Kaviyarankam Baner

Thursday, 31 May 2007

காதலர் தினத்தில் எழுதிய கவிதை...

பெண்ணென்று பிறந்து
கண் முன்னே
அங்கம் அங்காங்கே
காட்டி நடந்து
கொல்லாமல் கொல்கின்றார்
அம்மா
கொழும்பில்
எம் குலத் தமிழ்க்
கிளிகள்!


பிரான்ஸ்,
ஜேர்மன்,
சுவிஸ் என்று
பறந்து


கொட்டும்
பனியில் கொட்டாவி
விடக்கூட மறந்து
அண்ணனுடன்
அப்பா சேர்த்து
அனுப்பும் பணம்


கையில்லாச் சட்டை
வாங்கவும்
அங்கம் கொப்பளிக்கும்
ஆடை வாங்கவும்
உதட்டுக்குச்
சாயம் அடிக்கவும்
இன்னும் பலப்... பல...
செய்யவும்
வீணாகக்
கரைகின்றது.


இந்த 'மேக்கப்' பின்
பின்னால் உள்ள
உண்மை
உருவம் அறியாது


நீண்ட
'கியூ' வில் நிற்கின்றாரம்மா
பாவம் எம்
இளைஞர்!
சில நாள்
பின்தொடர
'சீ பாவம்' என
அவளும் புன்னகைக்க
பரிதாபத்தில்
தொடங்கியது
காதல்


பிறகென்ன
கையோடு கை
சேர்ந்து நடக்குமளவு
நெருக்கம் வந்தது.


பஸ்சில் ஏறினால்
அருகருகே
உரசி இருத்தல்
கிசு கிசுப்பாய்
காதல் வசனம்
இன்னும் சில
சொல்ல முடியாத
சங்கதிகள்


பாவம்
பக்கத்தில்
இருப்பவர்
கூச்சத்தில் நெளிவார்.


காதலுக்கு
கண்ணில்லை என்பது
சரிதான்!


கோல்பேஸ்
வந்ததும்
கையில் குடை
விரியும்
ஒதுக்குப் புறமாய்
அமர்ந்து
கொள்வார்கள்
என்ன செய்வார்களோ
யாம் அறியோம்!


அது
மட்டுமா?


திரையரங்கில்
நுழைந்து பாருங்கள்
வரிசையாய்
இளஞ்ஜோடிகள்!


மனம் படமா
பார்க்கும்?


எது காதல்
என்றறியாது
ஏதேதோ
செய்கின்றார்
ஐயகோ
மோகத்தில்
அவிகின்றார்.


கண்டதும்
கை அணைப்பது தான்
காதலா?


வாய் நிறைய
பொய் உரைப்பது தான்
காதலா?


கை நிறைய
காசு கேட்பது தான்
காதலா?


கட்டி அணைத்து
முத்தம் தருவது தான்
காதலா?


கறுப்பென்றும்
வெள்ளையென்றும்
நிறம் பார்த்து
வருவது தான்
காதலா?


எது காதல்?
இன்று நாம்
செய்வதெல்லாம்
உண்மைக்
காதலா?


சத்தியமாய் இல்லை
இன்றைய காதல்
காமத்தின்
கருக்கட்டல்!


பின்
எது தான்
காதல்?


அன்பெனும் கயிறு
திரித்து?
இரு இதயம் கட்டி
இணைத்து?
வெண்பனி போல
மெல்ல நெஞ்சம்
உருகி,
கடலென பரந்து
வருவதே காதல்!

Sunday, 27 May 2007

ஈழக் கனவு

கொடும் தீ வந்தெம்மைத்

தீண்டும்

சுடும் போதெல்லாம் உண்மை

தூங்கும்

வெறும் வார்த்தை ஜாலத்தில்

அறிக்கை பறக்கும்!

உலகும் இவர் பேடித்தனம்

கண்டு மெல்லச் சிரிக்கும்!

 

அழும் குழந்தையின்

கண்ணீர் கண்டும்

விழும் தலைகளின்

வணங்காமை கண்டும்

வெ(ல்)லும் எம் பகை

என்றெம் வீரர்

குரல் கேட்டும்

உதடு சுளிப்பார்

உண்மை மறப்பார்

 

கடும் கோபம் கிளறிவிட்டார்

எம் குலப் பெண்மை பறிக்க வந்தார்

போலிச் சமரசம் செய்து நின்றார்

பொல்லாத போர்தன்னை

வேர் ஊண்டித் தளைக்கச்

செய்தார்

 

சாயம் மாறும் ஒரு நாள்

ஞானம் வரும் பின்னாள்(ல்)

ஈழம் வரும் பொன்னாள்

காயம் மாறும் அந்நாள்

எம் கனவு பலிக்கும் திருநாள்

Wednesday, 23 May 2007

கனவுப் பெண்

உள்ளம் பயந்து ஊமையாகுது

கள்ளப் பெண்ணவளிடம் காதல் கொள்ளுது

 

கொடி முல்லையென ஆடி வருவாள்

குயிலின் நாதமெனக் கூவி வருவாள்

 

செம்பருத்தி அவளென்னை

ஊடல் செருமுனைக்கு* அழைப்பாள்

பின்னே ஓடி வந்து என்னைக்

கட்டி அணைப்பாள்

 

நீள் முடி கோதி

நிம்மதி நாடி

புன்னகை செய்வாள்

பின்னே பெருநகை செய்து

என்னை ஏளனம் செய்வாள்

 

முகத்திரண்டு கருவண்டு

என்னை கிறங்கடிக்க வைக்கும்

மூக்குத்தி மின்னொளியை

மழுங்கடிக்கச் செய்யும்

 

பேனாவை எடுத்து

சிந்தனைக் குதிரையை

தட்டிக் கொடுத்து

புதுக் கவிதை ஒன்று

எழுத்தில் வடிப்பேன்

பூவை அணைத்து

உயிர்க் கவிதை ஒன்று

மண்ணில் படைப்பேன்.

________________________________

* செருமுனை - போர்க்களம்

Thursday, 17 May 2007

இறைவனுக்கு எச்சரிக்கை

சமாதான தேவதை - நீ

சமர் கண்டு சோர்வதா?

அவமான அர்ச்சனை - நீ

அருகிராமல் எங்கெங்கோ போவதே!

 

சுகமான வாழ்வது

சுடராமல் அணைவதா?

 

சாவின் கரத்தில் உயிர்

சடுகுடு விளையாடி மாய்வதா?

 

நிழலாக எம் கழல் தனை

தொடர்கின்ற

சுற்றமது சுவர்க்கமதை

அணைப்பதா?

 

இமையாக நின்றெமை

சுமையாக நினையாத

அன்னை, அப்பனை அடுத்தடுத்து

அவலமாய் இணைப்பதா?

 

தமையனாய் நின்றவர்

தம்பியாய் வந்தவர்

தமக்கையாய் அணைத்தவர்

தங்கையாய்ச் சிரித்தவர்

நீட்டி முழங்கிப் போக அனுமன்

வாலாய் நீள்பவர்

கவலை மறந்து,

சிரித்து மகிழ்ந்து

இந்நாட்டு மன்னராய் நின்றவர்

அன்பென்னும் ஆகுதியில்

உயிர்தனைச் சலவை செய்து

அவலம் எதுவென மறந்தவர்

பட்... பட்... எனப் பறக்கும்

வேட்டுக்கு

சட்... சட்... என மடிவோம்

எனும் உண்மை

மறந்தவர்

 

ஐயகோ...

என்னென்று சொல்வேன்

அவர் பட்ட அவலம்?

மண்மீது வரிசையாய்

கிடந்ததே அவர்தம் சடலம்

இதுதானோ இறைவன்

எழுதும் சாவுப் படலம்?

இறைவா...

என் கையில்

நீ கிடைத்தால்

நிச்சயம் மரணம்!

Monday, 14 May 2007

என் தேவி

விரிகின்ற எந்தன் நினைவதிலே
திரிகின்ற ஒர் உரு உன்னையன்றி வேறெது
குவிகின்ற உந்தன் இதழ்தனை
இமைக்காமல் நோக்குங்கால்
அவிகின்றதம்மா எந்தன் மனது!

நடக்கின்ற நிலாவோ நீ?
அட.... ட... ட...
சுவைக்கின்ற பலாவோ நீ?
தவிக்கின்ற மனமெங்கும் நீ
தவிக்க விடலாமோ என்னை இனி?

பிறக்கின்ற கவிக்குள்ளே உள்ள கரு நீ
துடிக்கின்ற இதயத் துடிப்பினிலுள்ள சுதி நீ
கடக்கின்ற ஒவ்வெரு நாழியும்
நான் நினைக்கின்ற பாவையம்மா நீ
மொத்தத்தில் மன்மதன் மனதில்
நின்று விளையாடும்
ரதிக்கு ஒப்பான மதி நீ!

கண்மணிக்குள் சிக்கிய பெண்புறா

கவிதை பிறந்த கதை :

மாமன் மகள் பூப்பெய்திய செய்தி கேட்டு மலைப்பதியிலே (மலையகத்திலே) இருக்கும் மச்சாளை நினைந்து பிறந்த கவிதை ((கற்பனைக்)கவிதையை ரசிக்க உதவும் என்பதால் சொன்னேன்)

மலைப் பதியிலே என் மனங்கவர்ந்த
மங்கை மலந்திருக்கின்றாள்
மணிப் புறாவே உன்ணணிப் பறவை - என்
மனங்கவர் இளமை
உற்றவள் பால் தூது ஏகாயோ?
மல்லிகை சூடி மனதில் என்னை
நிறுத்தக் கூறாயோ?

சந்தனத்தின் சாயல் எடுத்து
வெண்மதியில் முகமெடுத்து
ஆனந்தத்தின் சுளையெடுத்து
அழகூற இலங்கும் மங்கையவள் என்
அண்டை வந்து இன்ப மூட்ட வேண்டும்
காதல் கொண்ட ஏழை நெஞ்சம்
பாவையவள் படுத்துறங்கும்
மஞ்சமாக வேண்டும்

காதல் கொண்டு அர்ச்சிக்க
கன்னியவள் கருத்தொருமிக்க வேண்டும்
காளை எந்தன் நெஞ்சம்
களிப்பில் ஊர்ந்து
இன்பம் காணவேண்டும்

மணிப்புறாவே என் எண்ணப்புறா
அப்பெண்புறா பால் செல்லத் துடிக்கிறது
வழி ஒன்று கண்டு கூறமாட்டாயா?

Tuesday, 8 May 2007

பொய்யில் நிஜங்கள்

கண்ணுக்குள் ஓர் மயக்கம் - உன்னைக்

கண்டதாலோ?

நெஞ்சுக்குள் இன்ப அலைகள் - உன்

வருகை தானோ?

காதினுள் தேன் பாய்கின்றது - உன்

கிளிப் பேச்சுத் தானோ?

 

காலில் நடை தளர்கிறது - நீ

அருகில் இருப்பதாலோ?

உடம்பில் 'சாக்' அடிக்கிறதே - உன்

கரம் மேனியில் படுவதாலோ?

எங்கே நிஜத்தில் மேற்சொன்னதைச்

செய் பார்ப்போம்?

Related Posts Plugin for WordPress, Blogger...
பின்னூட்டல்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்