Kaviyarankam Baner

Monday, 31 December 2007

வருக புத்தாண்டே...

நடந்து சென்ற 2007
நன்மை பயக்கவில்லை
நாடி வந்த 2008 ஏ
நன்மை பல கொண்டு வா!

அழுகையும் அவலமும்
அனுதினம் கேட்ட செவிகளுக்கு
சிரிப்பும் மகிழ்ச்சியும் தினம் தினம்
கொண்டு வா...

நடந்த போர்களில் போன உயிர்கள்
உடைந்த மனங்களுடன் ஓடிய மக்கள்
கிடைத்ததை உண்டு
ஏப்பம் விட்ட பரிதாபங்கள்
அனைத்தும் அலையில்
அகப்பட்ட துரும்பாய்
ஓடி மறைந்திட ஓர் புது வழி
சமைத்து வா!

தாய் ஓர் இடம்
தனயன் ஓர் இடம்
வாழ்ந்திடல் தகுமா?

ஊர் ஓர் இடம்
உற்றார் உறவினர்
ஓர் இடம் - நான்
மட்டும் இங்கு வாழ்தல்
முறையோ?

பெற்றமும் கன்றும்
பிரிந்து வாழ்ந்தால்
பாசமும் அன்பும் தான்
விளைவதெங்கே?

சொல் வீரராய் இருப்பார்
செயல் வீரராய் ஆவதெப்போ?
உள் மனதில் உறங்கிய
கனவுகள் உயிர் பெற்று
வாழ்வது தப்போ?
கல் மனத்தார், கொலைக்கஞ்சார்
கணப்பொழுதும் வாழ்தல் ஏற்போ?
சொந்த ஊரில் சொற்பமும்
சுகமாய் வாழமுடியாத
வாழ்க்கை சத்தோ?
சிறுமையும் பெருமையும்
இடம் ஒவ்வா இடத்தில்
உரைத்திடல் தகுமோ?

சென்ற ஆண்டு சேர்த்து வைத்த
சோகங்கள்
வந்த ஆண்டு நீ தீர்த்து
வைத்தல் வேண்டும்
வருங்காலத்தில் ஓர் வலது காலாய்
நீ தடம் பதித்தல் வேண்டும்
பின்னும் நீ சமாதான வீணைகளை
மனங்கள் தோறும் மீட்டி
வைத்தல் வேண்டும்!

கன்னியரைக் கண்ணடித்து
காதலித்து கரம்பிடித்து
இன்ப வாழ்விடை
இன்பங் காணல் வேண்டும்!

'சொந்தச் சகோதரர்' நாம் என்று
சொர்க்கத்திற்கு இணையாய் ஓர்
உலகு மண்ணில் நாம் சமைக்க
வழி செய்ய வேண்டும்

இன்னும் நீ என்னென்ன எமக்கு
நன்மை பயக்குமோ
அத்தனையும்
சமைத்திடல் வேண்டும்!

Sunday, 30 December 2007

புதுவருட வாழ்த்துக்கள்... ;-)

உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழுள்ள நிரலை பிரதிசெய்யுங்கள்...
   

Monday, 24 December 2007

என் தேசம்

குருதி ஓடையும்
பிண வாடையும்
என் தேசத்து
தெருக்களில்...

உயிர் சுமந்து
இருப்பதில் சில
சுமந்து
இடையில் குழந்தை
சுமந்து
நடையில் என் தேசத்து
எல்லை கடக்கின்றனர்
மக்கள்!

என் மண்ணின்
உயிர்
ஆயிரமாயிரம்
'பூட்ஸ்' கால்களின்
காலடியில் நசுங்குண்டு
சுதந்திர தாகத்தோடு
காத்திருக்கிறது!

பலிகள் பல கொடுத்து
நரிகளின் ஊளை கேட்டு
பரிகளாகி மேனி விடைத்து
அரிகளின் தேகத்தை
'ரவை' களால் கிழித்து
கரிகாலன் கண்ணசைவில்
பாய்கின்றனர் புலிகள்!

இருந்தும்
அரசு கட்டில்
அமர்ந்திருக்கும்
ஆந்தைகள் அலறும்
ஒலி கேட்டு
காது பொத்தி
'அடைத்த செவியினர்'
ஆக வெளிநாடுகள்!

படை மட்டும்
நடாத்தி
கிடைப்பதல்ல வெற்றி!
சடை நிறைய
ஈரோடு பேன்
ஓடும்
அரசியல் அரங்கமேறி
உரை செய்தெம்
ஞாயம் சரியென
செவிகள் தோறும் சொல்லி
மரை கழண்ட
எம் நாட்டு
அரசியல் வாதிகளின்
செவிகள் திருகி
ஞானம் தருவதே
வெற்றி!

நான் ஒரு
கோழையாய்
சில சேதிகள்
சொன்னேன்!

ஆனாலும்
மறுபடியும்
மனசுக்குள் கனவொன்று
விரியும்...

அது
என் கடவுச் சீட்டில்
என் நாடு
'தமிழீழம்'
என்றிருப்பது!

 

--------------------

புரட்டாதி 2007

Tuesday, 18 December 2007

2008 இல்...

    

காலக் கலண்டரில்
ஒருநாள் கிழிக்கப்பட
ஓராண்டு
ஓடிப் போனது!

வெளிநாட்டிலிருந்து
வரும் அப்பாவை
எதிர்பார்க்கும்
குழந்தை போல
நானும்
புதுவருட
எதிர்பார்புடன்...

வழக்கப் போல
"இந்த வருஷத்திலாவது
செய்யவேண்டியவை"
என ஒரு பட்டியல்
ரெடி...

கண்மடலில்
காதல் எழுதி
வருவாள் ஒரு வஞ்சி...

நேர்த்திக்கடன்
செய்தவைபோல
மொட்டத்தலையோடு
முணுமுணுக்கும்
என்னூர் மரங்கள்
துளிர்க்கும்...

இரத்தத்தில் உடல்
நனைந்து...
வெட்க்கத்தில்
முகம் மறைத்து...
ஏக்கத்தில் வாடும்
வெண்புறா...
சிறகு கழுவி
உலர்த்தும்...

புண்பட்ட
ஈழ மண்ணின்
காயங்கள் ஆறும்!

"Gun" இல்
பூக்காது
சமாதானம்
"கண்"கள்
திறக்கட்டும்
இனியாதல்...

உதட்டில் ரெடிமேட்
புன்னகை
வழக்கமான ஹலோ...
என்ன இது
நாமும் இயந்திரமாய்
ஆகிப் போனோமா?

வாருங்கள்
தோழர்களே...
போலிகளை
களைவோம்...

சபதம் செய்வோம்
சத்துள்ள
உலகம் செய்ய...!

Wednesday, 5 December 2007

மனசு எனும் மந்திரக்கிண்ணம்!

ஒலி வடிவம் :
நெஞ்சில்
ஓர் மூலையில்
ஏதோவொரு சோகம்
எனை அணைக்கும்

உடம்பு
சோர்வின்
கைப் பிள்ளையாகும்!

மனசு
விரக்தியின் விளிம்பில்
தற்கொலை செய்யும்

எதிர்காலம் கண்முன்
விஷ்வரூபமெடுக்கும்

தனிமையில் தத்தளித்து
தாய் மடி
தேடும் மனம்

பொல்லாத கற்பனைகளால்
இதயம் வெடிக்கும்

தலை கோதி
நெஞ்சில் முகம்
சேர்த்து
அணைக்க
ஓருயிர் வாராதா
என விழிகள் தேடும்!

"எனக்கு மட்டும்
ஏன் இப்படி"
கண்முன் தெரியா
கடவுளிடம்
விசாரணை நடக்கும்

கால் போனால்
ஊன்றுகோல்

மனசு உடைந்தால்
என்ன உதவும் ?

"நம்பிக்கை" என்ற
பழகிப்போன பதிலில்
சமாதானம் ஆகாமல்
போலியாய் சிரிக்கும்
உதடுகள்...

விநாடிகளை விழுங்கி
காலம்
கன கதியில் பறக்கும்!

சூரிய தேவன்
இரதமேறி
ஒளிக்கைகளால்
பூமிப்பெண்ணை
தொடுவான்

மனசு இலேசாகிப்
பஞ்சாகப் பறக்கும்!

'ம்..."
புரியவில்லை தான்
எனக்கும்!

Related Posts Plugin for WordPress, Blogger...
பின்னூட்டல்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்