கறுப்பான
என் மேல்
மையல் கொண்டவளே
இதயப் பொய்கையில்
அடிக்கடி அமிர்தம்
வார்பவளே
வருவேன் மீண்டுமென
வார்த்தையால்
வருடிச் சென்றவளே
எங்கையடி சென்றாய்
என்னை விட்டு...?

வானை விட்டு
நிலவு பிரிந்தால்
வானென்ன செய்யும்
வாடி என் பெண்ணே
முகில் துப்பட்டாவால்
உன் மேனி மூடி
தொட்டணைக்க
உள்ளம் துடிக்குதடி!

 

-----------------

கிறுக்கல் 10:

பிடித்துள்ளது
என்று சொன்னாய்
நீ ...
பிளேன் ஏறி
இங்கு வந்த பின்
பிடிக்கவில்லை
என்றாய்
வெறும்
தோற்ற மயக்கத்தில்
தொலைந்து
போனதோ
உன் காதல்?

Friday, 6 February 2009

யாழ் களக் கிறுக்கல்கள் - II

மேலும் சிறு கிறுக்கல்கள்...

கிறுக்கல் 04:

முரசு கொட்டி முழங்கடா
அரசு கட்டில் நடுங்கட்டும்
பரிசு தரப்போகிறான்
தலைவன்
கொலுசு கட்டி ஆடடி
குழந்தாய்...
கொக்கரிக்கும் கோழிகள்
சமையலாகப் போகுது!


சிவப்புத் தோல் போர்த்திய
நரியடா மகிந்தன் - அவன்
திட்டம் எல்லாம்
மண்ணாகப் போகுது
பண்ணாகப் / Fun ஆகப் பாட்டெழு
தம்பி...
பலதேசம் கேட்கப் பாடலாம்
ஒரு தேசம் தமிழனுக்கென்று
வருமடா நாளை
அப்போது ஓடிப் போன
கூட்டமெல்லாம்
வந்தாட்டுமடா வாலை!

 

-----------------

கிறுக்கல் 05:

தெரியாதோ கண்ணே
சேதி?
வானில் மறுபடியும்
புலிப் பாய்ந்த கதை...
கிலி பிடித்து
கிடக்குதடி
சிங்களச் சேனை
கெதியாக ஈழம்
வரப்போகுதடி
துணிவோடு இரடி
எந்த நாடு விசா
மறுத்தாலும் - எம்
ஈழமிருக்கடி...!

 

-----------------

கிறுக்கல் 06:

இருக்கிறேன் நான்
இங்கே என்று
சொல்லத்தான்
ஆசை...
சொல்லித் தெரிவதில்லையே
பாசம்...
மெளனமாகி
சோகங்களை எனக்குள்
சிலுவையாக்குகின்றேன்
யார் வருவார்
சேர்ந்து தோள்
கொடுக்க?
தேளாகி என்னைக்
கடிக்கின்றபோதெல்லாம்
உன் மனம் ஏனோ
மறந்துபோகிறது
மருந்து போடவும்
நீ தான்
வரவேணும் என்பதை!

 

-----------------

கிறுக்கல் 07:

காதலித்தாய்
என்று கலக்கமின்றி
சொல்கிறாயே
மைந்தா...
இந்தா
இதைப் பிடி
என்னவென்று படி
வடிவான உன்
அத்தை மகள்
உனக்குத் தானென்று
கொம்மான்
எழுதியுள்ளார்
அம்'மான்'
உனக்குக் கிடைத்தால்
எம் பெருமான்
ஆசியிது வென்பேன்!
சும்மாவா தம்பி
சுருட்ட எவ்வளவோ
சொத்திருக்கு அவளிடம்
'சுருட்டை' எவ்வளவு
நாள் நானும்
சுருட்டுவது?
கையிரண்டைப்
பிசையாமல்
கடகடவென்றே
உன் நெஞ்சத்தில்
உள்ள சேதி
சொல்வாய்...
மைந்தா

 

மேலும் கிறுக்குவேன்...

Thursday, 5 February 2009

யாழ் களக் கிறுக்கல்கள் - I

யாழ் களத்தில், குறிப்பாக கவிதை அந்தாதிப் பகுதியில் அடியேன் அவ்வப்போது கிறுக்கியவற்றின் தொகுப்பாக இந்தப் பதிவும் இனி வரக்கூடிய சில பதிவுகளும் அமையப்போகின்றன.

மற்றவர்களின் முடிவுச் சொல்லை, முதல் சொல்லாகக் கொண்டு எழுதப்படுவது கவிதை அந்தாதி... எழுத்தைக் கூர்மைப் படுத்திக்கொள்ள அருமையான இடமாக இதனைக் கொள்ளலாம் என்பது என் எண்ணம். அந்த வகையில் அடியேன் எழுதியவற்றில் மிகவும் பிடித்தமானவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்ளவிழைகின்றேன். (என் எழுத்திற்கு முதல் ரசிகன் நானே...!)

இவற்றின் பாடு பொருள் பல்வேறு முகங்கள் காட்டலாம்... காதல்,காமம்,வீரம்,விநோதம் அவற்றில் சில முகங்கள்... இப்படி எழுதப்பட்ட சிலவற்றை வாசித்தவர்கள் தங்களைத் தாக்குவதாக நினைந்து கொண்டு என்னைக் கோபித்துக் கொண்டதும் உண்டு (அதாவது க.அ பகுதியில் உடன் எழுதியவர்கள்... ) அதற்கு நான் என்ன செய்ய முடியும்... (பொது வாழ்க்கை என்று வந்தால் இதெல்லாம் சகஜம் தானே ராஜா... )

சரி அது நிற்க, முதலில் சில கிறுக்கல்களைப் பார்க்கலாம். (நீயும் உன் கிறுக்கல்களும்... என்று கோபித்துக்கொள்வதாக இருந்தாலும் பின்னூட்டல் மூலம் கோபித்துக் கொள்ளுங்கள்...)

 

கிறுக்கல் 01:

கேளாயோ
என் தோழா
நாளாக நாளாக
எம் பகை கூராகும்
குற்றிக் கிழித்து
கும்மாளமடிக்கும்
வாளாக மாறிப்
புலி பாயாதோ...
புவி புருவம் நெளித்து
உள்ளுக்குள் குறுநகை
செய்யாதோ... ?
கூலாக கோலோ
நீ குடிக்கின்றாய்
குதித்து எழு...
கூளிங் கிளாஸ் கழற்று...
களம் விரை என்னோடு
பட படக்கும் புலிக்கொடி...
பார்கலாம் நாளை...!

-----------------

கிறுக்கல் 02:

குட்டித் தேவதையே...
குட்டிக் கரணம் போட்டுக்
கும்பிட்டுக் கேட்கின்றேன்
சட்டித் தலையன் என்று
சட்டை செய்யாது
போகாதே
கட்டி ஒரு
கனி முத்தம் கொடேன்!
எட்டி நின்று எத்தனை
நாள் பார்ப்பது?
உன்னிதயம்
தட்டி காதல் மனுச்
செய்தேன்...!
ஓடி வாவேன்...
ஒன்றாக ஊரெல்லாம்
சுத்தலாம்
விண் முட்டும் வண்ணம்
காதல் செய்யலாம்
வாடி என்னிதயம்
ஆழ்பவளே...!

-----------------

கிறுக்கல் 03:

விருத்திசெய்யென்று
வில்லங்கம் பேசும்
விகடகவி ஐயா,
விநோதமாய் உள்ளது
உம் கணக்கு...!
முத்தக் கணக்கெல்லாம்
மெத்தை மீது விட்டிறங்குவதே
அழகய்யா...
சத்தம் போட்டு
ஜதி பிடித்து
உலகறியச் சொல்ல
இதுவென்ன சிறீலங்கா
ராணுவத் தலைக் கணக்கா?
பட படக்கும் கரு விழி
அழகில் சருகாக
உதிர்ந்து விட்டு...
இதயத்தை இழந்துவிட்டு....
புலம்ப வேண்டாம் ஐயா
போகட்டும் அவள்...
ஆண்களின் அன்பை
அத்தனை பெண்களும்
புரிந்து கொள்வதில்லை...!

 

மேலும் சில கிறுக்கல்களுடன் அடுத்த பதிவில்... (ஒரு வார்த்தை எழுதுங்கோ...)

Thursday, 29 January 2009

எழுந்து வாருங்கள்...!

எழுந்து வாருங்கள்
இனியும்
ஒதுங்கி நிற்கும்
சாபம் வேண்டாம்
எழுந்து வாருங்கள்!

சந்து, பொந்து எங்கிருந்தாலும்
வாண்டு, பெண்டு
அனைவரும் சேர்ந்து
முந்தி வாருங்கள்
முழு மனசாய் வாருங்கள்!

அந்திவானச் சிவப்பை அள்ளி
விழிகளில் பூசுங்கள்...
ஆதவன் வெப்பம் அள்ளி
நாக்கினில் தடவுங்கள்...
அடி மேல் அடி அடித்தால்
அம்மி நகருமெனில்
மனசும் மாறும் எனும்
மந்திரம் பழகுங்கள்!

தலை ஆறு போல்
நீவீர் திரண்டு வந்தால்
வரலாறு இதனைப்
பதிவு செய்யும்

வற்றாத வெள்ளம் போல்
எங்கு போய் உற்றாலும்
வற்றாத ஈழ வேட்கை
கண்டு உலகோரும்
புரிந்து கொள்வர்
உதவிட முன்வருவர்!

முற்றாக எம்மினத்தை
அழிக்கின்ற முட்டாள்கள்
நட்டாற்றில் நிற்கவேணும்
நமக்கொரு நீதி
கிடைக்க வேணும்!

நாற்றிசையும் அதிரட்டும்
நாளிழிதழ்கள் எழுதட்டும்
நாளை எமக்கெனும்
வேளை பிறக்கட்டும்!
சாலை எங்கும்
தமிழ் ழுழங்கட்டும்!
தமிழன்
சாவை தடுத்து நிறுத்தட்டும்!

Saturday, 24 January 2009

பட்சி சொன்ன க(வி)தை!

எங்கிருந்தோ ஒரு
பட்சி வந்து சொன்னது
மங்குவது போலிருக்கும்
யாவும் மங்குவது கிடையாதென்று!

எத்திசையும் எக்காளச்
சிரிப்பு...
சுற்றி வரப் பகைவனின்
இருப்பு...
வீழ்ந்துவிட்டோம் என்று
இவர் நினைப்பு
விழ விழ எழுந்த கதை
பல இருக்கு!
அப்போது தெளியும்
மகிந்தனின் கிறுக்கு!

கால காலமாய்
நாமிருந்த மண்
வேழம் போல் பொருதும்
வீரம் நிறைந்த மண்
நாணல் போல் விழுவதும்
நேரம் பார்த்து எழுவதும்
கூனல் வீரம் கொண்ட
பகைவனுக்குப் புரியாது!
புரியும் போது அவனுடலில்
உயிர் தரியாது!

அப்பாவிகள் பலர்
இப்ப ஆவிகள்!
புலி வேட்டையென்ற பெயரில்
ஹெலியில் கூட வந்து
குண்டு போடுகின்றீர்
ஹெகலிய ரம்புக்வல்லவிற்கு
தீனி போடுகின்றீர்!

அடியும் உதையும்
அண்ணன் தந்தால் புரியும்
விடியும் போதே
காட்சி மாறலாம்
விந்தை எதுவுமில்லை
முந்தை நடந்ததெல்லாம்
சிந்தை நினைத்துப் பார்த்தால்
ஆந்தை கூட அலறும்
உம் ஆட்டம் கொஞ்சம்
அடங்கும்!

Related Posts Plugin for WordPress, Blogger...
பின்னூட்டல்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்