Kaviyarankam Baner

Wednesday, 27 June 2007

பயணம்...

பயணத்தோடு என்
துக்கமும்
காலாவதியாகிப்
போனது...

'ம்...' பயணம்
நல்லது
பல முகங்களைப்
படிக்கின்ற
வாய்ப்பைத்
தருவதால்...

வேலையில்
களைத்துப் போன
மனசுக்கு
குஞ்சம் கட்டி
அழகு பார்க்க
பயணம் நல்லது

சிலருக்கு வாழ்க்கைத்
துணை கூட
கிடைக்கலாம்!


பயணம் செய்வீர்
இடங்களை மட்டும்
கடக்காமல்
மனங்களைக்
கடந்தும்!

பயணங்கள்
உங்கள் கால்
தடத்தை
பதியாவிட்டாலும்
நினைவுத்
தடத்தை
அழுத்தமாகப்
பதிவு
செய்யும்
ஆகவே
பயணம்
செய்வீர் !!!

Sunday, 17 June 2007

தம்பிக்கு...

நாளை நாளை என்றொரு நாளை
எண்ணி மனம் வெம்பிப்
போகாதே தம்பி - அந்த
நாலுந் தெரிந்தவன் நடத்தும்
நாடகத்தில் குறை சொல்லி
மாளாதே தம்பி

விதை விதைப்பதும்
அது முளைப்பதும்
உந்தன் கையிலா தம்பி?
எல்லாம் இயற்கையின்
கையினை நம்பி!

கவலைகள் கிடக்கட்டும்
காரியம் நடத்திவிடு

மலைகள் எதிர்க்கட்டும்
துணிவாய் இருந்துவிடு

பிறந்தது இன்று
வாழ்வது இன்று
சாவதும் இன்றே என்று
எண்ணி விடு

துன்பங்கள் ஓடும்
இன்பங்கள் கூடும்
உல்லாசம் உன் மார்பைத்
தொட்டுத் தொட்டுத் தாலாட்டும்
கொண்டாட்டம் நாமெல்லாம்
இன்று பூத்த மலர்க்கூட்டம்

நமக்கு ஏது கவலை - ஊதடா
உல்லாசப் பண்பாடும் குழலை
நாமெல்லாம் இன்று பிறந்த மழலை 
நமக்குள் இனி இருக்காதே கவலை!  

Wednesday, 13 June 2007

சிறை

சிறை
விரும்பியோ
விரும்பாமலோ
எம்மவர்க்கு
பரிச்சியமான
ஒன்று...


சுதந்திரத்திற்காக
சிறை செல்பவர்கள்
அல்ல
பலரும்


சும்மா
இருந்து
சுருட்டுப் பிடித்த
அப்பு பாவம்...


சிறு சில்லு
சுற்றி விளையாடிய
சிறுவனும்
அங்கே...


காரணம்
புலிகளுக்கு
வாகன ஓட்டியாம்...


தனியாய்
இருக்க
பயமென்று
அவனும்
பிடித்தானோ?

என்ன தான்
என்றாலும்
எம்மைப்
பொறுத்தவரை
சிறை சென்று
வருவது
ஒரு கெளரவம்!

வெளிநாட்டில்
தஞ்சம் கோரவும்
வசதி...
ஆனாலும்
மனசுக்குள்
தத்துவார்த்த
விசாரணை ஒன்று...


கிறில் வைத்த
கம்பியால்
ஏன்
சிறைக் கதவுகள்?

அப்பாவிகள்
உள்ளிருந்து
பொலிஸ் காரர்
தான் சிறையில்
என்று
ஆறுதல் கொள்ளவா?

ஆட்சியாளர்கள்
கவனிக்க

பூட்டிய சிறைக்குள்
பிறந்த குழந்தையால்
தான்
கம்ச வதம்!

புரியுமோ
உமக்கு?

புரிந்துவிட்டால்
தனி ஈழம்
எமக்கு!!!

Monday, 11 June 2007

வாழ்ந்தென்ன லாபம்?

வாழ்ந்தென்ன லாபம்
என்றெனக்குத் தெரியாது
தெரிந்ததெல்லாம்
நான் உரைப்பேன்
காது கொடுத்துக்
கேட்பாய்...


பூத்திருக்கும்
என் மனசில்
பூவொன்று வந்திருந்து
காது மடல்
வருடி
கன்னத்தில் கனி
முத்தம் கொடுத்து
தேகம் தொட்டணைத்தால்
கோடி இன்பம்
என்பேன்
வாழ்வதால்
வந்தவின்பம்
இதுவென்பேன்


தாலி கட்டி
என் சொந்தம்
என ஆன பின்
சில்லறைச்
சண்டைகளும்
சிணுங்கல்
பேச்சுக்களும்
கொத்தாக என்
முடி கோதும்
அவள் விரல்
தரும் இன்பமும்
வற்றாத வாஞ்சையோடு
வடிவழகி
எனக்குக் கொஞ்சம்
ஊட்டி
மிச்சம்
தானுண்ண
உருகிப் போகுமே
என்னுள்ளம்
இதற்கேது ஈடு?


திங்கள்
பத்தாக
திங்களே
என்னவள்
வயிற்றில்
வந்துதிக்க
சிறு நிலவை
பெரு நிலவு
ஈன்றெடுக்க
வண்டாகி
சுற்றியலைந்த நான்
தண்டாகி
சிறு நிலவை
என் கையோடணைக்க
குளிர் புன்னகை
செய்யுமே
என் முத்தாகி வந்த
சிறு பிஞ்சு
எத்துணை யின்பம்
இது...


சொல்லிக் கொண்டு
போக
இது போல்
பல கதை
விரியும்
என்னுள்ளத்தில்
காத்திருந்து
நீ கேட்பாயா?

Thursday, 7 June 2007

இறந்தது போதும்!

காதலி
வார்த்தைகளுக்கு
வாள் வீசக்
கற்றுக் கொடுத்தாய்!


என்
இதயச் சுவரில்
எத்தனை
கீறல்கள்...


கீறல்கள்
மேல்
இதழ் தேடல்கள்
நடத்து...
என்
வாலிப வானம்
விடியட்டும்!


குரலில்
எதைக்
குழைத்தாய்...?
என் இதய
நாளங்களில்
குளுக்கோஸ்
ஏறுகிறதே...!


விழிகளில்
சொருகிய
வேல்களைக் கழற்று
எத்தனை தடவை
நான்
இறப்பது?

Related Posts Plugin for WordPress, Blogger...
பின்னூட்டல்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்