Kaviyarankam Baner

Monday, 29 December 2008

புது வருஷம் ஒன்று புஷ்பமாகுது...

எத்தனையோ கனவுகளைச் சுமந்து கொண்டு எனக்குத் தெரிந்த மொழியில் கிறுக்கி வருபவன் நான். அந்தக் கிறுக்கல்களை பொறுமையோடு ரசித்து கருத்திட்ட அன்பர்கள் சிலர். கருத்திடாமலே மானசீகமாக வாழ்த்திய அன்பர்கள் பலர்... எங்கிருந்தோ ஒரு உள்ளம் ரசிக்கும் என்ற ஆர்வத்தில் தான் பதிவிடுகிறேன்... இந்த ஆர்வம் பிறக்கின்ற ஆண்டில் இன்னும் பெருக வேண்டும்... இன்னும் பலப் பல எழுதவேண்டும் என்பது என் அவா... அன்பர்கள் தொடர்ந்து அடியேனை ஊக்கப்படுத்தவேண்டும்... குறை நிறைகளை விமர்சிக்க வேண்டும்... 

புதிய ஆண்டு...
புதிய தீர்மானங்கள்...
புதிய கனவுகள்...

எல்லோர் கனவுகளும் கால் முளைத்து,  பிறக்கின்ற புத்தாண்டில் நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

வாழ்த்துக்களுடன்
கவி ரூபன்.

 

Sunday, 21 December 2008

புள்ளிகள் இடுவோம்...

காலம் இது காட்டும்
புள்ளியில் நின்று கொண்டு
ஒவ்வொருவராய் முடிந்தளவு
புள்ளிகள் இடுவோம்...

எங்கிருந்தாலும் மறவாது
நீயும் ஒரு புள்ளியிடு
புள்ளிகளுக்கு இடையில்
தூரம் முக்கியமில்லை
புள்ளிகளை இணைப்பது
இப்போதெல்லாம் சுலபம்!

தள்ளி நின்று புள்ளிகளை
வேடிக்கை பார்க்கும்
கரும் புள்ளி நீ
எனில், இப்போதே
போய்விடு!

ஆனால்,
ஒன்றை மறவாதே
காலம் கட்டாயம்
உன் முகத்தில்
செம் புள்ளி குத்தும்!

பெரும் புள்ளி
சிறு புள்ளி எனும்
பேச்சே இங்கில்லை...

சிறு துளியில்
வந்தவன் தான் நீ
ஆகவே சிறு புள்ளிதான்
உன்னால் முடியும் என்று
சிணுங்காதே...!

நீ இங்கிடுகின்ற புள்ளிகள் தான்
அண்ணனுக்குத் தெம்பு
பிறகென்ன கிடைக்காதோ
ஈழம் நீ நம்பு!

ஒவ்வொரு தமிழனும்
பகைவனுக்கு அம்பு!

Sunday, 7 December 2008

ஊரின் நினைவலைகள்...

சொந்தம் சொல்லப் பலருண்டு
ஆனாலும் அருகில் எவருண்டு?

முந்தநாள் இறங்கி விளையாடியது
போல் நினைவில் உள்ள
என் வீட்டு முற்றமும்
கூடி இருந்து ரசித்த சுற்றமும்
போனதெங்கே?

ஆளுக்கொரு திசையில்
யார் யாரோ போட்டு வைத்த
பாதையில் நடக்கின்றோம்
எமக்கான பாதை
வந்து போவார் யாருமின்றி
வெறிச்சோடிக் கிடக்கின்றது!

வீட்டு வளவில் நின்ற
வடலிகளும்
உயர்ந்த மனித தோரணை
செய்யும் பனைகளும்
காற்று வந்து ஓலைகளுக்கிடையில்
ஒளித்து விளையாடுகையில்
விதம் விதமாய்
ஒலி செய்யும்!

காய்ந்த ஓலைகள் சில
களைத்து விழ
குருத்தோலைகள்
கைகொட்டிச் சிரிக்கும்!

வாழ்க்கையின் வடிவான
தத்துவம் அது!

எங்கிருந்தோ ஒரு குயில்
தன் குரல் செருமி
'ஒரு படப் பாடல்'
பாடும்!

கழுத்தில் மணி கட்டிய
சில காளைகள்
காலில் சலங்கை கட்டிய
மங்கையரைப் பழித்துச்
செல்லும்!

அந்தி நேர வானச் சிவப்பைக்
காட்டி தன் காதலியின்
நிறம் பழிப்பான்
காதலன்

அவளும் விடாது
'அத்தான் கைவிளக்கை ஏற்று
இருட்டில் உன்னைத் தேட
முடியாது' என்பாள்
தன் பங்குக்கு!

திண்ணையில் அமர்ந்து
சில பழசுகள்
சுருட்டை புகைத்தபடி
உலகப் பிரச்சனைகளுக்கு
இங்கிருந்தே தீர்வு
சொல்வர்...

எழுத எழுத
பல நினைவு
தனை எழுது என்று
எனை வருத்தும்!

எந்தப் புள்ளியில்
முடியும் என்று அறியாது
இத்தோடு முற்றுப் புள்ளியிடுகிறேன்!

Monday, 24 November 2008

தலைவா வாழீ நீ!

தமிழீழ தலைவர்

இரவாய் இருந்த
எம் வாழ்க்கை
பகலாய் விடிய
வந்துதித்த தலைவா
வாழீ நீ!

முதலாய் வந்த
குடியின் முதுகெலும்பு
ஒடிக்கப்பட்ட போது
உனக்கு மீசை கூட
முளைக்கவில்லை!

ஆசை அரும்புகின்ற
அந்த வயதில்
ஆயுதப் பாஷையன்றி
வேறெதுவும் இவர்க்குப்
புரியாதென உணர்ந்தவன்
நீ!

துவக்கை கைகளில்
எடுத்தவன் நீ!

தமிழின விடுதலைக்குப்
புது துவக்கம்
கொடுத்தவன் நீ!

உலகில்
தமிழின இருப்பை
எதிரொலிக்கச்
செய்தவன் நீ

காந்திய வழியில்
நடந்து சோர்ந்தவர்களுக்கு
நீ பிறந்தது
பெரும் தெம்பு!

ஏந்திய துவக்கின்
வாய் திறந்து பேசிய
வார்த்தையால் தான்
பேச்சு வார்த்தை கூட
நடந்தது!

உன் வேர்கள்
ஆழமானது
நீ பரப்பிய
கிளைகள்
பிரசித்தமானது

கொரில்லாவாகி
மரபுசார் இராணுவமாகி
அலை மீதேறி
கடற் புலியாகி
'வானுமாகிப் பரந்த'
பரம்பொருள் போல்
வான் புலியாகி
நீ பரப்பிய கிளைகள்
பிரசித்தமானது!

தலைவா,
நீண்ட ஆயுள் கொண்டு
எமைத்
தீண்ட வரும்
பகை அறுப்பாய்
பகலவன் போல்
தமிழீழ ஒளி
கொடுப்பாய்!

------------------

24-11-2008

Wednesday, 19 November 2008

கோழி எடுத்த பாடம்

image

வட்டம் போட
பழகுகிறதா
வானில் சுற்றிவரும்
பருந்து?

கட்டம் வைத்து
சுற்றியொரு சூழ்ச்சி
வலை பின்னி
கணத்தில் தரையிலிறங்கி
தனிமையில் நிற்கும்
குஞ்சைக் கவ்வி
மீண்டும்  வானில்
எழும் பருந்து!

"விட்டம் பார்த்து
நோட்டமிட்டது
போதும்...
வானில் வட்டமிடும்
பருந்து போல
உனை வாழ்வில்
கொல்ல பலருண்டு...
எழுந்து நில்
தாழ்ந்து வரும்
பருந்தை பாய்ந்து
கொல்..."

இப்படி பல சொல்லி
தன் அடுத்த குஞ்சுக்கு
பாடம் எடுத்தது
தாய்க் கோழி!

இழப்பு இடிந்து
போகவல்ல...!

Saturday, 8 November 2008

கண்ணா...

இருளுக்குள் தவித்துக்
கொண்டும்
பொல்லாத நினைவில்
என்னைத் தொலைத்துக்
கொண்டும்
எத்தனை காலம்
இருப்பேனடா கண்ணா?

உலகுக்குள்
உண்மையில்லை
மயங்கி மயங்கி
அலைபாய்கின்ற மனசினால்
நிம்மதியொன்றில்லை
சிலைகளுக்குப் பின்னால்
கடவுளைத் தேடியும்
சேலைகளுக்குப் பின்னால்
பெண்மையைத் தேடியும்
புரிந்து கொண்டது
எதுவுமில்லை!

நான், அவள்
சல்லாபிகின்ற எல்லாம்
ஐம்பூதச் சேர்கையின்றி
வேறெதுவுமில்லையெனும்
ஞானம் கூடவில்லை

வீணாகக் கரைகின்றது
காலம்
கோலங்கள் பல வரையும்
ஆசை மீன்கள் மனசுக்குள்
ஓடித் திரிந்தாலும்
சோம்பித் திரிகிறேன்...
சோகமடா எல்லாம்!

கண்ணா...
அண்ணாந்து பார்த்து
அரோகரா எனக்
கோஷம் போடும்
சராசரி மானிடனாக
என்னையும் ஆக்காதே

விண்ணெல்லாம்
தொட்டு
விண்மீன் அளைந்து
விளையாடும்
நீல மேனி வண்ணா
வாய் திறந்து
நான் சொன்னால் தான்
என் மனம் புரிவாயோ?

காலமெலாம்
உனை மனதில் ஏந்தி
உற்ற தோழானாக்கி
உறவு கொண்டேனே
மீதமெல்லாம் நான்
சொல்லவும் வேண்டுமோ?
மங்களங்கள் தருவாய்
என் ஈழ மண்ணின்
விடுதலை தருவாய்
நினைக்கும் போதெல்லாம்
கட்டற்ற கவி செய்யும்
புலமை தருவாய்!!!

Friday, 7 November 2008

பூக்கள்

பூக்கள்,
மரங்கள்
தேனள்ளி வழங்கும்
குடங்கள்

வழிகின்ற
தேனுண்ண
ரீங்காரிக்கும்
வண்டுகள்

சில பூக்கள்
வண்டுகளின்
வருகைக்காக
காத்திருந்து
உடல் வாடி
உதிர்கின்றன...

சில பூக்கள்
வண்டுகளின்
ஸ்பரிச சுகத்தில்
மெய் சிலிர்த்து
சந்தோசமாய்
மடிகின்றன...

சில பூக்கள்
காற்றின்
பலாத்கார உறவில்
வேண்டாமென
தலையசைத்து
வேதனையோடு
மடிகின்றன

பூக்கள்
பூசைக்காகவென்று
யார் சொன்னது?

உண்மையில்
பூக்கள் மரங்களின்
புணர்ச்சி
உறுப்புக்கள்!

மரங்களின்
மகிழ்ச்சிக்காக
மலரும்
பூக்களை
மனிதர்கள் தங்கள்
மனங்களின் மகிழ்ச்சிக்காக
ரசிப்பதில்
தவறில்லை
கரங்கள் கொண்டு
காம்பு முறித்து
கிள்ளியெடுக்கும்
போதெல்லாம்
மரங்களும் கண்ணீர்
வடிக்கும் என்பதை மறவாதீர்!

கடவுளுக்கு
அர்ச்சிக்கப்படும்
பூக்கள் எல்லாம்
ஏதோ ஒரு
புரியாத மொழியில்
புலம்புவதைக் கேட்கக்கூடாதென்றே
கடவுளும் கல்லானார்!

Thursday, 6 November 2008

ஈழப் பரிசு!

புரியும் சமாதானங்கள்
என்று
ஒதுங்கி நின்றோம்!
எரியும் நெருப்பில்
எண்ணை வார்ப்பதன்றி
எதுவும் புரியவில்லை
அந்த மடையருக்கு!


அரியும் புலியும்
மோதினால்
ஓட்டமிடும் அரியும்
தெரியும் நீல வானம்
அண்ணாந்து பார்
விரியும் வானவில்லில்
தெரியும் புலியின்
வரியும்!


சிரியும் ஐயா
சிரிசேன ஐயாக்களால்
சரிசமன் எமக்கு
என்றும் வராது


போலியாய் நெற்றியில்
பட்டையிடும் பக்தன் போல்
காவிப் பல் தெரிய
இவர்கள்
சமாதான வேதம்
ஓதுவது ஒன்றும்
புதிதி்ல்லை!


வேலியாய்
நாம் தான்
இருக்கவேணும் ஐயா!


ஆழிக் கடலலை
மேவி
விரியும் வானத்தில்
நீந்தி
வரிசையாய் புலிப்படை
நடத்தும்
அண்ணன் வீரத்தால்
பரிசாய் கிடைக்கும்
எமக்கு ஈழம்!

Tuesday, 4 November 2008

வெங்காயம்...

வெங்காயம் இதுவென
வெறுத்து ஒதுக்க முடியாது
உரிக்க உரிக்க
தன் காயம் பொறுத்து
தனக்காய் உனை அழவைத்து
சமையலுக்கு சுவை
சேர்ப்பதால்
வெங்காயம் இதுவென
வெறுத்து ஒதுக்கமுடியாது!


உன் காயம்
வெறும் உயிர் தாங்கும்
கூடு
பெருங்'காயம்' பட்டுவிட்டால்
தாங்காது வாடும்!


யமதூதன் உன் உயிர்
பறித்தபின்
உன் காயம்
சதத்திற்கும் உதவாது
மயான பூமியில்
தானே போய் எரியாது!


நாலு பேர் கத்தியழ
நாலு பேர் சுமந்தோட
நாலு பேர் நினைவில்
என்றும் இருக்க - நீ
செய்ய வேண்டிய
செயல் நாலல்ல பல!


ஆகவே,
கறிக்குதவும் வெங்காயம்
போல் உன் காயம்
யாருக்கும் உதவாது
மரித்துப் போனால்
உன் பரம்பரை
சுமக்கும் பெரும் பாவம்!

Sunday, 2 November 2008

புத்தன் போய் விட்டான்!

போதி மரத்துப்
புத்தன் ஏதோ
மோதி எழுந்தான்!

கூவி வந்த
குண்டொன்றின்
சன்னம் தன் தேகம்
கீறி இரத்தம்
வரக் கண்டான்!

தேடி ஒரு பிக்குவைப்
பிடித்து
நடப்பதென்ன என்று
அறியக் கேட்டான்

ஆதி முதல்
அத்தனையும் உரைத்த
பிக்கு...
அவசரமாய் போக வேண்டும்
என்று ஓடிப் போனான்!

புரியாத புத்தன்
அவனைத் தொடர்ந்து
போனான்...

என்ன ஒரு
முரண்பாடு...!
"புத்தனைத் தொடர்ந்து
பிக்குகள் போவதிருக்க
பிக்குவைத் தொடர்ந்து
புத்தன் போவதா...?"
என்ற தத்துவ
விசாரணை விடுத்து
நடப்பதைக் கவனிக்க...

ஓடிப் போன
அந்தப் பிக்கு
போருக்கு ஆதரவாய்
கோஷம் போட்ட
கூட்டத்தோடு சேர்ந்து
தானும் கோஷம்
போட்டான்...!

சாந்தம்
தவழவேண்டிய
முகத்தில்...
ஒரு வெறித்தனம்...
நரித்தனம்...

பூமியை
இரத்தத்தால் கழுவிய
அசோக மன்னனை
ஒரு புத்த பிக்கு
அன்பால் கழுவினான்!
அவனை நல்வழிப்
படுத்தினான்...!

நினைத்துப் பார்த்த
புத்தன்...
மறுபடியும் ஞானம்
பெற்றான்!

அரச மரங்களின்
அடியில் இருப்பதை
அடியோடு விட்டான்!

யாரேனும் புத்தன்
அரச மரங்களின் அடியில்
இருக்கக் கண்டால்
அது 'வெறும் கல்'
என்று உணர்க!

புத்தன் எப்போதோ
போய் விட்டான்!

-----------------------------------

02-11-2008

படம் உபயம் : Eranga Jayawardena/The Associated Press

Wednesday, 15 October 2008

உருகும் உயிர்...

 pirivu

சில நூறு வருடங்கள்
சேர்ந்திருந்தேனோ?
நெஞ்சத்தில் உன் நினைவை
எழுதி இருந்தேனோ?

பல நூறு மனிதர்கள்
தினம் பார்க்கிறேன்
பொய்யாய் முக மலர்ந்து,
முறுவல் செய்வதன்றி
மெய்யான அத்தனையும்
உன்னோடு விட்டு வந்தேன்!

காலையில் கண் சிமிட்டும்
அந்த முகம் இங்கில்லை

காதலோடு 'அருகில் வா'
என்றழைக்கும் கைகள்
இங்கில்லை

என் கையால் சூடாக
தேநீர் பரிமாற
நீ இங்கில்லை

உன் பஞ்சு மார்பில்
அணைத்த சுகமெல்லாம்
இந்தப் பஞ்சுத் தலையணை
தருவதில்லை!

'கிச்சு முச்சு' மூட்டும்
உன் விரல்கள்
கண்ட பின்னால்
'வீணை என்றெண்ணி
ஆணை மீட்டுகிறாள்
காண்' என்றெப்போதோ
எழுதிய கவி வரிகள்
நினைவில் வருமடி பிள்ளை!

பொய்யான இந்த
வாழ்க்கை போய்த்
தொலைய வேண்டும்
விரைவிலே...

பொல்லாத விதி எழுதும்
பேனாவை களவு செய்து
புதி விதி வரைய வேண்டும்
நம் வாழ்விலே!

Friday, 3 October 2008

நதியோடு...ஓடுகிறது நதி
சலனமேதுமின்றி...

யாரோ எறிந்த கல்
நதியில் எழுதியது
விளங்க முடியாப்
புதுக் கவிதை...!

படித்துப் பார்த்த
பாமரன் சொன்னான்
"அலை" அதுவென்று

உற்றுப் பார்த்து
கவிஞன் சொன்னான்
"நதி நடக்கின்ற
பாதச் சுவட்டை
எறிந்த கல்
காட்டிக் கொடுத்தது" என்று!

அருகில் வந்த
அறிவாளி சொன்னான்
"கவனிக்கச் சங்கதி பல உண்டு
வேறு திசை நோக்கி
நடக்க இந்த வையம்
சிறக்குமென்று..."

இவை ஏதுமறியாது
சலனமின்றி
ஓடுகிறது நதி!

Monday, 28 July 2008

மங்கை இவள் பேசினால்(ள்)... <<ஒலி வடிவம்>>

Get this widget | Track details | eSnips Social DNA

 

----இதர கவிதைகள்----

Saturday, 19 July 2008

மங்கை இவள் பேசினால்(ள்)...

girl

 

நானிங்கு
காத்திருப்பது
காதலனுக்காக அல்ல
கவிஞரே...

கடல் அலை
மெல்லக்
கால் நனைக்கும்
சுகத்திற்காக...

மரணித்து விளையாடுதல்
பற்றி எங்கேனும்
அறிந்ததுண்டா
கவிஞரே?

பாரும் கடலலையை
மரணம் அதற்கு
விளையாட்டு!

அருகில் நெருங்கி
வாரும் கவிஞரே
இப்படி அமர்ந்து
பேசலாம்...

உப்புக் கலந்த
காற்று...
அலையடிக்கும்
கடல்...
காலுக்கு இதம் தரும்
கடற்கரை மணல்...
சும்மா இராமல்
கடலுக்குள் விழுந்தெழும்பும்
சூரியன்...
என கண்முன் விரியும்
இயற்கையை
கொண்டாடாமல்
ஏதோ வாழ்கின்றோம்!

இந்த உலகம்
பரபரப்புக்குள் சிக்கி
இதயங்களை
இளைப்பாற விடுவதில்லை...

மெல்லிய உணர்வுகளின்
மகத்துவமும்
புரிவதில்லை...

என்ன கவிஞரே
அப்படிப் பார்க்கின்றீர்?

என் பேச்சில்
வியக்க எதுவுமில்லை...

விடை தெரியாத
கேள்விகளோடு
மனசு தவிக்கிறது!

அது இருக்க
கவிஞரே...
ஒன்று கேட்கின்றேன்
பதில் சொல்ல
வேண்டும்!

என் உதடு
எழுதும் புன்னகையை
விட அழகாய்
உம்மால் கவி
புனைய முடியுமா?

முடியுமெனத்
தலையசைத்து
நானும்
புன்னகைத்தேன்!

புரிந்தவளாக
கடற்சோகிகள்
பல ஒன்றாய்ச்
சிதறியது போலச்
சிரித்தாள்! 

Tuesday, 6 May 2008

எம் இலக்கு...

fine_atsunset
அனுபவிக்க வேண்டுமடி
அத்தனையும்!

ஆகுதியில் நெய் வார்ப்பது போல்
என் ஆவியில்
அன்பைச் சொரிந்தாய்
என் சோகம் துடைத்தாய்!

வாழும் இவ்வுலகில்
நாளை கூட சொந்தமில்லை
எமக்கு...
போகும் வரை
கூடி வாழ்வது தானே
எம் இலக்கு...!

கூழும் பழஞ்சோறும்
உண்டு மகிழ்ந்தது
ஓர் காலம்

ஆலும் அரசும்
தரு நிழல் தேடி
அதனடி அமர்ந்து
நாளும் மகிழ்ந்ததும்
ஓர் காலம்!

பாழும் போரில்
சாவின் நீளும்
கரத்தை தட்டி
பறந்து வந்து
பாதை மறந்து
ஏதோ வாழ்கின்றோம்
இங்கே...

நீயும் நானும்
திக்குகள் வெடித்துச்
சிதறியதில்
துடித்து விழுந்தவர்கள்!

உன் கரம் தேடி
என் கரம்
நீளும் பொழுதில்
இறுக்கிப் பிடித்தது
நம் வாழ்வின் ஆசை!

வாழ்க்கை வசந்தம் தான்
வீழுகின்றபோதெல்லாம்
தேடி ஒரு கை
கண்ணீர் துடைத்தால்!

Monday, 31 March 2008

அயடீன் அரசாங்கம்!

குறிப்பு : அயடீன் உணவில் தேவையான அளவு சேர்க்காதபோது ஏற்படக்கூடிய விளைவுகளைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்டது.

 

கண்டத்தே நஞ்சை வைத்தான் பித்தன்
நாம் பிறப்பதற்கு வழி வகுத்த சித்தன்

அயடீனால் ஆனதென்ன நஷ்டம்? - எம்
கண்டத்தில் தானே அழகற்ற வீக்கம்?

மூளையிலும் முழுவளர்ச்சி இல்லை - எம்
உடம்பிலும் ஒய்யாரமான நடை இல்லை

அயடீன் அரசாட்சி யாரிலும் உண்டு - அது
என்னை உன்னைப் பார்த்தா வருவதுண்டு?

காரிகையவள் கண்டத்தில் காந்தத் தன்மை இன்றில்லை
காரணம் அவள் அயடீன் உண்டதில்லை!

கத்தி போலுள்ள புத்தியும் காணமல் போகுதே!
கருத்தில் இருத்திக் காரணம் கண்டால்
அயடீன் என விடை வருதே!

நாளமில்லாச் சுரப்பி
தைராய்டு சுரப்பி

கண்டத்தின் முன்னே குரல்வளையின்
இருமருங்கிலும் அரசாட்சி செய்வர்
எம் உயிராட்சித் திலகர்

தைராய்டு நோய்க்கும் தைலம் ஆகிடும்
மருந்து அயடீன் என்றால்
அது பொய்யானது இல்லை!

மந்தபுத்தி உன் மண்டையில் இருந்தால்
கற்றவரும் மற்றவரும் மதியாரே! - உன்னை
ஓர் பொருட்டாய் எடுக்காரே!

சோம்பிச் சோம்பி நீ திரிந்தால் செல்வம்
உன்னைவிட்டுச் சென்றுவிடும்
சொந்தமும் உன்னை வெறுத்து
ஒதுக்கிவிடும்

பெண்ணின் பருவம் மூன்றும்
தஞ்சம் அயடீனில் என்றும்!  

சொல்லுறதை கேட்பதற்கே செவிகளுண்டு - அந்தச்
செவிகளுக்கு கேட்கும் சக்தியில்லையென்றால்
கேலிகளுண்டு!

கயல் விளிகளின்று காணாமல் போனதென்ன?
ஆந்தைக் கண் அக்கா மகளென்று
இவள் பெயர் சூடக் காரமென்ன?

மண் புழு மச்சான் நீ யென்று
பழிக்கின்றார்கள் - உன்
நெஞ்சமதில் எட்டி உதைக்கின்றார்கள்!

அழகு அவலட்சணமாகுது
உயிர்கள் இறந்து போகுது

கர்ப்பப் பையைக் கட்டிக் கொண்டு சிசு
இறந்து கிடக்குது
பொய்கள் பல சொல்லி உண்மையை
மறைக்குது!

ஆக மொத்தம் நித்தம் நூறு நிகழ்ச்சிகள்
அவற்றுக்கு நிவாரணம் என்னதென்று
கேட்கின்றீர் நீங்கள்?

இயற்கையில் கிடைக்குது நிலம்,
நீர் எங்கணுமே
இது ஓர் அருமையற்ற பொருளென்றே
சொல்லணுமே!

அது தான் அயடீன் - இன்று
எமக்குத் தேவையெல்லாம் அயடீன்!

பஜினை பத்து மைக்ரோக்கிராமாய் தினமும்
உணவில் அயடீன் சேர்க்கணும்
பொறுத்திருந்து அதன் பலனைப் பார்க்கணும்!

உலகம் போற்றிடும் அயடீன்
ஒவ்வொருவர் உடலுக்கும் காடீன்!

-------------------------------------

மேலதிக தகவல்களுக்கு :

Thursday, 20 March 2008

சொல்வாய் தேவி...

சிவ சக்தியே
சிவனவன் பாதியே
கடைக் கண்
திறந்தே பாராய்
காதலாகிக் கசிந்துருகும்
பெண்டிர்
கடைசியில்
கரன்சியில் கொழுத்திருப்பவன்
பக்கம் சாயும்
மாயம் என்ன கூறாய்?

அங்கையில் தாங்கி
நின்றாலும்
அன்பினை பண்பினை
வேண்டாது
அளவில் செல்வமும்
அலுங்காமல் குலுங்காமல்
போய்வர
பறக்கும் காரும்
பள பளக்கும்
பங்களாவும்
கேட்பதென்ன
கேலிகள் செய்வதென்ன?

மங்கை மனம்
மங்கைக்கு புரியுமாம்
மடையர்கள்!
சிவன் சங்கை
நெரித்து
விடம் அங்கே
தங்கச் செய்தவளே...
தகவல் சொல்வாய்
புரியவில்லையம்மா
மங்கையர் குணம்
மண்ணில்...!

கண்ணில் நீர்
வர அழுதே
காரியம் செய்வார்
உனக்கேதும்
தெரியுமோ?
என் சித்தம்
தெளியச் சொல்வாய்
தேவி!

-----------------------

28-05-2007

Monday, 10 March 2008

புன்னகை


"வாய்விட்டு ஒருமுறை சிரிப்போம்"
இதிலென்ன கஞ்சத் தனம்?
யார் வீட்டு சங்கதியேனும்
சந்திக்கு வந்தால்
சீர்கெட்டுப் போனதப்பா
அக்குடும்பமென
கொடுப்புக்குள் சிரிப்பதுவும்
வார்த்தையாலே வாள் சண்டை
பிடிப்பதுவும் இருக்கட்டும்...

"ஊர் ரெண்டுபட்டால்
கூத்தாடிக்கு கொண்டாட்டம்" எனும்
பழைய பழ மொழியை
எத்தனை நாள் காவடி தூக்குவாய்?

யோசித்துப் பார்...
கேலிப் பேச்சுக்கு மட்டும்
உதடுகளுக்கு சிரிக்கக்
கற்றுக் கொடுத்தாய்!

சிந்தனை மாற்றடா
சந்தனக் காற்று
மேனி தடுவுகையில்
காற்றின் கைகளை தட்டிவிட்டு
மெதுவாய் புன்னகை
அப்படியே நிலைக் கண்ணாடியில்
நின்றுன் மேனி ரசி
எத்தனை அழகடா
நீ
புன்னகைக்கும் போது என
உனை நீயே ரசி!

கொஞ்ச நாளில் மறப்பாய்
கேலிச் சிரிப்பை
புன்னகைக்க மட்டுமே
உதடுகளுக்கு உத்தரவிடுவாய்!

ஒன்று தெரி்ந்து கொள்
உன் உதடுகள் புன்னகைக்கும்
போதெல்லாம்
நீ அழகாவாய்...
உன்னைப் பார்ப்பவனும்
அழகாவான்...

ஆக
வீட்டுக்கு வரவேற்பறை போல
மனிதனுக்குப்
புன்னகை...

ஆகவே தயங்காது
இன்றே நீயும்
புன்னகை...!

Friday, 7 March 2008

மாலினி நினைவுக் கவிதை

மார்ச் 8 (நாளை) பெண்கள் தினம். இதன் வெளிப்பாடாக  பெண் புலி போராளி மாலினியின் நினைவாக எழுதப்பட்ட கவிதையை பதிகின்றேன்...


 

பாரதி
நீ மீண்டும்
பிறப்பது
சரி!

நீ
சந்தோசப்பட
இங்கே
சில சங்கதி
உண்டு!

அம்மி அரைக்கவும்
அடுப்பு ஊதவும்
பெண்கள்
சபிக்கப்பட்டபோது
உன் கவிதைத்
தேரில் பெண்ணையிருத்தி
நீதி கேட்டவன்
நீ!

"பட்டங்கள்
ஆழ்வதும்
சட்டங்கள்
செய்வதும்
பாரினுள் பெண்கள்
நடத்த வந்தோம்"
என்று மீசை முறுக்கி
பெண் விடுதலை
தீ வளர்த்தவன்
நீ!

திரும்பிப்
பாரிங்கே...
உன் புருவத்தில்
முடிச்சுக்கள்
விழும்

புகை குழலால்
அடுப்பூதியவள்
சுடு குழலால் (துப்பாக்கியால்)
பகைவன்
உயிர் ஊதுகின்றாள்!

முறம் காட்டி
புலி விரட்டிய
பண்டைத் தமிழச்சியின்
வீரத் தொடர்ச்சி
இது!

யாரென்று
வியக்கின்றாயா
பாரதி?

பார்
அது தான்
நம்
புலி வேந்தன்
பிரபா
கட்டியெழுப்பிய
பெண் விடுதலைப்
புலிகள்!

பலே பிரபா!
என்று உற்சாகத்தில்
உன் உதடுகள்
உச்சரிப்பது
புரிகிறது!

இன்னும் என்ன
யோசனை?
மீண்டும்
பிறந்து வா
எங்கள்
ஈழ மண்ணிலே

இந்திய
சுதந்திர வேள்வியில்
பாட்டுக்களை
வேட்டுக்கள்
ஆக்கியவனே...

உன் கைவண்ணத்தை
இங்கேயும் காட்டலாம்
வா...

புலி
அமைதியாக இருப்பது
'எதுவும் செய்ய முடியாமையால்'
என்று
தம் அறியாமைக்
காட்டிச்
சீண்டுகிறது
சிங்களச் சேனை!

'எழுக படை'
என தலைவனிடம்
இருந்து வரட்டும்
யுத்த ஆணை...

பதுங்கிய புலி
பாயும்
எதிரியின் உடல்
எம்மண்;ணிற்கு
எருவாகும்!

நாளை
கருவாகும்
குழந்தை
உருவாகும்
ஈழத்தில்
ஓடி விளையாடும்

பிழையாக எண்ணாதே
சிங்களமே

ஈரோடு பேனெடுக்கும்
எம் பெண்கள்
கைகள் துவக்கும்
எடுக்கும்

உன் சிங்களச்
சேனையைத்
துவட்டியெடுக்கும்

பாரதி
பாரிது தான்
மாலதி

களம் பல
ஆடிய
புலி மங்கை

வீரம்
கொப்பளிக்கின்ற
கங்கை

தன் கையில்
எடுத்தாள்
துவக்கை

மண்ணில்
அள்ளித் தெளித்தாள்
எதிரியின்
இரத்தச் சிவப்பை

இவள்
கழுத்தில்
நஞ்சு கட்டிய
பெண் சிவன்!

இவள்
பெயர் கேட்டால்
எதிரியவன்
அஞ்சுவ(h)ன்

களம் பல ஆடி
மண்ணின்
விடுதலைக்காய்
இன்னுயிர்
தந்தாள்

இதயங்கள்
வென்றாள்

மெய் சிலிர்கிறதா
பாரதி?

'பாஞ்சாலி சபதம்'
போல்
மாலதி பற்றி
கவி செய்யலாம்
நீ மீண்டும்
பிறந்து வா
எம்
ஈழ மண்ணில்

மண்ணிற்கு
வரமுன்
சொர்க்கத்தில்
மாலதியைக் கண்டு
ஒரு சேதி
சொல்வாய்

விரைவில்
பிறக்கின்ற
தமிழீழ விடுதலை
நாளிற்கு
தலைவனிடமிருந்து
அழைப்பு
வருமென்று!

Thursday, 14 February 2008

காதலர் தின வாழ்த்துக்கள்!

home_pic

Tuesday, 12 February 2008

தேவலோகத்தில் காதல் விழா!

j0436221

வானத்தில்
உயர் பிரமுகர்கள்
வாசம் செய்யும்
தெருவொன்றை
தேவதச்சனின் கைவண்ணம்
பளிச்சிடும் மாட மாளிகைகள்
அலங்கரித்தன...!

வீதியில் வெளிச்சம் தர
தொங்கவிடப்பட்ட
நட்சத்திரங்கள் தமக்குள்
ஏதோ கதை பேசிச்
சிரித்தன...

ஒரு மாளிகை மட்டும்
மெல்லிய ஒளியில்
தன் மேனி
பதுக்கியிருந்தது!
நுழைவாயிலில்
கரும்புவில்லோடு இதயம்
பொறித்த கொடியொன்று
காற்றில் பட  படத்தது!

அருகில் நெருங்கிச் சென்றால்
மல்லிகை பன்னீர்
இதர வாசனைத்
திரவியங்களின் கூட்டில்
உருவான வாசனை
நுகர நுகர
இன்பம் தந்தது!

கதவு திறந்து
உள்ளே செல்வோம்
காவல் யாரும்
கண்ணில் படவேயில்லை...

இருட்டை மெல்ல
இளக வைத்த
ஒரு வித ஒளி
உள்ளே...

மெல்லிய பேச்சொலியன்றி
வேறெந்த அரவமும்
காணோம்!

யாரென அறியும் ஆவலில்
கண் களால் எங்கும்
துளாவித் தேடினால்...

உயர்ரகப் பட்டினால்
மூடிய மஞ்சம்
ஆங்காங்கே பூக்களின்
சிதறல்...
மஞ்சத்தின் மேல்
இரு காதல் கிளிகள்!

காதலின் கடவுளும்
கடவுளின் காதலியும்!

மன்மதன் மார்பில்
தலை சாய்த்து
படுத்திருந்தாள்
அழகுக் கிளி ரதி!

அவள் மேவாய்
உயர்த்தி
கண்களில் ஏதோ
தேடினான் மதன்!

துடிக்கின்ற அவள்
இதழில்
ஒத்தடச் சிகிச்சை
செய்தான்...
கண்மூடி தனக்குள்
உருகினாள்
ரதி...

"அத்தான்..."
"ம்..."
"சேதி தெரியுமா...?"
அவள் கூந்தல்
கோதியவண்ணம்,
"என்ன?" என்றான் மதன்
"மண்ணுலகில் காதலுக்கு
விழா எடுக்கிறார்களாம்..."
"சரி அதற்கென்ன...?"
மோகத் தீ அணைக்கின்ற
அவள் பேச்சுப் பிடிக்காமல்
சலித்தான் மதன்...

"கொஞ்சுவதிருக்கட்டும்
அத்தான்... என் பேச்சை
கேட்கக் கூடாதா?"
பொய்க் கோபத்தில்
அவன் இதழ் எச்சில்
துடைத்தாள் அவள்...!
"சரி கேட்கிறேன்"
அக்கறை காட்டினான்
அவன்...

"மண்ணுலகில் மாந்தர்
நாளொன்று ஒதுக்கி
காதலுக்கு விழா
எடுக்கின்றனர்...
தேவ உலகாம்
நம் உலகிலும்
ஏன் எடுக்கக் கூடாது
ஓர் விழா...?"
வினவினாள்
அழகு ரதி...
"தினமும் நாம்
நடாத்தும் காதல்
கூத்து போதாதென்று
விழா வேறா...?"
அவள் காதில்
கிசு கிசுத்தான் மதன்!
கரும்பு முறித்து
அடிக்க ஓங்கினாள்
ரதி - பின்
ஓதினாள் தலையணை
மந்திரம்!

விடிந்தெழுந்து
அவள் இதழமுதம்
அருந்தி
ஓலை பல வரைந்தான்
மதன்...
அதில்...
"மன்மதன் எழுதிக் கொள்வது,
மகேசன் முதல்
மகாவிஷ்ணு வரை
சகலருக்கும் பொதுவான
செய்தி...
இந்திர சபையின்
இருபத்திரெண்டாவது
மண்டபத்தில்
தேவ மங்கையர்
ஊர்வசி, ரதி, மேனகை
ரம்பை போன்றவர்களின்
அழகு நாட்டியத்துடன்
காதலுக்கு விழா ஒன்று
வருகின்ற பதினாங்காம்
நாள் எடுக்கப்படும்!
அனைவரும் வருகை
தந்து சிறப்பிக்கவும்
சிறப்புக் கோரிக்கைகளை
என்னிடம் சமர்ப்பிக்கலாம்
உடன் ஆவன செய்யப்பட்டு
காதலின் தேரில்
வலம் வர
தேவி ரதி சமேதராக
நான் வரம் அருள்வேன்
இப்படிக்கு,
மன்மதன்"

j0436363

Sunday, 10 February 2008

நாளைய பொழுது எமக்காய்...!

j0409304

சொன்னால் தான்
புரியுமா என்
கண்ணே
மனசுக்குள் பல
வண்ணப் பட்டாம்பூச்சி
பறப்பது...

உள்ளுக்குள்
தெரிந்தாலும்
உண்மையிது
புரிந்தாலும் நான்
சொல்லிக் கேட்பதில்
உனக்குப் பரவசம்!

நாடுகள்
எமைப் பிரிக்கும்
எம் உயிர் தாங்கும்
கூடுகள் தான் அதை
மதிக்கும்...
எம் உயிருக்கு
ஏதடி இடைவெளி?
உலவலாம்
எங்கெங்கும்
உலகமிது சமவெளி!

விண்ணில் ஏறுவோம்
விண்மீன் எறிந்து
விளையாடுவோம்
மண்ணில் இறங்கிப்
பாடுவோம்
பூக்களின் மகரந்தப் பொடி
அள்ளித் தூவுவோம்
வண்டுகள் எமை மொய்க்கும்
உன் கண்ணிரண்டு கண்டு
தம்மினமோ என்று
யோசித்து நிற்கும்!

யாசித்து
வருவதில்லையே அன்பு
நமைப் போல்
நேசித்து நின்றால்
ஓடிவரும் முன்பு!

ஆண்டுகள் பல
காதலிப்பதால்
காதல் ஆழமாகுமோ?
நேற்று வந்த நீ
என் உயிர் உருக
வைக்கவில்லையா?
காலம் கடந்தது
இந்தக் காதல் ஆகுமே!

கன்னி நீ
பிரிந்து போனால்
இந்தக் கூடு விட்டு
உயிர் போகுமே!

பாடு கண்ணே
பாடு...
நாளைய பொழுது
எமக்காய் விடியும்
என்றே பாடு...!

-------------------------------------------------

படம் உபயம் : Microsoft Clipart / நன்றி

Friday, 8 February 2008

நம் காதல்

முற்றத்து மல்லிகை
போலுந்தன் புன்னகை
என் மனக் கவலையாற்ற
அது தரும் நம்பிக்கை!

கற்றது கனக்க
ஆனாலும் அதில்
என்ன இருக்கு?
உன்னிரு விழி போடும்
கேள்விக்கு பதில் தேடி
நிற்குமே பணிந்து!

உன்மடி மெத்தை போதும்
உலகமிது மறக்க
தாய் மடிக்கடுத்து
பெண் மடி தேடும்
ஆண் மனம் இருக்கு!

பேசிச் சிரிப்பதுவும்
பின் ஏன் சிரித்தாய் என
கோபத் தீ கிழித்துப்
போடுவதும்...
பாசத்தில் ஊறும்
நம் உள்ளங்களின்
உவப்பான விளையாட்டாகும்!

மாடத்தில் நின்று
மலர்க் கணை
எய்யவில்லை நீ...
பின் தொடர்ந்து கூந்தல்
அழகோடு வேறழகு வர்ணித்து
கூவிப் பிதற்றவில்லை நான்!
ஏதோவொரு கணத்தில்
எல்லைகளற்ற வெளியில்
காதலெனும் ஓர் புள்ளியில்
நிகழ்ந்தது நம் சந்திப்பு!

தொடர்ந்து நடந்த
கதை
ஒருவர் மேல் ஒருவர்
படர்ந்து மகிழ்ந்த
கதை எனப் பல
கதை இருக்கு
நினைத்து மகிழ...!

ஒரு கறுப்பிரவின்
பின்
ஒளி அள்ளித் தரும்
கதிரின் கை!

எம் கவலை
துடைக்க
நீளும் ஒரு கை!

அதுவரை பொறுத்திரு
கண்ணே...
நெய்யப் பல
கனவிருக்கு!

Thursday, 7 February 2008

காதலர் தின சிறப்புக் கவிதைகள்

இனி வரும் நாட்களில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் காதல் கவிதைகள் கவியரங்கத்தை அலங்கரிக்கும். உங்கள் காதல் கவிதைகளையும் இங்கே இணையுங்கள் அல்லது உங்கள் வலைப் பூக்களின் முகவரிகளை பதிவு செய்யுங்கள். ஓரிடத்தில் சங்கமிப்பது காதல் மட்டுமல்ல தமிழை தாய் மொழியாகக் கொண்ட நாமும் தான்...

கீழுள்ள கவிதைகள் மற்றும் வடிவமைப்புக்கு சொந்தக் காரி : சுசி நடா

v_card1

v_card2

v_card3

Monday, 4 February 2008

சுதந்திர தினம்!

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஆண்டு. ஒன்று பெப்ரவரி 4 இல் வரக்கூடிய சுதந்திர தினம்! (அப்படியென்றால்...? என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்?) மற்றையது பெப்ரவரி 14 இல் வரக்கூடிய காதலர் தினம் (அதாவது... அட போடா எங்களுக்கு தெரியாதாக்கும்...) சரி அதை விடுங்கோ... மிகவும் அக்கறையோடு யோசித்து எழுதிய கவிதையை(?) படிக்கலாம் வாங்கோ...

---------------------------------------------------------------------------------

வாலைச் சுருட்டிக்
கொண்டு
அவரவர் வீட்டுக்குள்ளே
பதுங்கி இருங்கள்
இன்று
சுதந்திர தினம்!

சுருட்டு வாங்கப் போகும்
தாத்தாவும் கவனம்!
உன்னையும்
சுருட்டிக் கொண்டு
சென்றிடுவர்!

சட்டப்புத்தகம்
சட்டக் கோவைகளால்
கொழுத்திருந்தாலும்
நடைமுறைப் படுத்துவதில்
இன்னும்
அதே மெலிவு தான்!

சும்மா
உதடுகளால்
உச்சரிக்கப்படுவதெல்லாம்
உயிர்த்தெழும் என்பது
உதவாத கதை!

வெறும்
கோஷங்களையும்
கொள்கை
முழக்கங்களையும்
கக்கத்தில்
வைத்து கொண்டு
களமிறங்கிய
காரசாரமான
அரசியல்வாதிகள்!

மீசை
இருக்கின்றதே என்று
முறுக்குவதைத் தவிர
வேறெதையும்
மிடுக்காக முடிக்கத்
தெரியாதவர்கள்!

சகல பாதுகாப்புடனும்
அரச தலைவர்
கொடியேற்றுவார்!
சுதந்திர தின உரை
படிக்கப்படும்...
வீடுகளில் மக்கள்
தொலைக்காட்சி
முன்னமர்ந்து
வேடிக்கை பார்ப்பர்!

நம்பினால் நம்புங்கள்
இன்று சுதந்திர தினம்!

Thursday, 17 January 2008

கண்டதென்ன...?

என்னடா நீ
நாலுக்கு ஐந்தடி
அறையில்
கொண்டாட்டம்
ஏதுவுமின்றி கொல்கின்றாய்
நிமிடங்களை!

வெளிநாடு வந்துமென்ன
கண்டாய் இங்கே?
ஒருநாடு உனக்கில்லாது
குளிர்நாடு வந்து
குமைகின்றாய் உள்ளே!

காலைச் சூரியன்
பார்த்ததுண்டா?
கடலலை கால் நனைக்க
மகிழ்ந்து சிரித்ததுண்டா?

போடா... போ...
சூரியனுக்கு முன்னெழுந்து
நடுங்கும் குளிரில்
வீதியில் நடைபயின்று
வேலைக்குப் போனால்
நடுநிசியில் வீடு திரும்பி
மீண்டும் மறுநாள்
அதே செக்குமாட்டு
வாழ்க்கை...!

கேட்டால் நாளை
சந்தோசத்திற்கென்பாய்!

உனை கேலியாய்
பார்த்துச் சிரிக்கும்
சமகாலத்தைக் கவனி...

கண்களில் மின்னும்
தங்கையின் கல்யாணக்
கனவு...
கஸ்டத்தில் ஆடும்
குடும்பத்தின் வாழ்க்கைப்
படகு...

எல்லாம் சரி...

உன் முகமூடி
கழட்டி
உண்மை நிலை
உரை
சமாந்திரக் கோடு
கிழி
குடும்பத்தோடு உன்
வாழ்வும் பயணிக்க
வேண்டுமடா...!

வெளிநாட்டில் இருப்பது
கெளரவம் என்று
நம்நாட்டில் நினைப்பு...

யூரோவில்
பவுண்சில் நீ
அனுப்பும் காசில்
இந்திரலோகத்தின்
அதிபதியாய் நீ தெரிவாய்!

யாரேனும் இங்கு வந்து
நாம் படும் துன்பம்
அறிந்ததுண்டா?

உள்ளுக்குள் ஏதோவொரு
சோகச் சிலுவையை
மனசு சுமப்பது
புரியுமா?

வெளிவேஷம் போட்டுன்
வேதனை மறைக்காதே...

வாழ்வென்பது
நீயும் வாழ்ந்து
மற்றவரையும்
வாழவைப்பது...!

கலங்காதே கண்ணே...

எங்கிருந்தோ எனை
ஆழ்கின்ற
என்னவளே...

முன்னொருபோதும்
இத்தனை சந்தோசம்
அடைந்தவனில்லை நான்!

பின்பு ஒருநாள்
தேவதை நீ வருவாய் எனும்
அசரீரி ஏதும்
கேட்டதில்லை...

ஆனாலும்
உன் தரிசனம்
கிடைத்தது...
காதலெனும்
புதுசுகம் மலர்ந்தது!

நீ இல்லாத போது
வலிக்கின்ற நெஞ்சம்
அருகில் வந்தபின்
கவனிப்பதே இல்லை

பிரிவின் போது தான்
உள்ளிருக்கும்
காதல் விழித்துக்
கொள்கிறது!

கண்ணே கலங்காதே...
நகருகின்ற நாட்களில்
எம் வாழ்வு எங்கே என்று
தேடாதே...

நாட்களின் வரையறைக்குள்
இல்லையடி நம் வாழ்வு!

பூக்களைப் பார்
மாலையில் மரணம்
என்றாலும்
காலையில் இதழ்விரித்துச்
சிரிக்கின்ற பக்குவம் அதற்கு...
அதனால் தானடி
மீ்ண்டும் மறுநாள் காலை
மறுபடியும் உயிர்த்தெழும்!
கவனி...
பூக்களுக்கு மரணமில்லை!

ஆகவே,
நாட்களை எண்ணி
கைவிரல் சோராதே!

மறுநிமிட சந்தோசத்திற்காய்
இந்த நிமிடம் கொல்லாதே!

கண்ணே...
நெஞ்சில் இருத்தி
நினைக்க
கற்கண்டு நினைவுகள்
நிறைய உண்டு!

யன்னல் திற
இதமான காற்றுன்
இதயம் தடவட்டும்
ஏனெனில்
அந்தக் காற்றைத் தான்
நானும் சுவாசிக்க வேண்டும்!

Sunday, 13 January 2008

தைப் பொங்கல் வாழ்த்துக்கள்....-----
வடிவமைப்பு : சுசி நடா

Thursday, 10 January 2008

பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!

1997 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பொங்கல் கவியரங்கில் பாடப்பட்ட கவிதை இது. பொருத்தப்பாடு கருதி இப்போது பதிகின்றேன்.

 

புது வருஷம் ஒன்று புஷ்பமாகுது - அதில்
ஒரு நிமிஷம் கூட அர்த்தமாகுது
ஆண்டு பல கண்டோம் - அதில்
என்ன சுகம் கொண்டோம்
வேண்டும் வரம் வேண்டி நின்றோம்
'97 இன் உதயத்தையே
தொழுது நின்றோம்

தையே நீ
கிழிந்த மனங்களை தையேன்
வெய்யோன் கண்டு அஞ்சாதே
அவனுன்னை வையான்
பையவே வருவாய்
நல்லதே தருவாய்
மின்னலே உன்னைத் தொழுதேன்
என்னுள்ளே புகுவாய்
கோடிப் பிரகாசம் கூட்டுவாய்

'தை' என்ற தையலுக்கு
தாலி கட்டவென்றே
'வெய்' என்ன வெய்யோனும்
வேளை பார்த்து நின்றான்
மை பூசும் தையலவள்
சுடர் வீசும் சுந்தர புருஷனுடன்
ஜோடி சேர்ந்து நின்றாள்
'பொங்கல்' என்னும்
இன்பவிழா தந்தாள்

புதுநெல் அரிந்தெடுத்துப்
பக்குவமாய் குற்றிப் புடைத்து
குறுநெல் நீக்கி
புதுப் பானை தனை அடுப்பேற்றி
பால் பொங்க...
அது கண்டு...
மனம் துள்ள...

பெண்டுடன் வண்டுறங்கும்
புதுமலரில் பட்டுச் சிரிக்கும்
சுடர் கதிரை உண்டி
உண்ண, அண்டி வருகவென்று
அருகழைத்து
மண்டி நிற்கும் மகிழ்ச்சி தன்னைக்
கொட்டி பொங்கல் உண்ணச்
செய்யும் உழவரைக்
கண்டு மகிழும் கதிரும்
அவன் அருளால் மறையும்
அவர்தம் வாழ்க்கைத் துயரும்!

பொங்கும் நாளில் எங்கும்
தங்கும் இன்பம்
சுடரும் ஒளியில் சுட்டுப்
பொசுங்கும் துன்பம்
மலரும் மலரில்
தெரியும் எங்கள் வாழ்க்கை
அலறும் தீமை
ஓடி மறையும் சேய்மை
"ஆகா..." இதுவென்ன
புதுமை என்று மனம் பாடும்
கவிதை
உலகமெல்லாம் தொழுது
நிற்கும் அந்தச்
சுந்தரக் கதிரை!

ஆண்டாண்டாய் எதிர்பார்த்த
அத்தனையும்
புத்தாண்டாய்ப் பூத்திட்ட
'97 இன் வசந்தத்தில்
சுகந்தமாய் சுடர்கவென்று
தொழுது நிற்போம்
அந்தச் சுடர் ஒளியை

தையென்ற தையலின்
உயிர் போன்ற கதிரே
நீ தானே எம்மவர்க்கு
கதியே என இறைஞ்சி
நிற்போம் இன்னருள்ச் சுடரை!

சூழும் யுத்தத்தில் சாகும்
உயிரை
வாழும் உயிரென வரம்
அருள்வாய் என
வேண்டி நிற்போம்
அந்த திங்களவனின்
பள்ளித் தோழனை!

செயற்கையின் கடைக்கண்
பார்வையில் இழந்தோம்
எங்கள் மனப் போர்வையை
இயற்கையாய் வீசும் சுடரொளியே
செயற்கையாய் பூசும்
ஒவ்வொன்றையும்
குப்பையாய் கொழுத்து
எம்மை சந்தோச
வெள்ளத்தில் அழுத்து!

பகட்டாய் வெளியில்
பல தெரியும்
உள்ளத்தில் உருளுகின்ற
சோகப் புயல் யாருக்குப்
புரியும்?

நாளை துவக்கோடு தான்
பிள்ளை பிறக்கும்
அது கண்டு ஒவ்வொருவர்
மனமும் அதிர்ச்சியால்
பிளக்கும்...!

யுத்த காளான்கள்
உலகில் முளைக்கின்றபோது
வாழ்க்கை எப்படிச்
சிறக்கும்?

இன்னும்
சொற்ப காலத்தில்
மனித வாழ்க்கையே
கசக்கும்

கண்டு விட்ட கவலையை
எந்த மனித மனம் மறக்கும்?
கதிரே இனி உன்னையல்லோ
தினம் தினம் துதிக்கும்!

முக்கனியாய் மூன்று
தமிழ் ஓங்கும்
சர்க்கரையாய் சந்தோசம்
உள்ளங்களில் தேங்கும்

இளங்கரும்பாய் இன்னல் கூட
மறைவிடத்தில் தங்கும்
இன்பப் பாட்டினையே
உயிர் பாடும் எங்கும்!

இத்தனையும் வாய்க்கவே
பொங்கல் பானை பொங்கும்

பால் பொங்கும் வேகத்தில்
இன்னல்கள் அழிந்து போகும்
கோலங்கள் கண்களில்
மின்னிடட்டும்

இளவேனில் வண்டியேறி
இளசுகள் காதல் பாட்டு
பாடிடட்டும்

நின்று பல ஆண்டு
ஆண்டு விட்ட சோகம்
மண்ணோடு மண்ணாய்
மரித்து விடட்டும்

கண்ணோடு கண் கவ்வி
உயிரோடு உயிர் கலந்து
ஜோடியோடு கூடி
வாழும் யோகமான வாழ்க்கையொன்று
வேகமாக மண்ணினில்
நிலைத்திடட்டும்

உலக உயிரனைத்தும்
ஊற்றெடுக்கும் அன்பருவியில்
மூழ்கி மூழ்கி
இன்பம்
மாந்தி மாந்தி
எங்கும் நிலவிடட்டும்
சாந்தி சாந்தி!

பொங்குகின்ற பொங்கலிலே
மனித நேயம் மலிந்து கிடக்கட்டும்
எங்கள் மனங்களிலே

சங்கெடுத்து எங்கும்
முழங்கு...
'சண்டை' என்ற ஒன்றை
உயிரினி அறியாதென
இயம்பு!

சமாதானமாய் வாழவே
தீர்வுப் பொதி ஒன்று
தீட்டி விட்டோம் - அதில்
திட்டமாய் மூன்று
தீர்வினையே குறித்து விட்டோம்
ஒன்று அன்பு
இரண்டு அன்பு
மூன்று அன்பு...!

எங்கும் அன்பு
அன்பே வடிவம் சிவம்
இனி அகிலமே அன்பின்
வடிவம்...!
உயிரே அதில் தெய்வம்
ஒவ்வொன்றை ஒவ்வொன்றும்
வணங்கும்
சந்தோச வாழ்க்கையே
அதிலிருந்து தொடங்கும்!

பொங்கலோ... பொங்கல்...
என ஒவ்வொருவர்
வாயும் உச்சரிக்கும்
அத்தனை இன்ப சாகரத்தில்
மூழ்குவதால் எந்தன்
மூச்சடைக்கும்!

நிலவும் நிலவும் உலவும்
உலகமொன்று புதிதாய்க்
கருத்தரிக்கும் - அதில்
புத்தொளி கூடி
ஒவ்வொருவர் உயிரையும்
ஆசீர்வதிக்கும்!

போருக்கு ஒரு கல்லறை
ஒவ்வொருவர் மனவறையிலும்
கட்டப்படும்
ஆகவே,
செத்துவிட்ட போர்தன்னை
உயிர் என்றென்றும்
நினைக்காது சுகம்
கொண்டு சுகித்திருக்கும்!

பொங்குக பொங்கல் - அதில்
ஓங்குக இன்பம்
வளமான வாழ்வொன்று
விரைவாக நீவீர் காண
உளமார்ந்த பொங்கல்
வாழ்த்துக்கள்
எங்கும் தை... த... தை...
தாளங்கள்
சென்று வருகிறேன்
அன்பாய் விடை
கூறுங்கள்...

 

தை, 1997

------------------------------------------------------------------------

என்னை ஒவ்வொரு கவியரங்கிலும் அழைத்து உற்சாகப்படுத்தி கவிதை பாடச் செய்த செல்வி சிறிகுமாரி அவர்களுக்கு என்றென்றும் என் நன்றிகள்... _/\_

Tuesday, 1 January 2008

கவிதைகள் - அட்டவணை

…புதுப்பிக்கப்பட்ட திகதி  : 28 ஆனி 2014

 1. பிரிய சிநேகிதி...!
 2. பாவம் காற்று...!
 3. சிவன் வந்தான்
 4. நான் அரசியல்வாதி!
 5. சாவுக்கு ஒரு தூது!
 6. நவ நங்கை!
 7. மலர் வனம் வாடியதேன்?
 8. எனக்கு தூக்கு மேடை... உனக்கு நாடக மேடை...!
 9. காணவில்லை!
 10. யன்னல் நிலா
 11. முகங்கள்
 12. சீர்திருத்தங்கள்!
 13. அழகிய இளவரசி
 14. இவள் எப்படி?
 15. அத்தை மகள்
 16. சோகம்
 17. நெஞ்சு பொறுக்குதில்லையே....
 18. சகோதரிக்கு...
 19. வாராய் சித்திரையே...
 20. சமா(ர்)தானம்!
 21. இன்ப வதை...
 22. காதலர் தினத்தில் எழுதிய கவிதை...
 23. ஈழக் கனவு
 24. கனவுப் பெண்
 25. இறைவனுக்கு எச்சரிக்கை
 26. என் தேவி
 27. கண்மணிக்குள் சிக்கிய பெண்புறா
 28. பொய்யில் நிஜங்கள்
 29. சிறை
 30. வாழ்ந்தென்ன லாபம்?
 31. இறந்தது போதும்!
 32. தம்பிக்கு...
 33. நினைவுக் கவிதை [19-07-2007 மூன்றாம் ஆண்டு நினைவு]
 34. பலியாடுகள்!
 35. கற்கண்டு இதழ் சுவைப்பது எப்போது?
 36. பகையோடும் வேளை!
 37. காதல் பிரிவு - சில கீற்றுக்கள்
 38. சுடும் நினைவு
 39. ஏய் பகையே... அடாது செய்தாய்!
 40. தீப ஒளி வாழ்த்துகள்...
 41. இவன் ஒரு சிவன்!
 42. மனசு எனும் மந்திரக்கிண்ணம்!
 43. 2008 இல்...
 44. என் தேசம்
 45. வருக புத்தாண்டே...
 46. பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!
 47. கலங்காதே கண்ணே...
 48. கண்டதென்ன...?
 49. சுதந்திர தினம்!
 50. காதலர் தின சிறப்புக் கவிதைகள்
 51. நம் காதல்
 52. நாளைய பொழுது எமக்காய்...!
 53. தேவலோகத்தில் காதல் விழா!
 54. மாலினி நினைவுக் கவிதை
 55. புன்னகை
 56. சொல்வாய் தேவி...
 57. அயடீன் அரசாங்கம்!
 58. எம் இலக்கு...
 59. மங்கை இவள் பேசினால்(ள்)...
 60. நதியோடு...
 61. உருகும் உயிர்...
 62. புத்தன் போய் விட்டான்!
 63. வெங்காயம்...
 64. ஈழப் பரிசு!
 65. பூக்கள்
 66. கண்ணா...
 67. கோழி எடுத்த பாடம்
 68. தலைவா வாழீ நீ!
 69. ஊரின் நினைவலைகள்...
 70. புள்ளிகள் இடுவோம்...
 71. பட்சி சொன்ன க(வி)தை!
 72. எழுந்து வாருங்கள்...!
 73. யாழ் களக் கிறுக்கல்கள்...
 74. அதிகார நாடுகளே அசையுங்கள்…
 75. கடவுள் எழுதிய கவிதை!
 76. கசங்கிய காகிதங்களோடு…!
 77. நடந்த கதை!–ஒலி வடிவுடன்…
 78. கோலம் தரும் பாடம்!
 79. எல்லாம் நீ..!
 80. சூரியனுக்கு ஏது சாவு?
 81. மழை
 82. காதல் காயம்!
 83. காலத்தின் பிறந்த நாள் (2012)!
 84. வேலை முடிந்து வீடு திரும்புகையில்...
 85. காதல் விருந்து!
 86. குழந்தை பிறந்த போது…
 87. காத்திருப்பு…!
 88. கசக்கி எறிந்த ஓவியம்!
 89. காத்திருப்பு…! (வேறு)
 90. விட்டகலா நினைவுகள்!
 91. போதையில் நதி!
 92. சந்தோசம்!
 93. அவள் உலகம்!
 94. மழலையாகிறேன்…!
 95. முத்த அறுவடை!
 96. பழுத்த இலைகள்!
 97. எரியட்டும் பெரு நெருப்பு!
 98. கார்த்திகை இருபத்தேழு!
 99. கந்தக விரல்
 100. இன்றைய பொங்கல்!
 101. அணையா(த்) தீ!
 102. பிள்ளைத் தமிழ்!
 103. என்னத்தை சொல்ல...?

Related Posts Plugin for WordPress, Blogger...
பின்னூட்டல்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்