Kaviyarankam Baner

Thursday, 17 January 2008

கண்டதென்ன...?

என்னடா நீ
நாலுக்கு ஐந்தடி
அறையில்
கொண்டாட்டம்
ஏதுவுமின்றி கொல்கின்றாய்
நிமிடங்களை!

வெளிநாடு வந்துமென்ன
கண்டாய் இங்கே?
ஒருநாடு உனக்கில்லாது
குளிர்நாடு வந்து
குமைகின்றாய் உள்ளே!

காலைச் சூரியன்
பார்த்ததுண்டா?
கடலலை கால் நனைக்க
மகிழ்ந்து சிரித்ததுண்டா?

போடா... போ...
சூரியனுக்கு முன்னெழுந்து
நடுங்கும் குளிரில்
வீதியில் நடைபயின்று
வேலைக்குப் போனால்
நடுநிசியில் வீடு திரும்பி
மீண்டும் மறுநாள்
அதே செக்குமாட்டு
வாழ்க்கை...!

கேட்டால் நாளை
சந்தோசத்திற்கென்பாய்!

உனை கேலியாய்
பார்த்துச் சிரிக்கும்
சமகாலத்தைக் கவனி...

கண்களில் மின்னும்
தங்கையின் கல்யாணக்
கனவு...
கஸ்டத்தில் ஆடும்
குடும்பத்தின் வாழ்க்கைப்
படகு...

எல்லாம் சரி...

உன் முகமூடி
கழட்டி
உண்மை நிலை
உரை
சமாந்திரக் கோடு
கிழி
குடும்பத்தோடு உன்
வாழ்வும் பயணிக்க
வேண்டுமடா...!

வெளிநாட்டில் இருப்பது
கெளரவம் என்று
நம்நாட்டில் நினைப்பு...

யூரோவில்
பவுண்சில் நீ
அனுப்பும் காசில்
இந்திரலோகத்தின்
அதிபதியாய் நீ தெரிவாய்!

யாரேனும் இங்கு வந்து
நாம் படும் துன்பம்
அறிந்ததுண்டா?

உள்ளுக்குள் ஏதோவொரு
சோகச் சிலுவையை
மனசு சுமப்பது
புரியுமா?

வெளிவேஷம் போட்டுன்
வேதனை மறைக்காதே...

வாழ்வென்பது
நீயும் வாழ்ந்து
மற்றவரையும்
வாழவைப்பது...!

கலங்காதே கண்ணே...

எங்கிருந்தோ எனை
ஆழ்கின்ற
என்னவளே...

முன்னொருபோதும்
இத்தனை சந்தோசம்
அடைந்தவனில்லை நான்!

பின்பு ஒருநாள்
தேவதை நீ வருவாய் எனும்
அசரீரி ஏதும்
கேட்டதில்லை...

ஆனாலும்
உன் தரிசனம்
கிடைத்தது...
காதலெனும்
புதுசுகம் மலர்ந்தது!

நீ இல்லாத போது
வலிக்கின்ற நெஞ்சம்
அருகில் வந்தபின்
கவனிப்பதே இல்லை

பிரிவின் போது தான்
உள்ளிருக்கும்
காதல் விழித்துக்
கொள்கிறது!

கண்ணே கலங்காதே...
நகருகின்ற நாட்களில்
எம் வாழ்வு எங்கே என்று
தேடாதே...

நாட்களின் வரையறைக்குள்
இல்லையடி நம் வாழ்வு!

பூக்களைப் பார்
மாலையில் மரணம்
என்றாலும்
காலையில் இதழ்விரித்துச்
சிரிக்கின்ற பக்குவம் அதற்கு...
அதனால் தானடி
மீ்ண்டும் மறுநாள் காலை
மறுபடியும் உயிர்த்தெழும்!
கவனி...
பூக்களுக்கு மரணமில்லை!

ஆகவே,
நாட்களை எண்ணி
கைவிரல் சோராதே!

மறுநிமிட சந்தோசத்திற்காய்
இந்த நிமிடம் கொல்லாதே!

கண்ணே...
நெஞ்சில் இருத்தி
நினைக்க
கற்கண்டு நினைவுகள்
நிறைய உண்டு!

யன்னல் திற
இதமான காற்றுன்
இதயம் தடவட்டும்
ஏனெனில்
அந்தக் காற்றைத் தான்
நானும் சுவாசிக்க வேண்டும்!

Sunday, 13 January 2008

தைப் பொங்கல் வாழ்த்துக்கள்....-----
வடிவமைப்பு : சுசி நடா

Thursday, 10 January 2008

பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!

1997 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பொங்கல் கவியரங்கில் பாடப்பட்ட கவிதை இது. பொருத்தப்பாடு கருதி இப்போது பதிகின்றேன்.

 

புது வருஷம் ஒன்று புஷ்பமாகுது - அதில்
ஒரு நிமிஷம் கூட அர்த்தமாகுது
ஆண்டு பல கண்டோம் - அதில்
என்ன சுகம் கொண்டோம்
வேண்டும் வரம் வேண்டி நின்றோம்
'97 இன் உதயத்தையே
தொழுது நின்றோம்

தையே நீ
கிழிந்த மனங்களை தையேன்
வெய்யோன் கண்டு அஞ்சாதே
அவனுன்னை வையான்
பையவே வருவாய்
நல்லதே தருவாய்
மின்னலே உன்னைத் தொழுதேன்
என்னுள்ளே புகுவாய்
கோடிப் பிரகாசம் கூட்டுவாய்

'தை' என்ற தையலுக்கு
தாலி கட்டவென்றே
'வெய்' என்ன வெய்யோனும்
வேளை பார்த்து நின்றான்
மை பூசும் தையலவள்
சுடர் வீசும் சுந்தர புருஷனுடன்
ஜோடி சேர்ந்து நின்றாள்
'பொங்கல்' என்னும்
இன்பவிழா தந்தாள்

புதுநெல் அரிந்தெடுத்துப்
பக்குவமாய் குற்றிப் புடைத்து
குறுநெல் நீக்கி
புதுப் பானை தனை அடுப்பேற்றி
பால் பொங்க...
அது கண்டு...
மனம் துள்ள...

பெண்டுடன் வண்டுறங்கும்
புதுமலரில் பட்டுச் சிரிக்கும்
சுடர் கதிரை உண்டி
உண்ண, அண்டி வருகவென்று
அருகழைத்து
மண்டி நிற்கும் மகிழ்ச்சி தன்னைக்
கொட்டி பொங்கல் உண்ணச்
செய்யும் உழவரைக்
கண்டு மகிழும் கதிரும்
அவன் அருளால் மறையும்
அவர்தம் வாழ்க்கைத் துயரும்!

பொங்கும் நாளில் எங்கும்
தங்கும் இன்பம்
சுடரும் ஒளியில் சுட்டுப்
பொசுங்கும் துன்பம்
மலரும் மலரில்
தெரியும் எங்கள் வாழ்க்கை
அலறும் தீமை
ஓடி மறையும் சேய்மை
"ஆகா..." இதுவென்ன
புதுமை என்று மனம் பாடும்
கவிதை
உலகமெல்லாம் தொழுது
நிற்கும் அந்தச்
சுந்தரக் கதிரை!

ஆண்டாண்டாய் எதிர்பார்த்த
அத்தனையும்
புத்தாண்டாய்ப் பூத்திட்ட
'97 இன் வசந்தத்தில்
சுகந்தமாய் சுடர்கவென்று
தொழுது நிற்போம்
அந்தச் சுடர் ஒளியை

தையென்ற தையலின்
உயிர் போன்ற கதிரே
நீ தானே எம்மவர்க்கு
கதியே என இறைஞ்சி
நிற்போம் இன்னருள்ச் சுடரை!

சூழும் யுத்தத்தில் சாகும்
உயிரை
வாழும் உயிரென வரம்
அருள்வாய் என
வேண்டி நிற்போம்
அந்த திங்களவனின்
பள்ளித் தோழனை!

செயற்கையின் கடைக்கண்
பார்வையில் இழந்தோம்
எங்கள் மனப் போர்வையை
இயற்கையாய் வீசும் சுடரொளியே
செயற்கையாய் பூசும்
ஒவ்வொன்றையும்
குப்பையாய் கொழுத்து
எம்மை சந்தோச
வெள்ளத்தில் அழுத்து!

பகட்டாய் வெளியில்
பல தெரியும்
உள்ளத்தில் உருளுகின்ற
சோகப் புயல் யாருக்குப்
புரியும்?

நாளை துவக்கோடு தான்
பிள்ளை பிறக்கும்
அது கண்டு ஒவ்வொருவர்
மனமும் அதிர்ச்சியால்
பிளக்கும்...!

யுத்த காளான்கள்
உலகில் முளைக்கின்றபோது
வாழ்க்கை எப்படிச்
சிறக்கும்?

இன்னும்
சொற்ப காலத்தில்
மனித வாழ்க்கையே
கசக்கும்

கண்டு விட்ட கவலையை
எந்த மனித மனம் மறக்கும்?
கதிரே இனி உன்னையல்லோ
தினம் தினம் துதிக்கும்!

முக்கனியாய் மூன்று
தமிழ் ஓங்கும்
சர்க்கரையாய் சந்தோசம்
உள்ளங்களில் தேங்கும்

இளங்கரும்பாய் இன்னல் கூட
மறைவிடத்தில் தங்கும்
இன்பப் பாட்டினையே
உயிர் பாடும் எங்கும்!

இத்தனையும் வாய்க்கவே
பொங்கல் பானை பொங்கும்

பால் பொங்கும் வேகத்தில்
இன்னல்கள் அழிந்து போகும்
கோலங்கள் கண்களில்
மின்னிடட்டும்

இளவேனில் வண்டியேறி
இளசுகள் காதல் பாட்டு
பாடிடட்டும்

நின்று பல ஆண்டு
ஆண்டு விட்ட சோகம்
மண்ணோடு மண்ணாய்
மரித்து விடட்டும்

கண்ணோடு கண் கவ்வி
உயிரோடு உயிர் கலந்து
ஜோடியோடு கூடி
வாழும் யோகமான வாழ்க்கையொன்று
வேகமாக மண்ணினில்
நிலைத்திடட்டும்

உலக உயிரனைத்தும்
ஊற்றெடுக்கும் அன்பருவியில்
மூழ்கி மூழ்கி
இன்பம்
மாந்தி மாந்தி
எங்கும் நிலவிடட்டும்
சாந்தி சாந்தி!

பொங்குகின்ற பொங்கலிலே
மனித நேயம் மலிந்து கிடக்கட்டும்
எங்கள் மனங்களிலே

சங்கெடுத்து எங்கும்
முழங்கு...
'சண்டை' என்ற ஒன்றை
உயிரினி அறியாதென
இயம்பு!

சமாதானமாய் வாழவே
தீர்வுப் பொதி ஒன்று
தீட்டி விட்டோம் - அதில்
திட்டமாய் மூன்று
தீர்வினையே குறித்து விட்டோம்
ஒன்று அன்பு
இரண்டு அன்பு
மூன்று அன்பு...!

எங்கும் அன்பு
அன்பே வடிவம் சிவம்
இனி அகிலமே அன்பின்
வடிவம்...!
உயிரே அதில் தெய்வம்
ஒவ்வொன்றை ஒவ்வொன்றும்
வணங்கும்
சந்தோச வாழ்க்கையே
அதிலிருந்து தொடங்கும்!

பொங்கலோ... பொங்கல்...
என ஒவ்வொருவர்
வாயும் உச்சரிக்கும்
அத்தனை இன்ப சாகரத்தில்
மூழ்குவதால் எந்தன்
மூச்சடைக்கும்!

நிலவும் நிலவும் உலவும்
உலகமொன்று புதிதாய்க்
கருத்தரிக்கும் - அதில்
புத்தொளி கூடி
ஒவ்வொருவர் உயிரையும்
ஆசீர்வதிக்கும்!

போருக்கு ஒரு கல்லறை
ஒவ்வொருவர் மனவறையிலும்
கட்டப்படும்
ஆகவே,
செத்துவிட்ட போர்தன்னை
உயிர் என்றென்றும்
நினைக்காது சுகம்
கொண்டு சுகித்திருக்கும்!

பொங்குக பொங்கல் - அதில்
ஓங்குக இன்பம்
வளமான வாழ்வொன்று
விரைவாக நீவீர் காண
உளமார்ந்த பொங்கல்
வாழ்த்துக்கள்
எங்கும் தை... த... தை...
தாளங்கள்
சென்று வருகிறேன்
அன்பாய் விடை
கூறுங்கள்...

 

தை, 1997

------------------------------------------------------------------------

என்னை ஒவ்வொரு கவியரங்கிலும் அழைத்து உற்சாகப்படுத்தி கவிதை பாடச் செய்த செல்வி சிறிகுமாரி அவர்களுக்கு என்றென்றும் என் நன்றிகள்... _/\_

Tuesday, 1 January 2008

கவிதைகள் - அட்டவணை

…புதுப்பிக்கப்பட்ட திகதி  : 28 ஆனி 2014

 1. பிரிய சிநேகிதி...!
 2. பாவம் காற்று...!
 3. சிவன் வந்தான்
 4. நான் அரசியல்வாதி!
 5. சாவுக்கு ஒரு தூது!
 6. நவ நங்கை!
 7. மலர் வனம் வாடியதேன்?
 8. எனக்கு தூக்கு மேடை... உனக்கு நாடக மேடை...!
 9. காணவில்லை!
 10. யன்னல் நிலா
 11. முகங்கள்
 12. சீர்திருத்தங்கள்!
 13. அழகிய இளவரசி
 14. இவள் எப்படி?
 15. அத்தை மகள்
 16. சோகம்
 17. நெஞ்சு பொறுக்குதில்லையே....
 18. சகோதரிக்கு...
 19. வாராய் சித்திரையே...
 20. சமா(ர்)தானம்!
 21. இன்ப வதை...
 22. காதலர் தினத்தில் எழுதிய கவிதை...
 23. ஈழக் கனவு
 24. கனவுப் பெண்
 25. இறைவனுக்கு எச்சரிக்கை
 26. என் தேவி
 27. கண்மணிக்குள் சிக்கிய பெண்புறா
 28. பொய்யில் நிஜங்கள்
 29. சிறை
 30. வாழ்ந்தென்ன லாபம்?
 31. இறந்தது போதும்!
 32. தம்பிக்கு...
 33. நினைவுக் கவிதை [19-07-2007 மூன்றாம் ஆண்டு நினைவு]
 34. பலியாடுகள்!
 35. கற்கண்டு இதழ் சுவைப்பது எப்போது?
 36. பகையோடும் வேளை!
 37. காதல் பிரிவு - சில கீற்றுக்கள்
 38. சுடும் நினைவு
 39. ஏய் பகையே... அடாது செய்தாய்!
 40. தீப ஒளி வாழ்த்துகள்...
 41. இவன் ஒரு சிவன்!
 42. மனசு எனும் மந்திரக்கிண்ணம்!
 43. 2008 இல்...
 44. என் தேசம்
 45. வருக புத்தாண்டே...
 46. பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!
 47. கலங்காதே கண்ணே...
 48. கண்டதென்ன...?
 49. சுதந்திர தினம்!
 50. காதலர் தின சிறப்புக் கவிதைகள்
 51. நம் காதல்
 52. நாளைய பொழுது எமக்காய்...!
 53. தேவலோகத்தில் காதல் விழா!
 54. மாலினி நினைவுக் கவிதை
 55. புன்னகை
 56. சொல்வாய் தேவி...
 57. அயடீன் அரசாங்கம்!
 58. எம் இலக்கு...
 59. மங்கை இவள் பேசினால்(ள்)...
 60. நதியோடு...
 61. உருகும் உயிர்...
 62. புத்தன் போய் விட்டான்!
 63. வெங்காயம்...
 64. ஈழப் பரிசு!
 65. பூக்கள்
 66. கண்ணா...
 67. கோழி எடுத்த பாடம்
 68. தலைவா வாழீ நீ!
 69. ஊரின் நினைவலைகள்...
 70. புள்ளிகள் இடுவோம்...
 71. பட்சி சொன்ன க(வி)தை!
 72. எழுந்து வாருங்கள்...!
 73. யாழ் களக் கிறுக்கல்கள்...
 74. அதிகார நாடுகளே அசையுங்கள்…
 75. கடவுள் எழுதிய கவிதை!
 76. கசங்கிய காகிதங்களோடு…!
 77. நடந்த கதை!–ஒலி வடிவுடன்…
 78. கோலம் தரும் பாடம்!
 79. எல்லாம் நீ..!
 80. சூரியனுக்கு ஏது சாவு?
 81. மழை
 82. காதல் காயம்!
 83. காலத்தின் பிறந்த நாள் (2012)!
 84. வேலை முடிந்து வீடு திரும்புகையில்...
 85. காதல் விருந்து!
 86. குழந்தை பிறந்த போது…
 87. காத்திருப்பு…!
 88. கசக்கி எறிந்த ஓவியம்!
 89. காத்திருப்பு…! (வேறு)
 90. விட்டகலா நினைவுகள்!
 91. போதையில் நதி!
 92. சந்தோசம்!
 93. அவள் உலகம்!
 94. மழலையாகிறேன்…!
 95. முத்த அறுவடை!
 96. பழுத்த இலைகள்!
 97. எரியட்டும் பெரு நெருப்பு!
 98. கார்த்திகை இருபத்தேழு!
 99. கந்தக விரல்
 100. இன்றைய பொங்கல்!
 101. அணையா(த்) தீ!
 102. பிள்ளைத் தமிழ்!
 103. என்னத்தை சொல்ல...?

Related Posts Plugin for WordPress, Blogger...
பின்னூட்டல்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்